21
Apr
2023
கஷ்டப்பட்டு படிச்சு வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள் இப்போது படிக்காமலேயே பாஸாக வேண்டும். அதுதான் மாணவர்கள் கண்டுபிடித்த மகத்தான வழியாக இருக்கிறது. இல்லாத தெய்வத்தையெல்லாம் வேண்டுகிறான். இருக்கிறவர்களையெல்லாம் ஏமாற்றுகிறான். பக்தி வேசத்தால் நடிக்கிறான். பசப்பு வார்த்தைகள் பேசுகிறான் உழைக்காமல் வெற்றியை அடைய அவன் எந்த எல்லைக்கும் போகிறான். கடைசியாக அவன் கண்டு பிடித்தது தான்… கையில் கட்டுப்போடுதல் கையில் கட்டுப் போட்டுக்கொண்டு ஒரு போட்டோ. மருத்துவர்களிடமிருந்து ஒரு சான்றிதழ். உடனே தமிழக அரசு பாடம் தெரிந்த ஒரு ஆசிரியரை பரிட்சை எழுத அனுமதிக்கிறார்கள். அவருக்குப் பெயர் சொல்வதை எழுதுபவர் ஆனால் சொல்வதை மட்டும்தான் எழுதுகிறாரா?… அதுதான் இல்லையே….
இது கல்வித்துறைக்கே வந்த மாபெரும் சோதனை. கல்வித்துறை மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் மீது இரக்கப்பட, இப்போது கல்வித்துறைமீது இரக்கப்பட வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. ஒவ்வொரு தேர்விலும் ஏதாவது ஒன்று இரண்டு மாணவர்கள் எதிர்பாராத விதமாக விழுந்தோ, விபத்தைச் சந்தித்தோ, கை முறிவு ஏற்படும் உடனே ஒரு பதிலாளி போட்டு அதனை எழுத வைப்பார்கள். எப்படியோ தேர்ச்சி பெரும் அளவிற்கு அல்லது திருத்தும் இடத்தில் இரக்கப்பட்டு சில மதிப்பெண்களை வழங்கி அவன் தேர்ச்சி பெற வழி செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது.
விபத்து ஏற்பட்டதோ இல்லையோ! ஒரு முயற்சி செய்து பார்ப்போம்! என்று பலர் கையில் கட்டுப்போட ஆரம்பித்து விட்டார்கள். தேர்வு எழுத இயலாது என மருத்துவர்களும் சான்றிதழ் அளிக்கத் தயாராகிவிட்டார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவனாய் எழுதுவதைவிட ஆள் வைத்து எழுதினால் தான் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இப்படி எல்லோருமே கண்டுபிடித்த வாழ்க்கை குறுக்கு வழியில் கொள்கையை அடைவது. தவறு செய்யும் போதெல்லாம் பெரியோர்கள் சொல்கின்ற வார்த்தை இது படித்தவர்கள் செய்கின்ற வேலையா இது? என்பார்கள் அதற்குக் காரணம் தவறான பாதையை படித்தவர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பதுதான் ஆனால் படிப்பிற்காக இப்படிச் செய்யலாமா? எனவே அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி.
கஷ்டப்பட்டுப் படித்து. காலாற நடந்து படித்து. விளக்கு வைத்துப் படித்து. வீதியில் வந்து படித்து. சொல்லிச் சொல்லிப் படித்து. எழுதி எழுதிப் படித்து, சிலர் சொல்லித்தர படித்து, மனனம் செய்து படித்து, மனதில் பட்டதை எழுதி மதிப்பெண் பெற்ற காலம்போய் இப்போது கையில் கட்டுடன் வந்து. ஒரு அறையில் வந்து அமர்ந்து சொல்வதை எழுதுவதற்கு ஒருவர் வந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதனை அவர்கள் சரியாக எழுதி அதிகமான மதிப்பெண் பெற்று ஆத்தா நான் பாஸாகிவிட்டேன் என்று அனைவரும் அறிய கத்துகிற சூழல் இன்று சர்வ சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தாண்டு அரசுத்தேர்வுக் காலகட்டங்களில் அறைக்கண்காணிப்பாளர்கள் நிர்ணயம் செய்வதை விட சொல்வதை எழுதுவதற்கு ஆட்களை நியமிக்கவே கல்வித்துறை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஆட்களை நியமிக்கும் போது தேர்வு மையங்களில் பாதி அறைக்கண்காணிப்பாளராகவும், பாதி சொல்வதை எழுதுபவர்களையும் நியமிக்க வேண்டிய பரிதாப நிலைக்குச் சென்று கொண்டிருந்தது.
தகுதியில்லாத பல மாணவர்கள் இப்படிக் குறுக்கு வழியில் முன்னேறிக் கொண்டிருக்கிறதைப் பார்க்கின்ற மற்ற மாணவர்கள் ச்சே…. நாம கூட இப்படி ஒரு கட்டைபோட்டு தேர்வு எழுதுவதற்கு ஆள் பிடித்திருக்கலாமோ! என யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதே நிலை நீடித்தால் இனி மாணவர்கள் தொடக்கத்தில் இருந்தே படிப்பதில் கவனத்தைச் சிதறவிடுவார்கள். ஆங்… பார்த்துக் கொள்ளலாம். நாமும் ஒரு ஆசிரியரை வைத்து எழுதிக் கொள்வோம் என்ற நிலை உருவாகிவிடும்.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் குறைந்தது பத்துப்பேர் இப்படித் தேர்வு எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி சுகம் கண்டவர்கள் இனி சும்மா இருக்கமாட்டார்கள். இப்படி வரவர ஆட்கள் கூடிக் கொண்டே இருப்பார்கள். ஒரு அறைக்கு பத்துப்பேர் இப்படி எழுதத் துணிந்தாலும் இனி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இப்படி ஒரு நிலமை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு பாட ஆசிரியர்கள் அனைவரையும் பத்திரப் படுத்த வேண்டியது இருக்கும் பாடம் தவிர மற்ற ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள் பாட ஆசிரியர்கள் மொத்தமாகக் குவிக்கபட்டு ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேவையானவர்களை வாகனம் வைத்து அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய இழிநிலை வரும் இதனை இப்போதே எப்படி மாற்றி அமைக்கலாம் என்று யோசியுங்கள்.
பயிற்சி இல்லாதவனை போருக்கு அனுப்பினால்…!? முயற்சி இல்லாதனை தேர்வுக்கு அனுப்பினால்…!? அனுபவம் இல்லாதவன் பொறுப்பில் இருந்தால்…!? மரியாதை இல்லாதவன் அதிகாரியாய் இருந்தால்…!? நேர்மை இல்லாதவன் முக்கிய பதவியில் இருந்தால்…!? இரக்கம் காட்டாதவன் தீர்ப்புக் கூறினால்…!? அன்பு இல்லாதவன் சட்டம் படித்தால்…!? ஆதரவு இல்லாதவன் ஆட்சி அமைத்தால்…!? கண்ணியம் இல்லாதவன் பெண்ணியம் பேசினால்…!? அதுபோல் தகுதியில்லாதவன் தேர்ச்சியடைந்தால் எனவே எதற்கும் ஆசிரியர் துணைப்போகக் கூடாது கல்வித்துறை வேடிக்கை பார்க்கக் கூடாது விரைந்து செயல்படவேண்டும். கல்வித்துறைக்கு புதிய விடியலை தர வேண்டும்.
“முயற்சி இருந்தால்
முன்னேறு முடியாது
என்றால் கொஞ்சம் நகரு”