30

Dec

2024

இதுவும் கடந்து போகும்!…

“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தை இன்று எல்லோராலும் உச்சரிக்கப்படுகிறது. இது ஏதோ மகான் மன நிம்மதிக்காகச் சொன்ன மகத்தான வார்த்தை என எண்ணிக் கொள்கிறோம். நாம் சந்தோசமாக இருக்கும்போது யாராவது இந்த வார்த்தையை உச்சரித்திருப்போமா? இல்லையே! ஏதோ ஏற்றுக்கொள்ள முடியாத வலி இதயத்தைத் தாக்கும்; போது அதை மாற்ற இயலாததால் நாமே முனங்கிக் கொள்ளுகிற வார்த்தை. இல்லையென்றால் அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அதன் உண்மையை உணராமல் உரைக்கின்ற வார்த்தை அது.

எப்போதும் போய் வா என்றுதான் சொல்வோம் எது திரும்பி வராதோ! எது வரக்கூடாதோ! அதனை நாம் சொல்லும்போது “இதுவும் கடந்து போகும்” என்போம். இதோ 2024ஆம் ஆண்டு நம்மிடம் விடைபெறுகிறது. இனிமேல் இப்பூமி இருக்கும்வரை இது வரப்போவதில்லை. கடந்து போய்விட்டது கஷ்டமான ஒன்று நம்மைக் கடக்காமல் மனதை அழுத்திக் கொண்டு இருந்தால் அந்த வலிக்கு மருந்தாக வந்து விழுகின்ற வார்த்தைதான் இதுவும் கடந்து போகும்.

கோடைக் காலத்தில் யாராவது குற்றாலம் வருவார்களா? நண்பகல் நேரத்தில் மெரினா கடற்கரையில் நடமாடுவார்களா? ஏன் சூரியன் நம்மைச் சுட்டெரிக்கும் அதே கடலுக்குள் நிற்பவர்கள், நதியில் குளிப்பவர்கள் சுகமாய் இரசிப்பார்கள் ஏன்? இதில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மழைக் காலத்தில் குற்றாலத்தில் கொட்டாத தண்ணீரா? புயல் காலத்தில் கடற்கறையை மூழ்கடிக்காத தண்ணீரா? இல்லையே! ஆனால் அது கடந்து போய் விட்டது. கடத்தியும் விட்டு விட்டது தனக்கென்று அது தனக்குள் எதுவும் வைத்துக் கொள்ளாததால் இன்று மொட்டைப் பாறையாய் சுடும் மணல்வெளியாய் அத்தனை பேரையும் ஆத்திரத்தில் திட்ட வைக்கிறது.

எதுவும் கடந்து போகட்டும் அல்லது நடந்து போகட்டும் அதனால் நாம் கற்றுக் கொண்டது என்ன? எதையும் கற்றுக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப இந்தத் தீராத துயரத்தில் விழும்போதுதான் இந்தச் சமுதாயம் அவனை முட்டாள் என்கிறது. இந்த உலகப் பார்வையில் நீ எத்தனை படித்திருந்தாலும், பட்டங்கள் பெற்றிருந்தாலும் பக்குவம் இல்லை என்றால் நீ முட்டாளே! எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாலும், வசதிகள் பெற்றிருந்தாலும் நிம்மதி இல்லையென்றால் நீ முட்டாள் தானே! பக்குவம் இல்லாத ஒருவனிடத்தில் கிடைக்கின்ற ஒவ்வொன்றும் குரங்கு கையில் கிடைக்கின்ற பூமாலைதான்.

கடந்த காலம் முழுவதும் நம்மைக் கடந்து சென்றதுதான். நம்மோடு வாழ்ந்து மறைந்த அத்தனை பேரும் நம்மைக் கடந்து சென்றவர்கள்தான் நாம் படித்த, கேட்ட, அனுபவித்த அத்தனையும் நம்மை கடந்து சென்றதுதான். இத்தனையும் நமக்குள் எதுவும் செய்யாமல் இருந்தால், நீர் இல்லாத போது வற்றிக் கிடக்கும் கடற்கரை மணலைப் போலவும் காய்ந்து கிடக்கும் குற்றாலப் பாறையைப் போலவும் வாழ்க்கை வறட்சியாகத்தான் இருக்கும்.

நம் வாழ்க்கையெனும் சாலையில் பலர் நம்மைக் கடந்து போய் இருப்பார்கள் சிலர் நம்மைப் பார்த்து புன்னகை சிந்தியவர்கள், சிலர் நம்மை நலம் விசாரித்துச் சென்றவர்கள், சிலர் நமக்காகக் காத்து இருந்தவர்கள், சிலர் நம்மை அழைத்துக் கொண்டு சென்றவர்கள், சிலர் உதவி செய்து சென்றவர்கள், சிலர் ஒரு நிமிடம் நமக்காக நின்று சென்றவர்கள், சிலர் உரசிக் கொண்டு, உறுமிக் கொண்டு சென்றவர்கள், அத்தனைபேரும் நம்மைக் கடந்து சென்றவர்கள்தான். அத்தனை பேரும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றவர்கள். ஆனால் நாம் படிக்க மறந்த அந்தப் பாடம் என்ன? சிந்தியுங்கள்!

பல நல்ல நிகழ்ச்சிகளுக்கு நாம் சென்றிருக்கிறோம். நாம் அவர்களுக்கு முக்கியம் என்று அழைத்தார்கள் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம் சில துக்க வீட்டுக்குச் சென்றிருப்போம். அவருக்கு நானும் முக்கியம் என்று அவர்களுக்குச் சொல்ல, இறந்தவர்களுக்காக நாம் அத்தனை சடங்குகளையும் செய்திருப்போம். அவர் ஆன்மா சாந்தியடைய! வேண்டாம் நம்மோடு அவர்கள் நினைவாக இன்றும் வாழட்டும் அவர்கள் செய்ய மறந்த நல்ல செயல்களை நம் வழியாகச் செய்வதால் அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

நல்ல நண்பர்கள் சிலர் நம்மைவிட்டு பிரிந்து சென்றிருப்பார்கள். மீண்டும் கைகோர்க்க வழிதேடுவோம். சிலர் நமக்கு இன்னும் நெருக்கமாக வந்திருப்பார்கள். இன்னும் நெருக்கமாக அவர்களைப் பிடித்து கொள்வோம். இந்த சமுதாயத்தின் கட்டுக்களை உடைத்தெறிந்து விட்டு மதக்கோட்பாடுகளை மறுதலித்துவிட்டு நம்மை மனதார ஏற்றுக் கொண்டவர்களை தேடிப்போய், ஓடிப்போய் அணைத்துக் கொள்வோம். உயிருள்ளவரை அவர்களை இணைத்துக்கொள்வோம்.

நினைத்தது நடக்கவில்லை என்று மனதிற்குள் அழுத தருணங்கள், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நம்மைக் குறுக்கிக் கொண்ட நேரங்கள். நம்முடைய வறுமை, தாழ்வு மனப்பான்மை, குற்றப்பழி உணர்வு, கூச்சம், வெட்கம், இயலாமையால் கூனிக் குறுகி நின்ற நேரங்களை நினைத்துப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளிவர முயற்சி எடுப்போம். இன்னும் கொஞ்ச நேரம் அவர்களோடு இருந்திருக்கலாம் இன்னும் நல்லது செய்திருக்கலாம் என்பதனை எண்ணிப்பார்த்து எதிர்வரும் காலத்தில் அதற்கு ஈடு செய்வோம். அந்த இடத்தில் நான் அப்படிப்பேசி இருக்கவேண்டாம் என்ற நேரங்களை இனிமேல் அப்புறப்படுத்துவோம்.

நம்மை அறியாமலேயே நாம் யாருடன் இருக்க நினைத்தோமோ! அவர்களோடு இல்லை காரணம் நமதுவேலை, நமதுதேவை, பணம், பிறர் என்ன நினைப்பார்களோ! இதுதானே நம்மை நெருங்கவிடாமல் தடுத்தது. இனிமேல் நாம் அதற்கு என்ன செய்யப்போகிறோம்? நமது வாழ்வு விலைமதிப்பானது அதனை நமது சந்தோசத்திற்காகவும், பிறரைச் சந்தோசப் படுத்துவதற்காகவும் வாழ்ந்துவிட்டு போவோமே! எதையோ இழந்து விடுவோமா? என்பது தானே நமது பயம்! அதிலிருந்து எப்போது வெளிவரப் போகிறோம்?.

இன்னும் எத்தனை காலம் இந்தப் பூமியில் இருக்;கப்போகிறோம்? அதற்குள் நாம் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்போகிறோம்? நாள் முழுவதும் நல்லவர்களாய் நடிப்பதே நமக்குப் பெரிய வேலையாய் போய்விட்டது. எத்தனையோ ரவுடிகள் கூட பல நல்ல செயல்களை செய்து விட்டுத்தான் செத்திருக்கிறார்கள். எத்தனையோ நடிக நடிகைகள் எண்ணற்ற மனிதநேயச் செயல்களைச் செய்திருக்கிறார்கள். பகல்வேசம் போடுகின்ற சாமியார்களைவிட, பகட்டான துணி உடுத்துகிற தொழிலதிபர்களைவிட நாம் கேவலமாகப் பார்க்கின்ற நடிகைகள் எவ்வளவோ இந்தச் சமுதாயத்திற்கு அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிய முயற்சி செய்யுங்கள்.

இந்த வருடம் முடியப் போகிறது. புது வருடம் பிறக்கப் போகிறது. எல்லோரும் கோவில், குளம், என்று கும்பிட்டு மங்களகரமான புத்தாண்டைத் தொடங்கப் போகிறோம். கோயிலுக்குப் போகிற நீங்கள் என்றாவது முதியோர் இல்லம், அனாதைகள் இல்லம் சென்றிருக்கிறீர்களா? சென்று வாருங்கள். கோவில் உண்டியல்களில் காசுபோட்டு பழக்கப்பட்டவர்களே! பிச்சைக் காரர்களின் தட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? பாருங்கள் ஏற்கனவே வெளிச்சமாக இருக்கின்ற கோயில்களில் விளக்கு ஏற்றுபவர்களே! பல குடிசைகள் இன்னும் இருட்டாகவே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? பேசாத தெய்வங்களுக்கு பட்டுச்சேலை கட்டும் பக்தர்களே இங்கு பலர் உடுத்தத் துணியின்றி நிர்வாணமாய் திரிகிற நிசம் உங்களுக்குத் தெரியுமா? இவையெல்லாம் உங்களைக் கடந்து போகக் கூடாது உங்கள் உள்ளத்தில் அது பாய் விரித்து படுக்க வேண்டும். அதன் வெளிப்பாடு இந்த சமுதாயத்தின் நன்மைக்காக உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

கணிப்பொறிக் காலத்திற்கு மனிதன் வந்தபிறகும் கடவுளை நாம் கல்லிலும், மண்ணிலும் தான் தேடுகிறோம். ஏனென்றால் இதயம் கல்லாகவும் மூளை மண்ணாகவும் இருப்பவர்களால் எந்த முன்னேற்றமும் இந்தப் பூமிக்குக் கிடையாது. இயற்கை கடவுளாக இருந்து நமக்கு எல்லா வளமும் கொடுக்கிறது. இதனைச் சிலர் பதுக்கியும் ஒதுக்கியும் வைத்துக் கொள்வதால் சிலர் இங்கு ஏழைகளாக இருக்கிறார்கள். இருப்பதை இல்லாதவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இதயம் உள்ளவர்கள் ஒன்று சேருங்கள். அன்பளிப்பாக, உதவியாக, அடுத்தவர்களோடு அடிக்கடிப் பரிமாறிக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் போல் வாழ நினைக்க வேண்டாம். அடுத்தவர்களுக்காக வாழ நினைப்போம். நான் எப்போதும் கார் இல்லையே என்று வருந்துபவன் அல்ல. எனக்கு கால் இருக்கிறது என்று சந்தோசப்படுபவன். என் கரங்கள் அடுத்தவர்களுக்காக எப்போதும் வெட்கம் இல்லாமல் பிச்சையெடுக்கும் அது எனக்குப் பிடிக்கும். கொடுக்கின்ற உங்களையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். உங்களை நான் எப்போதும் கடந்து போகமாட்டேன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து போவேன். வாருங்கள் பயணிப்போம்.

“பிச்சைக்காரர்களுக்காய்
பிறரிடம் கையேந்துவோம்
பாரி வள்ளலாய்…
பிறருக்கு பரிசு வழங்குவோம்.”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES