07
Dec
2024
சமத்துவம் காண வேண்டும். பெண்ணியம் பேண வேண்டும் என்பதனைப் பேசு பொருளாக்கி களத்தில் இறங்கி சில வெற்றிகளைப் பெற்றதாக இப்போது ஒரளவு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். ஆனால் எதில் வெற்றி பெற்று இருக்கிறோம்? என்ன சாதித்து இருக்கிறோம்? உண்மையிலே பெண்கள் சமத்துவத்தை அனுபவிக்கிறார்களா? என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். இதனை நீங்களே ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
பெண்களின் உடைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்! இது நிறைவளிக்கிறதா? அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்! இதுதான் பெண்கள் விரும்பிய சமத்துவமா? பல்வேறு பணித்தளங்களில் தன்னோடு பணிபுரிந்த நண்பர்களை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் இதைத்தான் பெண்களின் விடுதலையா?, விருப்பமா? ஆனால் ஐ.நா சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்கள் சமத்துவம் அடைய இன்னும் 284 ஆண்டுகள் ஆகும் என்கிறார்களே! அமெரிக்காவே இப்போது ஒரு பெண்ணை அதிபராக ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லையே?
சின்ன வயதில் இருந்தே பெண்களை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. நமக்கு விபரம் தெரியுமுன்னே தன் வயிற்றில் சுமந்து நின்றவள் பெண், அம்மா இல்லாதபோது அம்மாவாக நிற்பவள் அக்கா. பிறகு எதற்கு என்னிடம் என் அம்மாவும், அக்காவும் சமத்துவம் கேட்க வேண்டும்? என்று எண்ணினால் அவர்கள் இருவரையும் தவிர மற்ற அனைவரையும் நாம் அடிமையாக நினைப்பதால்தான்! நாம் ஆண்கள்! நாம் ஆளப்பிறந்தவர்கள் பெண்கள் நமக்காக நம்மோடு வாழப் பிறந்தவர்கள் என்ற ஆணாதிக்கச் சிந்தனையால்தான்; பெண்ணியம் சமுதாயத்தில் சங்கடப்படுகிறது. அதனைச் சரிசெய்ய வேண்டுமேயொழிய, உடைகளோ, உணவு முறையோ, வேலை வாய்ப்போ நமக்கு வேண்டிய விடுதலையைக் கொடுத்துவிடாது.
என்னைப் பொறுத்தமட்டில் பெண்கள் வேலைக்குப் போவதால் நாம் அடைந்த இன்பங்களைவிட இழந்த சொர்க்கங்களே அதிகம் என் தாய் படித்தவர். நிச்சயம் முயற்சி செய்தால் அரசுவேலைக்குப் போகலாம். ஆனால் அவர்கள் அரசு வேலைக்குப் போகவில்லை. என் தந்தை ஆசிரியர். அதனால் என் தாய் அவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்து பள்ளிக்கு அனுப்புவார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கும், உறவுக்காரர்களுக்கும், உதவிசெய்பவர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் உணவு கொடுத்து மகிழ்ந்தார்கள் அதன்பிறகும், மீதம் இருக்கும் சாதம் யாசகம் கேட்டு வரும் பிச்சைக்காரர்கள், கோடாங்கிகள், சோதிடர்களுக்கும்; கொடுத்து மகிழ்வார்கள்.
இப்போது பெண்கள் வேலைக்குச் செல்வதால் தனக்குச் சமைப்பதையே பெரும்பாடாக நினைக்கிறார்கள். தனக்கும் தன் குடும்பத்திற்கும் அவசர கதியில் தயார் செய்து ஆங்காங்கு இருக்கிறது எடுத்துச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று விரைவாக வேலைக்கு ஓடும்போது….
பிச்சைக் காரர்களுக்கு எப்படி உணவு கிடைக்கும்? வேலைக்குச் செல்வதால் வீடு பூட்டிக் கிடக்கும் அதனால் யார் பிச்சை எடுக்க வருவார்கள்? இதனால் தர்மம் செத்து விட்டதா? தர்மம் செத்த பூமியை சுடுகாடு என்றுதானே சொல்ல வேண்டும். அம்மா அருகில் இருந்து உணவு ஊட்ட வேண்டும். அந்த வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு அம்மா மீது எப்படி பாசம் வரும்? பாசம் செத்து விட்டதா? ஆண்கள் வேலைக்குப் போகும் போது பெண்கள் வீட்டில் இருப்பார்கள் இதனால் விருந்தினர்கள் வருவார்கள். இப்போது வீடு பூட்டிக் கிடக்கும்போது விருந்தினர்களுக்கு அங்கு என்ன வேலை? உறவு செத்து வி;ட்டதா? யோசித்துப் பாருங்கள் பெண்கள் வேலைக்குச் செல்வதனால் தர்மம் செத்துவிட்டது! பாசம் செத்துவிட்டது! உறவு கெட்டுவிட்டது.
ஆண்கள் வேலைக்குச் சென்ற பிறகு பெண்கள் வீட்டைக் கவனிப்பதுடன் மாமன், மாமியார், பெற்றோர்கள் என அனைவரையும் கவனித்துக் கொள்வார்கள். இப்போது அவர்கள் வேலைக்குச் செல்வதனால் முதியோர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள், முதியோர் இல்லம் பெருகிவிட்டது கூட்டுக் குடும்பம் சிதைந்து விட்டது. அனாதையாகச் செத்துக் கிடக்கும் அவல நிலையைக் காண்கிறோம். அதுவும் நகரங்களில் வேலை கிடைத்து தனிக் குடித்தனம் சென்ற பிறகு கிராமங்களில் வீட்டுக்கு இரண்டு பெரிசுகள் காவலாளியாக இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
குடும்பத்தில் ஒன்று இரண்டு பிள்ளைகள் அவர்களும் படித்து முடித்து வெளியூர்களிலோ, வெளிநாடுகளிலோ வேலைக்குச் சென்று விடுகிறார்கள். அப்படியென்றால் பெற்றோர்கள் தனிமைதானே! பிள்ளைகள் இருக்கும்போது வேலைக்காக அவர்களை ஆயாக்களிடம் கொடுத்தார்கள். இப்போது பிள்ளைகள் வேலைக்காக உங்களை அனாதையாக்கிவிட்டார்கள். பிள்ளையே பெறாதவர்கள் மட்டும் மலடிகள் இல்லை. பிள்ளை இருந்தும் தனியாய் இருப்பவர்களும் மலடர்கள் தான்! இப்போது சொல்லுங்கள் இந்த வேலை நமக்கு என்ன கொடுத்திருக்கிறது?
பெண்கள் வேலைக்குப் போவதால் ஆண்களுக்குப் பொறுப்புக் குறைந்துவிடும் பரவாயில்லை. பொறுப்பற்ற தன்மையல்லவா! அது பொறுப்பற்ற தன்மையை வளர்த்;து வருகிறது. பெண்கள் வேலைக்குப் போவதால் ஆண்கள் இன்று தன்னுடைய பொறுப்புணர்ந்து வேலை செய்வதில்லை. குடித்துவிட்டு குடும்பத்தை கெடுக்கிற ஆண்கள் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள்;. பெண்கள் உழைத்து வீட்டைக் கவனித்துக் கொள்வதனால் ஆண்கள் இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள். பெண்கள் தொழிலதிபராக வளர வளர ஆண்கள் தெருவிற்கு வந்து விட்டார்கள்.
பெண்கள் வேலைக்குச் செல்வதனால் பிள்ளை பெற்றுக் கொள்வதுகூட பெரும் சுமைகள் ஆகிவிட்டது. பெண்மையின் உண்மைகள் இந்த சமுதாயத்திற்கு விளங்காமல் போய்விட்டது. தாய்மை போய்விட்டது. தாம்பத்யம் தொலைந்து விட்டது. உழைத்துக் களைத்து உயிரற்ற நிலையில் வீட்டுக்கு வரும்போது எப்படி ஒரு தாயாக! தாரமாக! அவளால் வாழ முடியும்? வேலை என்ற ஒரே காரணத்திற்காக திருமணம் முடித்தும் ஆளுக்கு ஒரு இடத்தில் துறவியாக வாழ்கிறோம். பிள்ளைகளுடன் வாழமுடியாத மலடாக வாழ்கிறோம் இது தேவையா நமக்கு?
பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய அடிப்படை வேலைகளை யார் செய்வது? ஆண்கள் உணர்ந்திருக்கிறார்களா! பெண்களின் பாசம், அரவணைப்பு கரிசனை, அக்கறை, உடன் இருப்பு, உற்சாகப் படுத்துதல், ஆறுதல் சொல்லுதல், புன்சிரிப்பு, உணவுப் பரிமாற்றம் இதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாதே! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நமக்கு பணத்துக்காக நம் வீட்டுப் பெண்களின் அத்தனை அன்பும், அக்கறையும், அரவணைப்பும், அருகிருப்பும் ஏதோ ஒரு நிறுவனம் அல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நம்மிடம் இருந்து அவர்களை பணித்தளங்கள் திருடிவிட்டதைக் கூட உணராத பரிதாபத்தில் வாழ்கிறோம்.
அவர்கள் அன்புக்கு ஏங்குகிறோம் பணிச்சுமையால் அவர்களிடமிருந்து கிடைக்காதபோது சந்தேகப்படுகிறோம். குடும்பத்தைப் பழிக்கிறோம். அவமானப்படுகிறோம் அதற்கு ஒரே வழி சமத்துவம். நான் இதை செய்கிறேன் நீ எனக்கு உடனிரு என்று சொல்லுங்கள். உடனிரு என்று சொன்னாலே அவர்கள் உண்மையாய் இருப்பார்கள். சொர்க்கம் என்பது அழகான மனைவி, அன்பான குழந்தைகள் உடனிருக்கும் பெற்றோர்கள் உதவி செய்யும் சொந்தங்கள் இதுபோதும். கூழைக் குடித்தாலும் குடிசையில் இருந்தாலும் குதுகலமாய் கொண்டாட்டமாய் இருப்போம்!
“தாயில்லாமல் வரமுடியாது
தாயில்லாமல் வளரவும் முடியாது”