03
Feb
2017
இன்று எங்கு நோக்கினும் பட்டி தொட்டி மட்டுமல்ல எட்டுத்திக்கிலும் கொட்டி முழங்குகிற செய்தி தமிழகத்தின் எழுச்சி! இது எழுச்சியா? புரட்சியா? பல்வேறு காலக்கட்டங்களில் அடக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த உணர்ச்சி. ஆனால் அவை நல்ல விதமாகவே மலர்ந்திருக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு மல்லுக்கட்டா? என்று கூட எண்ணத் தோன்றலாம் அதற்காக மட்டும் போரடவில்லை ஏதோ ஒன்றுக்கு நாம் அடிமையாகிறோம், ஏதோ ஒன்று நம்மை அடிமைப்படுத்துகிறது என்று ஆண்டாண்டு காலமாக தன்னை அழுத்திக் கொண்டிருந்த ஒரு ஆழமான உணர்ச்சி உள்ளுக்குள் அழுது கொண்டிருந்த உணர்வுகளுக்கு வடிகாலாக வாடிவாசல் அமைந்துவிட்டது. இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டே அதிகமாகத் தெரியாத நகரத்து இளைஞர்கள்தான் இதனை நடத்திச் செல்வார்களா!
மெரினா உலகத்தில் இரண்டாவது பெரிய கடற்கரை என்று சொல்லுவார்கள் அதுவே இப்போ அதிருதில்ல என்று சொல்லும்போது நெஞ்சை நிமிர்த்தச் சொல்கிறது.
எங்கிருந்தது இந்தக்கூட்டம் வந்தது? எப்படிச் சேர்ந்தது? இவ்வளவு வைராக்கியமும் இவ்வளவுநாள் எங்கே ஒளித்து வைக்கப்பட்டது? இதுவரை இது யாருக்கும் தெரியாமலே போய்விட்டதே!
இதனை பார்க்கும்போது வடிவேலு காமெடியாகச் சொல்வாரே அடடா… இது தெரியமல் இவ்வளவுநாள் இருந்துட்டோமே! என்ற வாசகம்தான் ஞாபகம் வருகிறது ஏனென்றால் நாம் இழந்தது எவ்வளவோ! இதனை எல்லாம் எப்படி மீட்டெடுக்கப்போகிறோம், காலம் கடந்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால் எப்படியும் மீட்டெடுத்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோம் என்பது மட்டும் நிசர்த்தனமான உண்மை.
இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களையும் தனக்கெனக் கொண்டு வாழ்ந்தவன் தமிழன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என செழிப்பாய் வாழ்ந்தவன் இப்போது நால்வகை நிலங்களையும் நாட்டாள்பவர்களிடம் கொடுத்து விட்டு பாலைவனத்தில் படுத்துக் கிடக்கின்றான். இந்தப்பரிதாப நிலையை என்னவென்று சொல்வது. இதனால் தானே சோறு கொடுக்கும் விவசாயி இப்போது சுருண்டு கிடக்கின்றான்.
சில காலங்களுக்கு முன்னால் ஒரு திரைப்படப்பாடல் சொன்னது ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? ஆனால் இப்போது வெளிநாட்டில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் கையேந்திக் கொண்டிருக்கிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். படிக்கிற குழந்தைகளுக்குக் கூட கணிணி, சைக்கிள், செருப்பு, பை, புத்தகம், நோட்டு, உபகரணங்கள் என ஒவ்வொன்றாகக் கொடுத்து கல்வி கற்றுக் கொடுத்தோமோ இல்லையோ கையேந்தக் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ச்சீ..ச்சீ.. என்ன கேவலமான நிலை. இதனால் தான் அவனவன் பதவிக்கு வந்த பிறகும் கையேந்துவதை மட்டும் கைவிட்டுவிடவில்லை. அறிஞர் அண்ணா பாட சாலைகளையும், பள்ளிக்குழந்தைகளையும் பார்த்துச் சொல்வார் எதிர்காலத்தை ஈன்றுதரும் நாற்றங்கால்கள் என்பார். ஆனால் நாம் நாகரீகப் பிச்சைக்காரர்களாய் மாற்றிவருகிறோம். அண்ணா! பொறுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உமக்கு எதையும் தாங்கும் இதயம் தானே!.
நால்வகை நிலமும் நாளைய சமுதாயத்திற்குத் தெரியுமா? பாவம் அவர்கள் கல்விக்கூடம் என்ற பெயரில் நாலு சென்ட் நிலத்திற்குள் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். வெளிநாட்டு உணவுகளோடு உறவாடி உள்நாட்டு உறவுகளில் வாடிக்கிடக்கிறார்கள். வெளிநாட்டுச் சந்தைகளை உள்நாட்டில் திறந்து வைத்து வியாதிகளை விலைக்கு வாங்குகிறார்கள். இதனால் கேன்சர் போன்ற வியாதிகளை திரைப்படத்திலும் நாவல்களிலும் கண்டுவந்தவர்கள் திரும்பும் திசையெல்லவாம் பார்த்து உறவுகளின் உயிர்களை எல்லாம் தவணை முறையில் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறோமே! வெளிநாட்டுத்; தொழிற் சாலைகளை எல்லாம் வீட்டுக்கு அருகில் கொண்டுவந்து இன்று தொழுநோயாளியைப்போலத் துவண்டு கிடக்கிறோமே!.
எங்கள் சொத்துக்கள் எங்கே? இயற்கை வித்துக்கள் எங்கே? நாட்டு நாய்கள் எல்லாம் கவனிப்பாரற்று வீதியில் அசிங்கமாய் திரிய எங்கள் வீட்டுக்குள் வெளிநாட்டு நாய்களல்லவா படுத்துக்கிடக்கிறது. காங்கேயம் காளை காணாமல் போய்விட்டது. நாட்டு மாடுகள் வீட்டுச்செல்வங்களாய் விளங்கி வந்த எங்கள் சீமையில் ஜெர்ஸி பசுக்கள் அல்லவா சிம்மாசனம் தேடுகிறது.
எங்கள் மலைகள் எங்கே? குளத்தில் அலைகள் எங்கே? ஆறுகள் எங்கே? தினம் தின்கிற நெல்லுச் சோறுகள் எங்கே? நெல்வயல்கள் எங்கே? நிதம் காணும் கயல்கள் எங்கே? தென்னை இளநீர் எங்கே? திண்ணைப்பேச்சுகள் எங்கே? நுங்கு எங்கே? விழாக்களில் ஒலிக்கும் சங்கு எங்கே? எங்கள் சேலை கட்டிய தேவதைகள் சுடிதாருக்குள் சுருண்டு கிடக்கிறார்களே! வெளுக்காத சாயம் விவசாயம்; எங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டு இருக்கிறதே! இப்படியே போனால் நாம் என்னாவது?
ஆனது ஆகட்டும், போனது போகட்டும். இடைப்பட்ட நாட்கள் இருட்டில் இருந்துவிட்டோம். வரப்போகிற நாட்கள் வளமுள்ளதாக இருக்கட்டும். புரட்சி எங்கே தோன்ற வேண்டுமோ அங்கு தோன்றிவிட்டது இனிமேல் நமக்கு வானம்கூட தொடுதூரம்தான். இழந்ததையெல்லாம் மீட்டெடுப்போம், இளைய சமுதாயத்திற்கு வழிவிடுவோம். ஏனென்றால் அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தியதை விட இங்குள்ள எட்டப்பர்கள் அதனை எடுத்துக் கொடுத்து விட்டார்கள். முலைகளை விற்று, மணல்களைவிற்று, தண்ணீரைவிற்று, நாம் சிந்திய கண்ணீரை விற்று, சில எச்சிலை இனாமாகத் தந்து ஏமாற்றி விட்டார்கள்.
இப்போது என் இளைய சமுதாயம் கிழக்காகக் கிளம்பிவிட்டது. இளைஞர்களைக் கொண்ட தேசமும், நாடும் மட்டுமல்ல, ஒவ்வொரு வீடும், குழுவும், ஊரும் புதிய விடியலைச் சந்திக்கப்போகிறது. இளைய சமுதாயத்தின் பயணம் தொடர்கிறது அதோ தெரிகிறது அதிகாலை….