24

Jan

2026

ஆபத்தாகிறதா… ஆன்மீகம்?…

பார்க்கும் இடமெல்லாம் பக்தி வளர்ந்தது போல் கண்ணுக்குத் தெரிகிறது. கோவில்கள் எல்லாம் புனரமைக்கப்படுகிறது. பக்தி முயற்சிகள் விதவிதமாக வெளிப்படுத்தப்படுகிறது. பஜனைச் சத்தம் கேட்கிறது. பாதயாத்திரைகள் தொடர்கிறது. திருவிழாக்களின் சத்தங்கள் தெருவுக்குத் தெரு கேட்கிறது. இத்தனையும் வளர்ந்ததால் நாடு என்னாச்சு?… ஆத்திரத்தில் சொன்னால் எல்லாம் மண்ணாச்சு…என்பதுதான்

ஆன்மீகம் என்பது மனிதனின் மனதைப் பக்குவப்படுத்துவது. இதனால் மனிதன் தொடக்கத்தில் பசித்திருந்தான், தனித்திருந்தான், தவத்தில் இருந்தான். சமண பௌத்தத் துறவிகள் அனைத்தையும் துறந்து நிர்வாண நிலையில் இருந்ததால் மனிதர்களை விட்டு விலகியே இருந்தார்கள். ஆனால் அவர்களின் எண்ண அதிர்வுகள் இந்தப் பூமியைப் புனிதப்படுத்தியது ஆன்மீகம் என்பது தன்னை நிலைப்படுத்திப் பிறருக்குப் பாதை காட்டுவதும் பலன்கொடுப்பதுமாக இருந்தது.

பின்பு ஆன்மீகத்தில் கிறிஸ்தவம் வந்த பிறகு துறவறம் பிறந்தது. துறவறம் புனிதமாகக் கருதப்பட்டது. மக்கள் வழிபட்டார்கள். துறவிகள் மக்களுக்கு வழிகாட்டியாக நடந்தார்கள். துறவிகளுக்குள் உலக ஆசைகள் உட்புகுந்த பிறகு தாங்கள் நிலையை இழந்தார்கள் இதனால் மக்கள் அவர்களை மறுதலித்தார்கள் மதிப்புக் கொடுக்க மறுத்தார்கள்.

ஆன்மீகம் ஐம்பது வயதிற்கு மேல் இருப்பவர்களின் கையில் இருக்கும்போது அது யோகா, தியானம், பக்தி முயற்சிகள், வழிபாடுகள் என இருந்தது. பின்பு அது நாற்பது வயதைத் தாண்டியவர்களின் கையில் வந்தபோது ஆலயங்கள் புதுப்பித்தலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் புகுந்தது. பக்தி முயற்சிகள் இருந்தாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வந்தபிறகு அதன் புனிதம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.

இப்போது ஆன்மீகம் இளைஞர் கையில் வந்து இருக்கிறது. இப்போது குத்துப்பாட்டும், வெட்டிப்பேச்சும், கூச்சலும், குழப்பமும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. குடிப்பழக்கமும் அவர்களது வழிபாடாகிவிட்டது. எந்த நோக்கத்திற்காக அதுவும் மனிதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நமக்குள் வந்த ஆன்மீகம் இப்போது மனிதனை கட்டுப்பாடின்றித் திரியக் கற்றுக் கொடுத்துவிட்டது.

கோவில்களும், பக்தி முயற்சிகளும் பள்ளிக் கூடம் வரைப் புகுந்து அத்தனையும் கறைபடுத்த ஆரம்பித்துவிட்டது. ஆன்மீகம் இப்போது மனிதனின் அத்துமீறல்களை யாராவது தட்டிக் கேட்டால் மதத்தினைக் கொண்டு அவர்களை அடக்குவது என்ற மடத்தனமான சூழலை இன்று உருவாக்கிவிட்டது.

மாணவர்களின் அடையாளமே பள்ளிச்சீருடைதானே அதில் கூட இப்போது மதச்சாயங்கள் பூசப்பட்டுள்ளது. பள்ளிக்கு வருகின்ற நேரங்களில் கூட பாதயாத்திரைக்குச் செல்லும் வரம்புமீறும் வகுப்புவாதம் வளர ஆரம்பித்துவிட்டது. விரதம் இருக்கிறேன், வேண்டுதல் வைத்திருக்கிறேன் என்ற முறையில் கட்டுப்பாடின்றித் திரியவும், கண்டிக்கும் ஆசிரியர்களை மதத்தின் பெயரால் தண்டிக்கும் நெறிகெட்ட தலைமுறைகளும் நிறையவே பெருகிவிட்டன.

தேவாலயங்கள் மாணவர்களைத் தீட்டுப்படுததுகின்றதோ!. கோவில்கள் மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறதோ! மசூதிகள் மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கிறதோ! என நமக்குள் சில கேள்விகள் எழாமல் இல்லை. இதற்கு முன் ஒவ்வொருவரும் புனிதமாக வாழ மதங்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அவரவர் மதங்கள் வழியாக அவரவர் மனங்களைப் பக்குவப்படுத்துகிறார்கள் என்று நம்பினோம். ஆனால் இப்போது உள்ள ஆன்மீகம் என்பது அடுத்தவர்களை வெறுப்பது! வழிபாடு என்பது அடுத்தவர்களை வசைபாடுவது! அர்ச்சனை பிறரை அழிப்பது! கொண்டாட்டம் பிறர் கோவில்களை இடிப்பது! பவனி பிறரைப் பழிவாங்குவது! செபம் பிறருக்குச் சேதம் விளைவிப்பது! என்று தரம் தாழ்ந்துபோன ஆன்மீகத்தால் நாம் அழிவை நோக்கித்தான் பயணிக்க முடியும்!

கடவுள் வாழ்கிறார்! ஆனால் நாம் துன்பப்படுகிறோம்? கடவுள் குணமளிக்கிறார் நாம் மருத்துவமனையில் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுள் மீட்கிறார் நாம் போதைக்கு அடிமையாக இருக்கிறோம். அப்படி என்றால் நமது ஆன்மீகம் எதைத்தேடிப் போய்க்கொண்டிருக்கிறது?

ஒரு ஆன்மீகவாதி தனது உடலையும், மனதையும் தூயதாய் வைத்துக் கொண்டு எளிமையில் இருந்து, பொறுமையில் வளர்ந்து, இனிமையைக் கொடுப்பார். இப்போது உள்ள பூசாரிகளோ, சாமியார்களோ வியாதி இல்லாதவர்களை, மருந்துப் பொட்டலங்களைச் சுமக்காதவர்களை நீங்கள் பார்க்க முடியுமா? பெண்கள் பயமின்றி அவர்களோடு பயணிக்க முடியுமா? இத்தகைய ஆன்மீகவாதிகளைத் தருகின்ற ஆன்மீகம் ஒரு அர்த்தமுள்ளதாக இருக்க முடியுமா?

கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டுமென்றால் உண்டியலிலும், தங்கத்தையும் பதுக்கி வைத்திருக்கிற, கடவுள்களைத்தான் கைது செய்ய வேண்டும். சாமிகள் வரம் எல்லாம் தர வேண்டாம் தாங்களின் கோவில்களில் இருக்கிற பணத்தையும் நகையையும், பொருட்களையும் அள்ளிக் கொடுத்தாலே போதும் பூமியில் ஏழைகளே இல்லாமல் போவார்கள்.

ஒரு கதை சொல்வார்கள் ஒரு புராணத்தில் கடவுள் பிறக்க இடம் தேடி கிடைக்காததால் ஆடுமாடு அடைக்கும் இடத்திற்கு வந்தபோது அவர்கள் இடம்கொடுத்து இருக்கிறார்கள். அவரையே கடவுளாக வழிபட வந்த பூசாரிகள் அவருக்குக் காணிக்கையாக அவர்களின் ஆடுமாடுகளை எடுத்துக் கொண்டார்கள். பின்பு அவருக்கே கோயில் கட்ட, கோபுரம் அமைக்க, அந்தத் தொழுவத்தையும் புடுங்கி தொழுகைக் கூடமாக்கி விட்டார்கள். இப்போது கடவுள் பளிங்கு மாளிகைக்குள் வாழ்கிறார். மனிதர்கள் மட்டும் தெரு வீதியில் கிடக்கிறார்கள். இதுதான் இருபதாம் நூற்றாண்டின் ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது கொண்டாட்டங்கள், அது கேளிக்கையும் அல்ல வேடிக்கையும் அல்ல. ஆன்மீகம் மனிதர்களை இணைக்க வேண்டும். மதங்களால் மனிதர்களைப் பிரிக்கக் கூடாது. ஆன்மீகம் மகிழ்ச்சியால் சேர்க்குமே தவிர அடுத்தவர்களை இகழ்ச்சியாய் ஒதுக்காது.

மதங்களை அடையாளமாக எடுத்துச் செல்லாதீர்கள். அது அஸ்திவாராமாய் யாருக்கும் தெரியாமல் நமக்குள் இருக்க வேண்டும். மத அடையாளங்கள் வேசம் போடுவதற்கல்ல, வாழ்ந்து காட்டுவதற்கு! காவி உடையோ, வெள்ளை உடையோ, உங்கள் பாவங்களைக் கழுவாது பிறர் கண்ணீர் துடைப்பதே உங்களின் அடையாளமாக இருக்க வேண்டும்.

பிடித்தவர்கள் நம் மதம் என்பதற்காகப் பிடிக்காத செயலைச் செய்யும்போது பாராட்டுவதும், பிடிக்காதவர்கள் பிறமதத்துக்காரர்கள் என்பதற்காகப் பிடித்த செயலைச் செய்தாலும் தூற்றுவதும் இன்று ஆன்மீகத்தின் அராஜகமாகும். போட்டியால் பொறாமையால் அடுத்தவன் வளர்ச்சியைக் கண்டு அவதூறுப் பரப்பி அவனை அழிப்பதற்கு மதத்தையும், மதச்சடங்குகளையும் பயன்படுத்தும் மடையர்கள் பெருகிவிட்டார்கள்.

மதங்களை மறுபரிசோதனை செய்யுங்கள் மதத்தலைவர்களின் சுய ஒழுக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள். மதத் தலைவர்கள் தாங்கள் புனிதன் என்றும் போற்றுதலுக்கு உரியவன் என்றும் பறைசாற்றிக் கொள்கிறார்களே! எந்த மதத்தலைவர்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள்? குடிக்காத தலைவர்களைக் கொஞ்சம் கொண்டு வாருங்களேன் எந்தப் பிரம்மச்சாரியிடமும் நம் பெண்குழந்தைகளைப் பயமில்லாமல் பார்த்துவரச் சொல்ல முடியுமா? சுய ஒழுக்கத்தைத் துல்லியமாக அளக்கும் ஒரு கருவி வந்தால் இங்கு எத்தனை பேர் தன்னை அந்த ஆய்வுக்கு உட்படுத்துவார்கள்? யோசிப்போம்?

மதத்தைச் சாடுவது என் நோக்கமல்ல, மதத்தின் பெயரால் நடக்கும் அயோக்கியத்தனத்தை வெறுக்கிறேன். மதத்தலைவர்கள் அத்தனைபேரும் பொதுமக்களைப்போல் பொறுப்பான வேலை செய்து பொருள் நாட்ட வேண்டும். சாமியார்கள் எல்லாம் சாதாரண மனிதன் போல் வாழ வேண்டும். மதங்கள் மனதைச் சுத்தப்படுத்தட்டும். வழிபாடுகள் வாழ வழிகாட்டட்டும் வேத நூல்கள் பாவமில்லாமல் வாழப் பழக்கட்டும். விழாக்களில் பகிர்வு இருக்கட்டும். சகிப்புத்தன்மை, சகோதரப்பாசம், சந்தோசம் இது மட்டுமே இறைவனைத் தேடும் பக்தர்களின் பலிப் பூசையாக அமையட்டும்.

எம்மதத்தையும் ஏற்றுக் கொள்ளும் இதயமே கோவிலாகட்டும். நதிகள் எதுவாயினும் வந்து கலக்கும் இடம் கடலாகட்டும், அதுவே கடவுளும் ஆகட்டும். மக்கள் எல்லோரும் மழைத்துளிகள். கடவுள் கடல்! நாம் சந்திக்கும் இடமெல்லாம் சந்தோசமாகட்டும். இதுவே நமக்கு வேண்டிய ஆன்மீகம். ஒன்றாகக் கலப்போம்! நன்றாக இருப்போம்!

“கடவுளுக்குப் பிடிக்குமென்று
மனிதர்களைக் கடிக்காதே
கடவுளே நான்தான் என்று
மனிதர்கள் முன் நடிக்காதே!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES