இந்த பயணம் எப்படி இருக்கிறது?…

Posted on : 28-Mar-2025

எங்கேயாவது புனித பயணம் சென்று திரும்பினால்! எங்கேயாவது இன்பச் சுற்றுலா சென்று வந்தால்! எங்கேயாவது ஒரு வேலைக்காகச் சென்று வந்தால் அல்லது தற்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி சென்று வந்தார்களே அதேபோல் நாமும் சென்று வந்தால் நம்மை வரவேற்பவர்கள் கேட்கும் முதல் கேள்வி இந்தப் பயணம் எப்படி இருந்தது? என்பது தான்.

பயணம் என்பது ஒரு நோக்கத்திற்காக, அல்லது பயணத்தை ஒரு நோக்கத்திற்காக அமைத்துக் கொள்வோம். நமது பயணம் பயனற்றதாக இருந்தால் அது நாம் பாடையில் போகிற கடைசிப் பயணமாகத்தான் இருக்க வேண்டும்.

பயணம் என்றால் நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கடந்து செல்வது. அல்லது நடந்தும் செல்லலாம், வாகனத்திலும் கடந்து போகலாம். சில பயணங்கள் பசியைப் போக்க, சில பயணங்கள் அறிவைப் பெருக்க, சில பயணங்கள் ஆன்மீகத்தைத்தேட, சில பயணங்கள் அனுபவத்தைக் கொடுக்க, சில பயணங்கள் உறவுகளைப் புதுப்பிக்க, சில பயணங்கள் பிறரின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள, இப்படி நமது வாழ்க்கையில் பல்வேறு பயணங்கள் உண்டு.

அதே போல் நமது வாழ்க்கை முழுவதுமே ஒரு பயணம் ஆகும். நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகிறோம்? நமது பயணங்கள் எவ்வளவு காலம்? நமது பயணம் எப்போது முடியப் போகிறது? யாருக்குத் தெரியும்? ஆனால் இது ஒரு பயணம்.

இந்தப் பயணத்தில் இதுவரை நீங்கள் கண்டது என்ன? இனி காணப்போவது என்ன? இதுவரை நீங்கள் கற்றது என்ன? பெற்றது என்ன? யாரால்? எங்கு? எதற்காக? எனப் பல கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்.

நமது வாழ்க்கை நமக்கு என்னப் பாடம் சொல்கிறது? நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கை நமக்கு என்ன சொல்கிறது? நம்மைச் சுற்றி யாருக்கும் தெரியாமல் எவருக்கும் பயன்படாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் எதற்கு இந்தப் பூமிக்கு வந்தார்கள்? என்று அவர்களைப் பார்த்து நமக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

நம்மையும் இப்படி பலர் கேட்கலாமே? நம்மில் சிலபேர் நமது குடும்பம்! பிறகு நமக்கென்று ஒரு குடும்பம்! இது தவிர எதற்கும் பயன்படாமல் எத்தனையோ பேர் வந்து சென்றிருக்கிறார்களே இதனால் யாருக்கு என்ன இலாபம்?

சிலருடைய பயணங்கள் பேருந்துப் பயணம் போல எங்கிருந்தோ வந்து ஏறுவார்கள். அவர்கள் விரும்பும் இடம் வந்ததும் இறங்கி விடுவார்கள். அவர்கள் நோக்கம் நிறைவேற அவர்கள் பேருந்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். சிலருடைய பயணங்கள் சாலையோரம் நடந்து செல்வார்கள் அப்போது பார்க்கும் பொருட்களை வாங்கிச் செல்வதுபோல கையில் காசு இருந்தால் அங்கு கிடைப்பதை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே செல்வார்கள் இருந்தால் பயன்படுத்திக் கொள்வார்கள் இல்லையென்றால் இதுதான் என் விதி என்று எண்ணிக் கொள்வார்கள். சிலருடைய பயணங்கள் பெரிய மாலில் பொருள் வாங்குவதுபோல காசு நிறைய வைத்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவையானது தேவைப்படும் என நினைத்து எல்லாம் அவர்களுக்காகவே மட்டும் வாங்கிச் சென்று பாதியைப் பயன்படுத்தி பாதியை குப்பையில் போடுவார்கள்.

இதே போல்தான் இந்தப் பிரபஞ்சத்தில் பணக்காரர்கள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தமக்குத்தான் கொடுக்கப்பட்டது போல அத்தனையும் வளைத்துப்போட்டு தொழில் தொடங்கி பணம் சேமித்து யாருக்கும் பயன்படாமல் பாழாய்ப் போவார்கள். சிலர் பெரிய உணவகத்திற்குச் சென்று நிறைய உணவு தனக்குக் கொண்டுவரச் சொல்லி தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் தெருவில் கொட்டுவார்கள். அதேபோல்தான் இங்கு அனுபவிக்க வேண்டும் என்று வந்து தமக்கு பெரிய வீடுகள்கட்டி பூட்டிப்போட்டு இருப்பார்கள். நிறைய கார்கள் வாங்கி யாருக்கும் பயன்படாமல் வீட்டில் நிறுத்தி வைத்திருப்பார்கள் A/Cயால் ஓசோன் படலத்தைத் துளைப்பார்கள். வாகனங்களால் காற்றை மாசுபடுத்துவார்கள். தன்னைக் காத்துக் கொள்ள அடுத்தவர்களை அழித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களால் இந்தப் பூமி புதைக்குழிக்குள் போய்க்கொண்டிருக்கிறது.

சிலருடைய பயணங்கள் அனாதை இல்லங்களுக்குச் செல்வதுபோல தன் வாழ்வே பிறரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகத்தான் என்பதனை உணர்ந்தவர். ஆகவே பிறரைத் தேடிச் சென்று உதவி செய்வார்கள். தனக்குக் கிடைத்த ஒன்று பிறரிடம் சென்று சேரும் வரைப் பயணிப்பார்கள். அவர்களால் நமக்கு என்ன பயன்? என்று கடுகளவும் யோசிக்கமாட்டார்கள். அடுத்தவர்கள் அன்பு கிடைத்தால் போதும் அதற்காக அகிலத்தையே கொடுப்போம் என்று உழைப்பார்கள். இவர்கள் வாழ்நாளில் பணக்காரர்களாக ஆகமாட்டார்கள் நல்ல குணக்காரர்களாக இருப்பார்கள்.

சிலருடைய பயணங்கள் கல்வி நிறுவனங்கள் போல தேடி வந்து ஒரு சமூகத்தை உயர்த்தப் பாடுபடுவார்கள். இவர்களால்தான் இந்த சமூகம் முன்னேறும். தன் வளர்ச்சியைவிட தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்திவிட வேண்டும் என நினைக்கும் உத்தமர்கள். இவர்களால் மட்டுமே இந்தப் பூமி கடும் சிதைவுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்கிறது.

இப்போது எண்ணிப்பாருங்கள். உங்கள் பயணம் எப்படி இருக்கிறது? இன்னும் உங்கள் பயணம் முடியவில்லை. அதற்குமுன் ஒருமுறை ஆய்வு செய்து பாருங்கள்? எதற்காக நீங்கள் இந்தப் பூமிக்கு வந்தீர்கள் எண்ணிப் பார்த்தீர்களா? இந்தப் பூமிக்காக! பூமியில் வாழும் உயிர்களுக்காக! என்ன செய்தீர்கள்? பட்டியலிடுங்கள். பலர் மறைந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே! அவர்கள் உங்களுக்கு என்ன பாடம் கற்றுத் தந்திருக்கிறார்கள்?

உங்கள் பயணத்தில் சுயநலம் சுற்றி இருக்கிறதா? பொதுநலம் போர்த்தப் பட்டிருக்கிறதா? உங்களோடு உறவாடுகிறவர்கள் உங்கள் உறவுக்காரர்கள் மட்டும்தானா? எதிரிகள் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது உங்களால் உருவாக்கப்பட்டார்களா? மன்னிக்கும் மனப்பக்குவம் உங்கள் மனதில் இருக்கிறதா? தண்டிக்கும் தான்தோன்றித்தனம் தலைதூக்கி நிற்கிறதா? உங்கள் உழைப்பில் வரும் செல்வங்கள் எல்லாம் உங்கள் குடும்பத்திற்கு மட்டும்தானா? இல்லை ஒன்றுமே இல்லாதவர்களுக்கும் கிட்டுமா?

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை பேர் வாழ்ந்து இருக்கிறார்கள்? எத்தனை பேர் உயர்ந்து இருக்கிறார்கள்? எத்தனைபேர் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்? எத்தனைபேரை மன்னித்து ஏற்று இருக்கிறீர்கள்? இதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். உங்களோடு இருந்து கொண்டே உங்களை அழித்து உயரத் துடிக்கும் மனிதர்களோடு உடன் பயணிக்க முடிகிறதா? நல்லவன் போல் உங்களிடம் வேடமிட்டு நச்சுப் பாம்பாய் வார்த்தையில் கொட்டித் தீர்க்கும் மனிதர்களோடு நட்பாக இருக்க முடிகிறதா?

சுற்றிப் பார்க்காதீர்கள். இது வெட்டிக் கூட்டம். அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த பூமிக்கு வந்தார்களோ நமக்குத் தெரியாது! நீங்கள் புனிதப் பயணத்திற்கு வந்துள்ளீர்கள். நல்லதை மட்டுமே செய்யுங்கள் கடவுளைத் தேட வேண்டாம். உங்கள் செயலால் கடவுளாக மற்றவர்கள் உங்களைத் தேடட்டும். எல்லோருக்கும் உதவி செய்ய முடியாவிட்டாலும் இயன்றவரை உதவி செய்ய வேண்டும். நாளை நமக்கு வேண்டும் என்று எதையும் சேமிக்காமல் நாளை நமதாக்குவோம். இந்தப் பூமி நம்மை சேமித்துக் கொள்ளும். உடலை மட்டும் மண்ணுக்கு விட்டுச் செல்வோம். புகழை இந்தப் பூமியில் நாம் நட்டுச் செல்வோம். ஆல்போல் தளைத்து விழுதுகளாய் விரிந்து பலரும் இளைப்பாறும் நிழலாக நிற்கும்படி நமது வாழ்வை அமைப்போம். வாழ்வோம் செல்வோம்.

“பேருக்கு வாழ்வது
வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதே
வாழ்க்கையாகும்”