01
Jul
2024
– மனசு வலிக்கிறது…
மாஞ்சோலைப் பாதை இனி மூடப்படுகிறது. விரைவில் கடைசியாக ஒருமுறை மாஞ்சோலையைப் பார்த்து விடுவோம் என நண்பர்கள் அழைக்க எதுவுமே அவர்கள் சொன்னது புரியாமல் அவர்களோடு பயணமானேன்.
இதற்கு முன்பு அங்கு சென்றபோது இருந்த சூழ்நிலையைவிட இப்போது முற்றிலும் வேறுபட்டு இருந்தது. இயற்கை கொஞ்சிய இடங்களில் எல்லாம் ஏதோ இருள் கவ்வியிருந்தது. எப்போதும் தேநீர் வாங்கிக் குடிக்கின்ற கடைகள் கூட இப்போது இல்லாமல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் ஏதோ சுடுகாட்டில் உலவுவது போல உலவிக் கொண்டிருந்தார்கள். பல பகுதிகள் மக்கள் நடமாட்டமில்லாத மயான பூமியாகக் காட்சியளிக்கிறது. பேசிச் சிரித்துக் கொண்டு திரிந்த ஒரு பாடகன் திடிரென்று ஊமையானால்; ஏற்படும் வலியைப் போல அங்கு ஏதோ ஒரு வலி வலம் வந்து கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தையை ஆற்றில் இழந்து தவிக்கும் ஒரு அபலைப் பெண்ணைப்போல அந்த இடத்தில் ஒரு சோகம் மனதைத் தின்று கொண்டிருந்தது.
சற்று அகன்று சரிவான பகுதிக்கு வந்தேன் ஒரு சிறிய மண்டபம் அடைபட்ட அறைகள் வெளியில் புல்வெளிகள் அந்தப் புல்லில் நீர்த்துளிகள். பனி இல்லாத இந்த நேரத்தில் எப்படி நீர்த்துளிகள்? திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் நேற்று இங்கு கூடியிருந்தவர்கள் சிந்திய கண்ணீர் துளிகளில் எஞ்சி இருப்பது புல்லின் நுனியில் நிற்கிறது என்றார் விரக்தியாக…
எனக்கு ஏதோ ஒன்று புரிந்து புரியாதது போல் இருந்தது. வரும்போது சொன்னார்களே. இனிமேல் பார்க்க முடியாது ஆகவே கடைசியாகப் பார்த்துக் கொள்வோம் என்பதன் பொருள் என்ன? இந்த மக்கள் ஏன் ஒன்று கூடி ஒரே இடத்தில் நின்று அழுதார்கள்? என்ற ஆவலில் அந்த முதியவரிடம் சென்று கேட்டேன். அவரோ ஐயா! என்னவென்று தெரியவில்லை. இனிமேல் உங்களுக்கு வேலை கிடையாது போய்விடுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
என்ன செய்வது? எங்கு செல்வது? என்று தெரியாமல் மக்கள் தடுமாறுகிறார்கள். பாம்பே பர்மா டிரேடர்ஸ் கம்பெனி 1928 ஆம் ஆண்டு இந்த இடத்தில் டி எஸ்டேட் தொழிலைத் தொடங்கியது. அதற்கு என்று பல்வேறு இடங்களிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்தது. அவர்களும் பரம்பரை பரம்பரையாக விசுவாசத்தோடு வேலை செய்து வந்தார்கள். அரசோடு இந்தக் கம்பெனி ஒப்பந்தம் வருகிற 2028 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. அதனால் அரசானது படிப்படியாகப் பணியாளர்களை வெளியேற்றுகிறது.
பழகிய இடங்கள் பழகிய மனிதர்கள் வாழ்வு ஆதாரமாக இருந்த வாழ்விடங்கள் இயற்கைச் சூழல் இதயம் ரசிக்கும் பறவைகள், அவ்வப்போது வந்து நாங்களும் இருக்கிறோம் என்று விசாரிக்கும் காட்டு விலங்குகள் இத்தனை வளங்களையும் ஒரே நாளில் தருமன் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து காட்டுக்குச் சென்றதுபோல் சூதாடாமல், அரசை எதிர்த்து வாதாடாமல் வாதாடவும் முடியாமல் உரிமையை சொல்லவும் முடியாமல் வாய்விட்டு அழவும் முடியாமல் பொங்கிய கண்ணீரோடு புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
வாழும் இடத்தைவிட்டு வாழா வெட்டியாகி! புறப்படும் இடம் தெரிந்தும் போக்கிடம் இல்லாமல் தவித்தும் சொந்த நாட்டில் அனாதையாக்கப்பட்டவர்களின் சோக கதை தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறோமே! இதுதான் கலிகாலமா?
உடன் வாழ்ந்தவர்கள் இறந்து இறுதிச் சடங்கு செய்த இடங்களை எப்படி எடுத்துக் கொண்டு போவது? முன்னோர்களை நினைத்து வழிபட இனி ஏன் வழியில்லாமல் போனது? பசியாறத் துடித்தவனிடம் பிச்சைப் பொருளைப் புடுங்கிவிட்டால் அவன் எப்படி அரை வயிறுக் கஞ்சி குடிப்பது? இங்கு பெருமைக்குப் பாடுபடுகிறவர்கள் தானே அதிகம். வறுமையைப் போக்க இங்கு யார் துணிகிறார்கள்? துடிக்கிறார்கள்? யாருமே இல்லையே?
இயற்கை என்பது எல்லோருக்கும் பொது. இதில் யாரோ ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டு மற்றவர்களை அங்கு அடிமையாக்கி தான் வயிறு வளர்ப்பது எவ்வளவு கொடூரம்! அங்குள்ள தேயிலைத் தோட்டத்தை உருவாக்கியது யார்? அங்குள்ள பாக்கு, தேக்கு போன்ற மரங்களை வளர்த்தெடுத்தது யார்? காணும் இடமெல்லாம் கண்ணைக் கவரும் பசுமையைப் பராமரித்தது யார்? இருட்டு நேரத்தில் திருட்டுத்தனமாய் மரங்களை வெட்ட வந்தவர்களை தடுத்து நிறுத்தியது யார்?
இன்று இவர்களை வெளியேற்றும்போது தடுத்து நிறுத்த யாருமே இல்லையே! இவர்கள் இனி எங்கேதான் போவார்கள்? யாராவது என்றாவது எண்ணிப் பார்த்தது உண்டா? யாராவது அவர்கள் வாழ்க்கைக்கு உதவ முன் வந்திருக்கிறீர்களா? எவனோ ஒருவன் எனக்கு முன்னால் இடம்பெயர்ந்து போகிறான் எனக்கென்ன? என்பதுதானே நமது மனநிலை.!
ஒரு குடும்பமாய் சேர்ந்து வாழ்ந்தவர்கள் இப்போது சிதறுண்ட தேங்காயாய் சிதைந்து சின்னாபின்னமாகப் போகிறார்கள்? மீண்டும் சந்திப்பார்களா? தெரியாது. இத்துயரத்திலிருந்து மீண்டு வருவார்களா? தெரியாது? வலியவர்கள் அடிப்பதனால் வலி தெரியாமல் அழ வேண்டிய கட்டாயத்தில் கத்தாமல் கண்ணீர் வடிக்கிறார்கள்.
யாரோ ஒருவருக்கு நடப்பதால் எனக்கென்ன? என்று இதயத்தை இரும்பாக்கி எதையுமே கண்டுகொள்ளாமல் திரிவது தானே இயல்பு வாழ்க்கையாகிறது. ஏழைகளின் வலி இங்கு எவருக்கும் புரியவில்லை என்றாலும் இறைவனுக்குமா புரியவில்லை? கடவுளே நான் கண்மூடும் வரை காணக்கூடாது என நினைத்த காட்சிகள் தான் இங்கு நடந்திருக்கிறது. சட்டம் தன் கடமையை செய்கிறது என்பார்கள். உங்கள் சட்டம் எங்கள் வறுமையைப் போக்கவில்லையே! வயிற்றுப் பசியைத் தீர்க்கவில்லையே! அடிப்படை வசதியை அமைக்கவில்லையே! கல்வியைக் கொடுக்கவில்லையே! கவலையை நீக்கவில்லையே!
அரசு சொல்லி விட்டது அப்புறப்படுத்துங்கள் என்றால் நாங்கள் என்ன குப்பைகளா? அரசு சொல்லிவிட்டது வெளியேறுங்கள் என்றால் நாங்கள் என்ன மூட்டைப் பூச்சிகளா? கேட்க ஆளில்லை என்பதற்காக நாங்கள் ஊமைகள் ஆகிவிட்டோம். வசதிகள் இல்லை என்பதால் நாங்கள் அடிமைகள் ஆகிவிட்டோம். பாதி வழியிலேயே எங்கள் பயணத்தை முடித்து விட்டோம். ஆதரவற்றவர்கள், அனாதைகள் என எங்களை இனி அழைப்பார்கள். ஆனாலும் நாங்கள் இருந்தால்? உறவுக்காரர்களே! எங்கள் ஊர்க்காரர்களே உயிரோடு இருந்தால் உங்களை வந்து சேர்வோம். எங்களுக்கு யாரும் தெரியாததால் எங்களையும் யாருக்கும் தெரியவில்லை ஒன்றே ஒன்றைச் சொல்லுகிறேன். காட்டு விலங்குகள் எங்களுக்கு காவல் விலங்குகள் தான்! நாங்கள் கண்ட மோசமான விலங்குகள் மனிதனும் அவன் அதிகாரமும் தான்! என்று சொல்லி விட்டு நகர்ந்திருக்கிறார்கள். இப்போது எனக்கு அருகில் நீர் துளிகள். என்னை அறியாமலேயே நான் வடித்திருக்கிற கண்ணீர்.
“தனக்குரியதை
கேட்கத் தவறிவர்கள்
பேசுகிற ஊமைகள்”