13

Aug

2021

ஒரு பிள்ளை மனதின்… வெள்ளை அறிக்கை…

வெள்ளை அறிக்கை இன்று நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு வார்த்தை. நம்மைப் பற்றிய ஒரு உண்மை நிலவரத்தை உலகும் நாமும் உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு. ஆனால் ஒன்று மட்டும் விளங்கிவிட்டது! நாம் நஷ்டம் அடைந்திருக்கிறோம். கஷ்டத்தில் தவிக்கிறோம். கடனில் மூழ்கிக் கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் இது யாரால் வந்தது? எப்படி வந்தது? இதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம்? சரிசெய்ய முடியுமா? எனப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன!

இப்போது எனக்கும் ஒரு கேள்வி எழுகின்றது. ஏன் நாமும் ஒரு வெள்ளை அறிக்கை தயாரித்தால் என்ன? அதுவும் நம்மைப் பற்றியே நாம் ஏன் தயாரிக்கக்கூடாது? இதில் எத்தனை பேருக்குத் தன்னைப் பற்றித் தயாரிக்கும் தைரியம் இருக்கிறது? சொல்லுங்கள் பார்ப்போம்!

நாம் ஒவ்வொருவருக்கும் இருட்டான பக்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்றுதான் நாம் வெளிவேடம் போட்டுத் திரிகிறோம். கருப்பு இதயத்தைக் கொண்டவன் வெள்ளை உடையில் வெளியில் திரிகிறான். தண்ணீ(போதை) அடித்தவன் அதனை மறைக்க வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொண்டு திரிகிறான். சாமி அவதாரம் எனக் கூறிக்கொண்டு சல்லாபச் சேட்டைகளில் சங்கமிக்கிறான். நெற்றியில் மத அடையாளத்தோடு திரிபவன் வாயில் கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறான். இதனைத்தான் பெரியோர்கள் சொல்வார்கள் “படிப்பது பாரதம் இடிப்பது பெருமாள் கோவில்”.

இப்படித்தானே நமது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கே வேசம் கலைந்துவிடுமோ என்றுதான் நாம் ஒவ்வொரு நாளும் நடித்து கொண்டு இருக்கிறோம். கணவன், மனைவி, குழந்தைகள், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஆள்பவர்கள் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நடித்து நாம் நவரச நடிப்பை அல்லவா! நாள்தோறும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். உண்மைதானே!

ஒரு அறிஞனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் நீங்கள் யாரைச் சந்திக்கப்பயப்படுவீர்கள்? அவர் உடனே என்னைச் சந்திக்கத்தான் நான் அதிகமாகப் பயப்படுவேன் என்றார். காரணம் நமக்குள் பல விலங்குகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. அதனை வெளியே நடமாட விடாமல் நாம் அடக்கி வைத்திருக்கிறோம். காரணம் நமது படிப்பு, அந்தஸ்து, கௌரவம் காரணமாக நல்லவர்களாகவே நடிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

நாம் ஆசிரியர், டாக்டர், சாமியார், மேனஜர், தலைவர் எனப்பொறுப்பு வகிக்கும் போது பலர் நம்மை வணங்குவார்கள். காலில் விழுவார்கள், நம்மை ஆசிர்வாதம் பண்ணச் சொல்லுவார்கள். அப்போதெல்லாம் நமக்குள் திடிரென்று ஒரு பயம் வரும் காரணம் நமக்கு மட்டுமே தெரிந்த ஒரு அயோக்கியன் நம் மனதிற்குள் எட்டிப் பார்ப்பான். அவனை யாருக்கும் தெரியாமல் மனதிற்குள் பூட்டி வைக்கப் போராடிக்கொண்டிருப்போம்.

தனிமையில், இருட்டில், யாரும் இல்லாத நேரத்தில் அல்லது அதே தவறைச் செய்கிறவர்களோடு இருக்கும் போது அவன்தானே வெளிவருவான். குடிப்பான், புகைப்பான், நிர்வாணங்களை இரசிப்பான், திருடுவான், தேவையில்லாமல் பொய் சொல்வான், பிறர் பெயரைக் கெடுப்பான். தற்பெருமை பேசித் திரிவான், ஏமாற்றுவான். எல்லவாற்றையும் திருட்டுத் தனமாகவும் இருட்டு பகுதிக்குள் திருட்டுத்தனம் செய்துவிட்டு வெளியில் வரும்போது இந்த பூனையும் பால் குடிக்குமா? என மகானாகத் தன்னைக் காட்டிக் கொள்வான்.

இவற்றில் எவனாவது நமக்குள்ளும் பதுங்கி இருக்கிறானா? பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதாவது எட்டிப் பார்க்கிறானா? ஆய்வு செய்து கொள்ளுங்கள் எப்போது அவன் வெளிப்படுகிறான் என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதனைத்தான் ஒரு கவிஞன் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்பான். கடவுள் வளர்த்து மிருகம் கொன்று நல்ல மனிதனாக வாழ வேண்டுமென்றால் நம்மைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்கவேண்டும். தன்னைப் பற்றித் தெரிந்தவனே தரணியை ஆள முடியும். தன்னைப் பற்றிப் புரிந்தவனே அடுத்தவர்களை அன்பு செய்ய முடியும்.

தன்னைப் பற்றித் தெரிந்து அறிந்து வாழ்ந்தவன் அடுத்தவர்கள் குறையை காணமாட்டான். அதனால்தான் இயேசு கூறுவார் “உன் கண்ணிலுள்ள துரும்பைப் பாராது அடுத்தவர் கண்ணில் உள்ள விட்டதைப் பார்ப்பதேன்”.

குழந்தைகளைப் பாருங்கள் அது கள்ளம் கபடம் அற்றதாக இருக்கும். குழந்தைகளாய் நாம் மாறினால்தான் உண்மையை நாம் அப்படியே பேசுவோம், எழுதுவோம். பிறை இல்லாத நிலவும் இல்லை குறை இல்லாத மனிதனுமில்லை என்பது புரியும். தன் குறையை தானே ஏற்றுக் கொண்டால் பிறரையும் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ள முடியும். பிறரது இருட்டுப் பக்கத்திற்கு வெளிச்சம் போட நாம் யார்? தன்குறையை மறைத்து பிறர் குறையைப் பேசித் திரிபவன் எதிர் வீட்டுக் குளியலறையை எட்டிப் பார்க்கும் ஈனப் பிறவிக்குச் சமம். ஆகவே நமக்கு நாமே வெள்ளை அறிக்கை தயார் செய்வோம். அனைவரையும் அவரவர் நிலையில் ஏற்றுக் கொள்வோம். நம் பலத்தைக் கண்டு எதிர்ப்பவன் எதிரி, நம் பலவீனத்தை கொண்டு வீழ்த்துபவன் துரோகி, துரோகிகளை தூர வைத்துவிட்டு அனைவரிடமும் அன்போடு பழகுவோம். வெள்ளை உள்ளம் அனைவரையும் கொள்ளை கொள்ளும் கொள்ளை கொள்வோம் அதற்கு…..

“உன்னை நீ அறிவாய்”

-சாக்ரடீஸ்

ARCHIVES