01
Jul
2022
இன்று இந்தியாவே பற்றி எரியுது “அக்னிபத்” தால் பற்ற வைத்தவர்கள் பயனுள்ளது என்றார்கள் பற்றி எரிவதனால் அவர்கள் இப்போது பதறுகிறார்கள் இரயிலும் எறிகிறது துயிலும் எறிகிறது, கடையும் எரிகிறது, நடைபாதையும் எரிகிறது, நாடும் எரிகிறது, நடுக்காடும் எரிகிறது வீர ஆவேசத்தோடும் எரியும் நெஞ்சத்தோடும் இளைஞர்கள் படை படையாக எழுந்து வட இந்தியாவை வன்முறைக் களங்களாக மாற்றி வருகிறார்கள்.
அக்னிபாத் என்றால் என்னதான் அர்த்தம் எனப் பலபேர் விழி பிதுங்கிக் கொண்டு இருக்க நாட்டிற்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு ஒரு சட்டத்தை உருவாக்கினார்கள் அதனால் உருவானதே இந்தப் பற்றி எரிகிற பதறும் காட்சி.
பதினேழு வயதைக் கடந்தவுடன் அவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் அதற்குரிய பயிற்சியும் கொடுக்கப்படுவார்கள் நான்கு ஆண்டுகளும் நிறைவுற்ற பின் அதில் 25% பேர் இராணுவத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் மீதமானவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் இதுதான் ‘அக்னிபாத்’ பற்றி ஒரளவு அதைப்பற்றிக் கூறியவர்கள் கேட்டுப் புரிந்து கொண்டது. இப்போது எழுகின்ற கேள்வி இதனால் ஏன் வட இந்தியா பற்றி எரிகிறது என்பதுதான்.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் இராணுவத்தில் பணிபுரிவதையே தமது இலட்சியமாக வைத்துள்ளார்கள். அவர்களில் பலர் மூளை வலிமையை விட உடல் வலிமைக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் பல தூரங்கள் ஓடுவதும், உடற்பயிற்சி செய்வதும் உடலைக் கட்டுக் கோப்பாகப் பேணுவதுமே தமது இலட்சியமாக வைத்துள்ளார்கள்.
இப்போது அந்த எண்ணத்தில் இடி விழுவது போல் அமைகிறது இச்சட்டம். அந்த இளைஞர்களின் நெஞ்சத்தில் நீங்காத எண்ணமாக வடிவெடுத்தது இப்போது நிறைவேறாத கனவாக மாறுவது கண்டு அவர்கள் நெஞ்சு பொறுக்கவில்லை அதனால் நெருப்பாய் உமிழ்கிறார்கள்.
நிரந்தரமற்ற ஒரு வேலைக்கு அவர்கள் நேரத்தைச் செலவழிக்க எண்ணுவார்களா? அவர்கள் கூறுவது போல் நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்த பிறகு அங்கு இருந்து திருப்பி அனுப்பி விட்டால் அவர்களது நிலை. நமது கல்வித் திட்டத்தின்படி அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களே அந்தத்தகுதியில் எந்த வேலைக்கும் போக முடியாது. அதன்பின்பு அவனது எதிர்கால நிலை என்ன?
இளம்வயதில் இராணுவத்திற்கு ஆள் எடுத்து அவனுக்கு பயிற்சி கொடுத்து அவன் பணிசெய்யப் போகும்போது வீட்டுக்கு அனுப்பி விடுவது தான் வேலை வாய்ப்பா? இது ஒருவகையில் குட்டி நாய் வைத்து வேட்டையாடுவது போல் ஆகிவிடாதா? அதாவது குட்டி நாயை கொண்டு வேட்டையாடச் செல்லும்போது வேட்டைப் பொருளையும் பிடிக்காது அதுவும் எந்தப் புதருக்குள் கிடக்கிறது என்று நமக்குத் தெரியாது. இதுதான் குட்டிநாய் வைத்து வேட்டையாடுகின்ற கதை அதுபோல் நமது இராணுவம் ஆகிவிடக்கூடாதே!
இவர்கள் இப்பயிற்சியை முடித்து விட்டு வேலைவாய்ப்புக்கு என்று எங்காவது சென்றால் என்ன வேலை கிடைக்கும் காவலாளியாகவும், கூர்க்காவாகவும் தானே வேலை செய்ய முடியும்! வேறு என்ன கௌரவமான பதவியிலா அவர்கள் சேர முடியும். அவனுடைய இளமைப் படிப்பையும் தொடர விடாமல் அவனுக்குக் கிடைத்த வேலையும் நீட்டிப்பு இல்லாமல் ஆசை காட்டி மோசம் செய்வது போலல்லவா?
ஒருவேளை எந்த வேலையும் கிடைக்காவிட்டால் அவன் என்ன செய்வான் கத்துக் கொண்ட வித்தையை வைத்து மாவோயிஸ்டுகளாக, வழிப்பறிக்காரர்களாக, தாதாவாக, அடியாளாக மாறக் கூடிய அவலநிலையும், ஆபத்தான நிலையும் கூட வர வாய்ப்பு உண்டல்லவா?
ஆகவே எந்தத்திட்டமாக இருந்தாலும், இளைஞர்களை மையப்படுத்தி வேலை வாய்ப்புக் கொடுக்க எண்ணுகின்ற திட்டங்கள் அவர்கள் எதிர்காலத்திற்குப் பயன் கொடுப்பது போல அமைய வேண்டும். அதுசரி இத்தனை இரயில்களை எரிக்கும் அளவிற்கு என்ன கோபம்? எனக் கேட்டால் ஏற்கனவே உடல்தகுதி போன்ற தகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தவர்களின் தகுதியும் இரத்து செய்யப்பட்டதால் அவர்களது கோபமும் ஆத்திரமுமே நெருப்பாய் கொழுந்து விட்டு எரிந்தது. ஆகவே எந்தத் தலைவர்ளாயிருந்தாலும் சரி, எந்தத்திட்டமாய் இருந்தாலும் சரி மக்களுக்கான திட்டம் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது மகத்தான திட்டம் இல்லை மாற்றவேண்டிய திட்டங்களே, நாட்டுமக்கள் ஏற்றுக் கொள்ளாத எவரும் நல்ல தலைவர்களாக முடியாது ஏற்றுக் கொள்ளாவிட்டால் எவராய் இருந்தாலும் நாடகக் கோமாளிகளே தவிர நல்ல தலைவர்களாக முடியாது. புரிந்து நடப்பவர்கள் தெரிந்த தலைவர்களாக தேசம் போற்றும் தலைவர்களாக வாழுவார்கள்.
“பிறர் கனவுகளை எரிக்காதீர்கள் – காலம்
உங்களை எரித்து விடும்”