02

Dec

2023

அகக்குருடர்கள்…

மாற்றம் ஒன்றே மாறாதது. மாறாமல் இருப்பதற்கு நான் மண்ணல்ல, மரமல்ல, மானிடம் என்பார்கள். சரி ஏமாற்றம் இங்கே யார் தந்தது? ஏமாற்றம் இருந்து கொண்டே தானே இருக்கிறது? நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதும் ஆசைகாட்டி மோசம் செய்வதும், நம்பிக்கையை விதைத்து நயவஞ்சகம் செய்வதும், தான் வாழப் பிறரைக் கெடுப்பதும், தன் வளர்ச்சிக்குப் பிறர் தடையாய் இருப்பார்கள் என அழிப்பதும் இன்று வாழ்க்கையின் வாடிக்கையாகிவிட்டது.

ஊடகங்களைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள் செய்திகளைக் கொஞ்சம் சிந்தையில் இருத்துங்கள். எங்கு பார்த்தாலும் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். தினசரிப் பத்திரிக்கைகளைக் கொஞ்சம் திறந்து பாருங்கள். எத்தனை எத்தனை ஏமாற்றங்கள்? எத்தனை எத்தனை தூண்டில்கள்?குட்டையை கலக்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள்! குளத்தில் மீன் பிடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்! பார்த்துக் கொண்டே இருந்தாலும் அடுத்தடுத்து மீன்கள் அகப்பட்டுக் கொண்டே இருப்பதன் அவசியம் என்ன? புழுவுக்கு ஆசைப்படும் மீன்கள் அனைத்தும் உணவுக்கு வந்துவிடுகிறது. பிறரை விழுங்கப் பிரியப்படுகிறவர்கள் அனைவரையும் பூமி விழுங்கி விடுகிறது.

விதவிதமான ஏமாற்றங்களால் பூமி விழுந்து கொண்டே இருக்கிறது. வேலை வாங்கி தருகிறேன்! இடம் வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றுகிறார்கள். வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன், வங்கி கடன் வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றுகிறார்கள். காதலைச் சொல்லி ஏமாற்றம்? கடவுளைச் சொல்லி ஏமாற்றம்! கடன் வாங்கி ஏமாற்றம், உயர் அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்றம், பரிசுப் பொருள் அனுப்புவதாக ஏமாற்றம், அலைபேசியில் திடிரென்று வருகின்ற செய்திகள் வழியாக ஏமாற்றம், பம்பர் பரிசு ஏமாற்றம், கவரிங் நகை ஏமாற்றம், போலிப் பத்திரம் ஏமாற்றம், இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ ஏமாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஏமாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள் இதனை யார் தடுப்பது?

நாம் இதற்கு ஒரு பெயர் வைத்திருக்கிறோம் நான் அவர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்! அவர்கள் எனக்குத் துரோகம் செய்து விட்டார்கள். சற்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வைத்திருந்தது நம்பிக்கை என்றால் அது ஒருபோதும் பொய்த்துப் போகாது. நீங்கள் வைத்தது ஆசை. அதனை நம்பிக்கை என்ற பெயரில் நடமாட விட்டீர்கள். ஆசை நிராசை ஆனதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் நழுவுகிறீர்கள். ஆனால் அத்தனைக்கும் காரணம் உங்களின் ஆசையே. ஒரு நிமிடம் உட்கார்ந்து யோசியுங்கள் அந்த உண்மை உங்களுக்குப் புரியும்.

என்னை ஏமாற்றி விட்டார்? என் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டார்! என்று ஆதங்கப்படுவீர்கள். ஏமாற்றியது யார்? ஏமாந்தது யார்? ஏமாந்தது நாம். அதனால் நம்மை நாமே குற்றம் சாட்டிக் கொள்ளத் தயங்குகிறோம். அதனால் ஏமாந்து விட்டோம் என்று சொல்லத் தயங்கி பழியை பிறர் மீது போடுவதற்காக உருவாக்கியது தான் நம்பிக்கைத் துரோகம்! அவர் பேசிய பேச்சு என்ன? அவர் நடித்த நடிப்பு என்ன? அப்படியென்றால் யாரைத்தான் நம்புவது? என்று ஆதங்கப்படுவோம். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் எல்லோரும் ஏமாற்றுபவர்கள் அல்ல எல்லோரும் ஏமாறுபவர்களும் அல்ல. ஏமாறத் தயாராய் இருப்பவர்களை ஏமாற்றுபவர்கள் இனம் கண்டு கொள்கிறார்கள். சிலர் உடனே ஏமாறுவார்கள். சிலரைப் பேசி, நடித்து மயக்க வேண்டியது இருக்கும் அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

சரியாக யோசித்துப் பாருங்கள் காதலிப்பது போல ஏமாற்றுதல் இது இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக நடக்கிறது. அப்படியென்றால் ஒருவரைப் பார்த்து ஒருவர் திருந்தி விட வேண்டியதுதானே? ஏன் இன்னும் நடக்கிறது. அந்த ஆசை அது இருக்கும் வரை நாம் ஏமாற்றப்படத்தான் செய்வோம். அடுத்து பைனான்ஸ் இதுவும் ஒரு ஊரிலா நடந்திருக்கிறது? ஒவ்வொரு ஊரிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஏன் இன்னும் மக்கள் திருந்தவில்லை? மற்றவர்களுக்குத் தான் நடக்கும் நமக்கு நாம் நினைத்த படியே நடக்கும் என்ற நப்பாசை தானே! வேலைக்கு ஏன் காசு கொடுக்க வேண்டும்? குறுக்கு வழியில் அதனை கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசைதானே? மீன்கள் எப்போதும் மாட்டிக் கொண்டே இருக்கின்றன. தூண்டில்கள் தான் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பூமி என்ற கடலில் புழுவுக்கு ஆசைப்படும் மீன்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

எந்த நம்பிக்கைத் துரோகத்தையும் எடுத்து ஒருமுறை யோசித்துப் பாருங்கள். ஏதோ ஒரு இடத்தில் ஆசை துளிர்விட்டு இருக்கலாம். பிறகு அவர்கள் வீசிய வலையிலோ, தூண்டிலிலோ வசமாக நாம் சிக்கி இருக்கலாம். தூண்டிலில் சிக்கிய பின் துடித்து என்ன இலாபம்? பிறரைத் தூற்றி என்ன இலாபம்? ஏமாந்தது ஏமாந்ததுதானே! இழந்தது இழந்ததுதானே! எத்தனை முறை அனுபவப்பட்டவர்களும் அழுது புலம்பியவர்களும் நம்மிடம் எவ்வளவோ சொல்லியும் நாம் கேட்க மறந்துவிட்டோம்! மறுத்துவிட்டோம் எவர் சொல்லையும், பிறரது அனுபவத்தையும் நாம் ஏற்றுக் கொண்டால் நமக்கேது இத்தனை துன்பங்கள் யோசித்துப் பாருங்கள்!

அனைத்தையும் அடுத்தவர்கள் மீது பழிபோடாதீர்கள். அது நீங்கள் பிறரை ஏமாற்றுவது மட்டுமல்ல உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்வது. கொடுமையிலும் கொடுமையானது எது தெரியுமா? நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதுதான்! பிறர் நம்மை ஏமாற்றுவது கூடத்தெரியும் அழலாம், புலம்பலாம், ஆறுதல் தேடலாம். ஆனால் நம்மையே நாம் ஏமாற்றுவது யாருக்கும் தெரியாது. நமக்கும் புரியாது ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் குழி தோண்டிப் புதைக்கும்.

நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை நினைத்த வேலை கிடைக்கவில்லை நினைத்த நபர்கள் கூட இல்லை நினைத்த இடம் கிடைக்கவில்லை, நினைத்த அன்பு கிடைக்கவில்லை, ஒட்டுமொத்தத்தில் நாம் நினைத்தது நடக்கவில்லை. காரணம் இதுவும் ஒரு ஆசைதான் ஆனால் இது நம் விதி! இது நாம் வாங்கிவந்த வரம்! என்றுதானே தேற்றிக் கொள்கிறோம். ஏனென்றால் மனம் ஆசைப்படுகிறது. நாம் அதைத் தடுக்கிறோம். ஏன் ஏமாற்றுகிறோம் இதே பெண்களாய் இருந்தால் இன்னும் ஏராளமான ஏமாற்றங்கள் இருக்கும் அதனை ஏக்கம் என்பார்கள் அதனை துக்கமென மாற்றுவார்கள். தொண்டைக்கு வெளியே வராதபடி பார்த்துக் கொள்வார்கள். பயணத்தின் தொடக்கத்தில் குடும்பம், பாதியில் கணவர் குழந்தைகள் இறுதியில் உறவுகள், உடன்பணியாளர்கள் யாவர் இருந்தும் எவரிடமும் கூறமுடியாமல் ஊமை கண்ட கனவுபோல் உள்ளுக்குள்ளே அழுவார்கள். தூரத்திலிருந்து பாருங்கள். நாம் தோப்புக்குள்தான் இருப்போம் அருகில் சென்று பாருங்கள் நாம் தனிமரமாகத்தான் தவிப்போம். நீங்கள் ஏமாறாமல் இருக்க ஆசையை விடுங்கள் ஏமாறுபவர்கள் இல்லையென்றால் ஏமாற்றுபவர்களும் இல்லை…

“ஆசையே துன்பத்திற்குக் காரணம்'”

-புத்தர்.

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES