23

Mar

2022

அன்புள்ள அப்பாவிற்கு…

அன்புள்ள அப்பாவிற்கு என்ற அர்த்தமே எனக்கு ஐம்பது வயதில் தான் புரிகிறது. எனக்கு அகரம் கற்றுக் கொடுத்த சிகரம் தவறிய பிறகுதான் எத்தகைய பாடசாலையின் நாற்றாங்காலில் நானிருந்திருக்கிறேன் என எனக்குப் புரிகிறது இன்னார் மகன் என்று மார்தட்டிப் பெருமைபட்டுக் கொண்டிருந்தேன் நீங்கள் விண்ணோடு கலந்தபின் மண்ணோடு உறைந்த பின் மனசு முழுவதும் புண்ணாய்ப்போனது எனக்கு.

நீங்கள் விரல்பிடித்துக் காட்டிய காட்சிகள் பறவைகள், விலங்குகள் எல்லாம் என்னை கைகொட்டிச் சிரிக்க வைத்தன. ஆனால் இப்போது அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது கைதட்டி இரசிக்கவில்லை கண்ணீர் விட்டு அழுகிறேன். நீங்கள் இல்லாத நினைவுகள் என் நெஞ்சில் நெறிஞ்சி முள்ளாய்க் குத்துகிறது. உங்கள் தோளில் ஏறி நம்ம ஊர்த் தேரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சாமி தெரியவில்லை ஏனென்றால் சாமியின் தோளில் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்குப்புரியவில்லை. அப்பா உங்களுக்கு தெரியுமா? நீங்கள் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் போதெல்லாம் துளியளவும் பயப்படவில்லை சிரித்தேன் காரணம் என்னைத் தாங்கியிருப்பது என் தந்தையின் கரமல்லவா! என் தந்தையோடு நான் இருக்கும் போது நான் பரமசிவனின் கழுத்திலிருக்கும் பாம்பு. எந்தக் கருடனையும் சௌக்கியமா? எனக் கேட்பேன் அவ்வளவு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்தவர் நீங்கள் இல்லாமல் நான் வாழ்வது எப்படி என்று நீங்கள் நினைத்துப் பார்க்க வில்லையோ? அதுதான் நெடுதொலைவுப் பயணமோ? இது தீராத துயரமோ? நீங்கள் திரும்பிவராத சாபமோ?

அப்பா எங்கு போனாலும் எனக்கு ஒரு விளையாட்டுப் பொருளும் திண்பண்டமும் வாங்கி வருவீர்களே இப்போது என்ன வாங்கப் போயிருக்கிறீர்கள்? பஸ் வரும்போது பாதி தூரம் ஓடி வருவேன் பைக் வாங்கிய பிறகு அந்தச் சத்தத்தைக் கேட்டு ஓடிவருவேன். நான் இப்போது எதைக் கேட்டு ஓடிவருவேன்? எங்க வந்து காத்துக்கிடப்பேன் சொல்லுங்கள் அப்பா?

என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னீர்களாம் நான் கால தாமதமாகிவிட்டேன் நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்துமே இன்றும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை அப்பா அது மட்டுமல்ல நான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் கற்றுக்கொடுத்ததுதானே! நான் கண்ணீர் விட்டால் கூட தாங்க மாட்டீர்கள் ஆனால் அன்று நான் கதறி அழுதபோதும் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை நீடிய தூக்கத்தில் நிம்மதியாய் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் கையில் ஜெபமாலையுடன் கண்ணயர்ந்து விட்டீர்களே!

அப்பா தூங்கினால் அருகில் யாரும் சத்தமிடக்கூடாது என்று அம்மா அடிக்கடிக் கண்டிப்பார்கள் ஆனால் அன்று ஊரே அழுதப்போதும் நீங்கள் உறக்கத்தில் இருந்து எழவேயில்லை. அம்மா சொன்னது பொய்யா? இல்லை நீங்கள் எழுந்திருக்காமல் இருப்பது தான் பொய்யா? நீங்கள் பயன்படுத்திய பேனா, நீங்கள் பயன்படுத்திய சீப்பு இதையெல்லாம் தொடக்கூட நாங்கள் பயப்படுவோம் காரணம் அவ்வளவு சுத்தம் பார்ப்பவர் நீங்கள் இன்று அந்தப்பொருள் எல்லாம் நாங்கள் தொட்டு வணங்கக்கூடிய தூய பொருளாக மாறிவட்டதே நீங்கள் சேர்த்த சொத்துக்களைவிட நீங்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்துக் கொள்ளத்தான் நாங்கள் ஆசைப்படுகிறோம் பொருட்களை பார்க்கிறோம் உங்களைப் பார்க்க முடியவில்லையே? இனிமேல் பொருட்களில்தான் உங்களைப் பார்க்க முடியுமா? புரியவில்லையே!

நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தைவிட நீங்கள் தான் பாடமாக இருக்கிறீர்கள் அப்பா. பாடத்தை முழுமையாகப் படிக்கும் முன் ஏன் இறைவன் புத்தகத்தை மூடிவிட்டானப்பா சின்ன மகனுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லையே என்பீர்களே நீங்கள் சேர்ந்து இருந்ததுதானே உலகில் மிகப்பெரிய சொத்து அப்பா அதையே இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறேனே அப்பா.

மரணம் ஒருமுறை தான் என்பது பொய்தானப்பா. ஏனென்றால் அன்பாவர்களின் ஒவ்வொரு மரணமும் நம்மையும் கொன்று கொண்டு தானே இருக்கிறது நடை பிணமாய் நடமாட விடுகிறது. கையில் கிடைத்த மாபெரும் பொக்கிசத்தை கடவுளே பறித்துக் கொண்டானே தந்தை என்பது தமக்கு கிடைத்த தவம் அவர் வழிகாட்டல் என்பது நம் வாழ்க்கைக்குக் கிடைத்த வரம். ஆனால் இன்று வரங்களே சாபங்களாகிவிட்டதே! சங்கட மேகங்கள் என்னைச் சரிய வைத்து விட்டதே!

அப்பா தெய்வம் என்று சொல்வார்கள் ஆனால் அந்தத் தெய்வமே இன்று தெய்வத்திடம் போய்விட்டது. தெய்வமே! ஏன் உன் குழந்தையை தெருவில் விட்டுச் சென்றுவிட்டாய்? சிறிது நேரம் காணவில்லை என்றாலும் தேடித்தேடி வருவீர்களே? நிச்சயம் மறுபடி வருவீர்களா? அப்பா நீங்கள் பின்னால் பிடித்து இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில்தான் கையை விட்டுக்கூட சைக்கிள் ஓட்டுவேன் இப்போது நீங்களும் கைவிட்டு விட்டீர்கள் அந்தத் தெய்வமும் கைவிட்டுவிட்டதோ? ஐயகோ அட தெய்வமே எல்லாரும் மண்ணைத்தோண்டி பொன்னை எடுப்பார்கள் ஆனால் நாங்களோ மண்ணைத்தோண்டி பொன்னையே புதைத்துவிட்டோம். ஆனாலும் என் அப்பா காற்றாக, பாட்டாக, பூவாக, பறவையாக, மழலையாக, சில மனிதராக மறுபடியும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்துகிறேன்.

“நிச்சயம் மழை வரும்
என்மீதும் சில துளிகள் விழும்”

ARCHIVES