19
Mar
2021
உயிர் தோழனே! உனக்குத் துறவற வாழ்வின் வெள்ளிவிழாவாமே! உன் தோழமையும் எனக்கு வெள்ளிவிழாவாகிறது. நாம் பயணப்பட்ட பாதையில் உன் தேங்கிய அன்பு மட்டும் என் தேகமெல்லாம் இதயத்தில் தெப்பமாய்க் கிடக்கிறது. ஒரு துறவி தன் கற்பை எவ்வளவு கண்ணியமாய் காப்பானோ. அவ்வளவு நட்பைப் புனிதமாக்குகிறாய். உனது உறவு போல் வாழ்நாளில் பலருக்கு வாய்க்காத ஒன்று அது உன் நல்ல நட்புதான். அது எனக்கு உன்னால் அமைந்திருக்கிறது. நன்றிகள்.
புத்தனுக்கு அவனது அண்ணன் ஆனந்தன் சீடன்தான். அந்த வரலாறுதான் எனக்கும் அமைந்ததோ என அவ்வப்போது நான் எண்ணியது உண்டு. எப்படி இணைந்தோம்! எவ்வளவு தூரம் கடந்தோம்!. ஆனாலும் 25 ஆண்டுகள் கடந்து விட்டது. நாட்களைக் கணிக்க முடியவில்லை. ஆனால் உன் பாதச் சுவடுகள் பதித்த சாதனைகள்தான் இன்றும் பசுமையாக எனக்குள் நிறைந்திருக்கிறது. வரலாறாக வாழ்கிறது.
உனக்கு சின்ன வயசிலே சிம்மாசனங்கள் வரிசை கட்டி வந்து நின்றன. ஒவ்வொன்றிலும் நீ பதித்த வெற்றிகள்தான், சமகால வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நீ கட்டிய பள்ளிகள்தான் எட்டிய தூரம் நமது இருப்பை எடுத்துச் சொல்கின்றன. கல்விக் கழகத்தின் செயலர், பள்ளியின் தாளாளர், கௌசானல் மாநில முதல்வர் என எத்தனை பரிணாம வளர்ச்சிகள் அத்தனையிலும் உன் முத்திரைகள் அழியாத அரசு முத்திரைபோல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
உனக்கு உடன்பிறப்புகள் என்பது உடனிருப்பவர்கள்தான். அவர்களை உயர்த்திப் பார்ப்பது தான் உனக்கின்பம். அதனால்தான் உனக்குத் தம்பிகள் அதிகம். உனக்கு நட்பு வட்டாரம் ஒரு குட்டி உலகம். அதில் எட்டிய தூரம் அளவும் உன் இதயம் கவர்ந்தவர்கள்தான். உனக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்தான்.
எத்தகைய நண்பனை நான் பெற்றிருக்கிறேன் என எண்ணிப் பார்க்கும்போது இப்பிறவியில் நற்பயனை அடைந்துவிட்ட மகிழ்ச்சி எனக்கு. உன் நந்தவனத்தில் எத்தனையோ சந்தன மலர்கள் பூத்துநிற்கும் போது. என்னைச் சகோதரனாக நினைத்துச் சகலத்தையும் தந்துதவிய உன்னை எண்ணி வியக்கிறேன். இன்றுகூட அம்மா என்னைத்தான் மூத்த மகன் என்பார்கள். விவிலியத்தில் இயேசு அருளப்பனுக்குத் தன் அன்னையைக் கொடுத்தாரே அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
என்னுடைய ஒவ்வொரு திறனுக்குள்ளும் நீதான் ஒளிந்து கொண்டிருக்கிறாய், ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய். என்னுடைய புத்தகங்களெல்லாம் உன் முகவுரை வந்த பிறகுதான். என் முகவரி வெளி உலகிற்குத் தெரிந்தது. என் அட்டைப் படத்திலெல்லாம் நீ அமர்ந்த பிறகுதான் நான் உயர்தரச் சட்டை அணிந்த சந்தோசம் எனக்கு. கண்ணன் மட்டும் சரியாகத் தேரைச் செலுத்தவில்லை என்றால் அர்ஜீணனின் அம்புகள் அனைத்தும் அர்த்தமில்லாது போயிருக்கும். அதேபோல்தான் என் வாழ்க்கையில் நீ மட்டும் இல்லாது போயிருந்தால் பாதி வாழ்க்கை எனக்குப் பாலைவனமாகத்தான் இருந்திருக்கும். என்னை அப்பா என்று அழைத்ததும் மச்சான் என்று சிரித்ததும் மருமகனே என்றதும் உன் கிராமத்து வாசந்தானே என்றும் கிடைக்காத பாசம்தானே! ஐயா அகஸ்டின், தோழர் கலை இவர்கள் எல்லாம் உன்னால் எனக்குக் கிடைத்த உயர்ந்த பொக்கிசமல்லவா. குருவை மதிப்பதில் கட்டை விரலைக் கொடுத்த ஏகலைவன் கூட உன்னைக் கண்டால் எட்டி நிற்க வேண்டும்.
விட்டுக் கொடுப்பதிலும், தட்டிக் கொடுப்பதிலும் உன்னிடம் நான் தோற்றுப் போயிருக்கிறேன். உன் அளவு எனக்கு உயர்ந்த உள்ளம் கிடையாது. ஆனாலும் ஒருபோதும் நான் உன்னை வெற்றியடைய நினைத்ததில்லை வரலாற்றில் சில வெற்றிகள் கேவலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசோகனில் கலிங்கத்து வெற்றி அவனைக் கலங்கச் செய்து விட்டது. இராமன் பின்புறத்தில் இருந்து அன்பு எய்தபோது வாலி சொன்ன வார்த்தை நீ கேட்டாலே நான் கொடுத்து விடுவேனே. நீ எதற்கு முதுகில் குத்தி உன்னை அசிங்கப் படுத்துகிறாய்! என்றான். கண்ணன் கர்ணனிடம் தர்மத்தை தர்மமாகக் கேட்டு உயிரை எடுத்தான். இதெல்லாம் வெற்றி என்றாலும் வரலாற்றின் கருப்புப் பக்கங்களே. உன்னை வெற்றி கொள்ளப் போகிறேன் என முதுகில் குத்தி இன்னொரு கருப்புப் பக்கம் என்னால் உருவாகிவிடக்கூடாது. கவனமாக இருக்கிறேன். உன் எல்லைக்குள்ளும் எட்டப்பனும், யூதாசும் இல்லாமல் இல்லை ஆனாலும் அந்தப் பச்சோந்திகளிடத்திலும் நீ பாசம் காட்டுவது! அதுவும் ஒரு உயிர்தானே என்ற ஒரே காரணத்தால்தான் கடைசிவரை நீ கடவுளாகவே இரு!
உன் பயணம் தொடரட்டும் எத்துறையில் ஒரு பத்துப்பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அதில் நிச்சயம் உன் பெயர் இருக்கும். உனக்கு அன்புக்குரியவர்களின் பத்துப் பெயர்களில் என் பெயர் இருக்கும் இதுவே எனக்கு இப்பிறவியின் மகிழ்ச்சி! நல்லவனாகவே இரு எனக்கு நண்பனாகவும் இரு என்றும் நன்றியுடன்.
“தோழனே நலமா! – உன்
துணைதான் என்பலமா!”
இப்படிக்கு
கற்பனை கலக்காத என் கைரேகை