28
Feb
2024
இப்போது பூமி வெப்பமாகி வயல்கள் வறட்சியாகி நிலங்கள் நிர்கதியாகிக் கொண்டிருக்கிறது. இங்கே வெயில்கள் மனிதர்களின் பேராசையை வைத்து நிழல்களைத் திருடிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் மரங்களை வெட்ட வெட்ட வெயில்கள் நிழல்களை விழுங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் நாடே வறட்சியானது போல் இப்போது நாட்டுத் தலைவர்களுக்கும், பெரியோர்களுக்கும், எடுத்துக் காட்டுகளுக்கும் வறட்சி ஏற்பட்டு இன்னும் நாம் ஏட்டைத்தான் நம்பிக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது இன்னும் காந்தியும், காமராஜரையும் தான் சொல்ல வேண்டியுள்ளது.
தலைவன் என்பவன் யார்? அவனை எவ்வாறு கண்டுபிடிப்பது? தலைவர்கள் இருக்கிறார்களா? பிறக்கிறார்களா? உருவாகிறார்களா? என்றால் உருவாக்கப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தால், பள்ளியால், சமுதாயத்தால், புத்தகங்களால், வழிகாட்டுதலால் உருவாக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் இன்றையக் குழந்தைகளே! நாளையத் தலைவர்கள். இன்றைப் பள்ளிகளே! நாளையத் தலைவர்களை உருவாக்கும் பட்டறைகள். எனவே நாளையத் தலைவர்களுக்கு இப்போது தேர்வுகள் நடைபெறுகிறது. அவர்களுக்கு எவ்வாறு உதவப் போகிறோம்? அவர்களை எவ்வாறு உருவாக்கப்போகிறோம்?
இன்றைய மாணவர்கள் நாளையத் தலைவர்கள் என்று? எல்லோரும் சொல்லுகின்ற பல்லவிதான். ஆனால் அதற்கு நமது பங்களிப்பு என்ன? என்று கேட்டுப்பாருங்கள் சத்தமில்லாது நகர்ந்து விடுவார்கள். அவரவர் குழந்தைகளுக்கு அவரவர் பொறுப்பு. இதில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? என்று நகைப்பர் நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் உதவ வேண்டும்.
முதலில் குடும்பத்தார்கள். இவர்களுக்குச் சொல்லாமலேயே பற்றிக் கொள்ளும் தேர்வுச் சுரம். எனவே சொந்தப் பிள்ளை என்ற சுயநலத்தால் அவனை விட அதிக அக்கறையோடு செயல்படுவார்கள். அடுத்து அவனுடைய ஆசிரியப் பெருமக்கள் மாணவன் மீது கொண்ட அன்பினாலும் தனது பாடத்தில் எவனும் தோல்வியைத் தழுவி விடக் கூடாது என்ற தயக்கத்தினாலும் இடைவிடாமல் அவனை நச்சரித்து, எச்சரித்து, படிக்கச் சொல்லி பாசாக்கி விடுவார்கள் உடன் படிப்பவர்கள் அவ்வப்போது அலைபேசியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்துவார்கள். உடனிருப்பவர்கள் உதவி செய்வார்கள்.
அது மட்டும் போதுமா? அப்படித்தான் நாம் அனைவரும் எண்ணுகிறோம். ஆனால் நம் ஒவ்வொருவருமே இது தேர்வுக்காலம் என்று எண்ண வேண்டும். அது எவர்பிள்ளை எழுதினாலும் நமக்கும் ஒரு நாள் உதவி செய்வான் என நம்ப வேண்டும். நாளை ஒரு நாள் நமக்கு ஏற்படுகின்ற நோய்களை நீக்க நல்ல ஒரு மருத்துவர் இந்த மாணவர்களிடத்திலிருந்து வரலாம்! நம்மை அநியாயமாகத் துன்புறுத்தும் நபரிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு காவல் அதிகாரியாக வரலாம்! நமக்குத் தேவைப்படும் பணத்தொகையை வங்கியின் மூலம் உதவி செய்யும் ஒரு வங்கி மேலாளராக வரலாம்! நமக்கு ஒரு உதவித்தொகை தந்து நல்ல பல திட்டங்களால் நம்மைக் காப்பாற்றும் ஒரு அரசியல்வாதியாக வரலாம்! நமது குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அன்பு செய்து அரவணைத்து நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் தரும் நல்லாசிரியராக வரலாம்! ஏதோ ஒருவகையில் நமக்கு எதிர்பாராத விதமாக வரும் தலைவர்களை இன்று அடையாளம் காண முடியாவிட்டாலும் எதிர்கால நலன் கருதி இன்று அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போமே!
சாலையில் வாகனத்தில் பயணிக்கும் பயணிகளே! உங்கள் வேகத்தை அங்கு காட்டாதீர்கள். மாணவர்கள் தேர்வுக் காலத்தில் பாடத்தைச் சிந்தித்துக் கொண்டு போகும்போது அவர்கள் அருகில் அதிவேகத்தில் போய் அச்சுற வைக்காதீர்கள். பரிச்சைக்குப் போகும்போது பாதி வழியில் உங்கள் வாகனத்தில் உதவிகேட்டால் அவர்களுக்கு உதவுவதைப் புண்ணியமாக எண்ணிக் கொள்ளுங்கள்.
பேருந்து ஒட்டுநர்களே! உங்களை நம்பிப் பல மாணவர்கள் இருக்கிறார்கள். ஆகவே இப்போது உங்கள் கடமை உணர்ச்சியைக் காட்டிவிடாதீர்கள். இடையில் நிற்காமல் எங்கும் சென்று விடாதீர்கள். தன் சொந்த வாகனத்தில் செல்ல முடியாத, செல்ல வழியில்லாத ஏழைக் குழந்தைகள் உங்களைத் தான் தெய்வமாக நம்பியுள்ளது. எனவே நின்று, நிறுத்தி நிதானமாக அவர்களை அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.
தேர்வு மையத்திற்கும் அவர்கள் குடியிருக்கிற ஊருக்கும் சரியான பேருந்து வசதியில்லாத போது முடிந்தவரை வாகனத்தில் செல்பவர்கள் உதவிசெய்யுங்கள். தேர்வு எழுதிவிட்டு களைத்துவரும் மாணவர்களுக்கு வழியில் இருக்கும் வழியோரக் கடைக்காரர்களே உதவி செய்யுங்கள். கடவுள் பக்தியில் உச்சந்தொட்ட பக்தி மான்களே! கோவில் கொடைகளைக் கொஞ்ச நாள் ஒத்தி வையுங்கள். உங்கள் ஆடல் பாடல்களைக் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். சத்தமிடாதீர்கள். இங்கு குழந்தைகள் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறது என்று தெருவிற்குத் தெரு போர்டு வையுங்கள். தெருக்களின் முச்சந்தியில் பேசும் தெண்டச் சோறுகளே! கொஞ்ச நாள் உங்கள் கூட்டுக்குள் அடங்கியிருங்கள்.
அரசின் கவனத்திற்கு! மக்களுக்காக உள்ள அரசு என்று மார்தட்டிக் கொள்பவர்களே உங்கள் டாஸ்மார்க்கை கொஞ்சம் அடைக்க முடியுமா? இதனால்தான் இங்கு பல குழந்தைகள் தாங்கள் பாஸ்மார்க் வாங்க முடியாமல் பரிதவிக்கிறார்கள். குடித்தனம் நடத்த வேண்டிய குடும்பத்தலைவன் தனத்தை குடியில் அழிக்கின்ற தற்கொலைகள் உங்களால் தானே அரங்கேறுகிறது.
கல்யாணம், கச்சேரிகள் எல்லாம் கொஞ்சம் பாட்டுக்களை நிப்பாட்டி வைத்துக் கொள்ளுங்கள். கோயில்களுக்கு நேர்ந்து விட்டு அன்னதானம் செய்கின்ற அமுத சுரபிகளே! கொஞ்சம் பள்ளியின் பக்கம் வந்து பசியோடு பரிட்சை எழுத வருகிறவர்களுக்கு உங்கள் பந்தியில் கொஞ்சம் இடம் கொடுங்களேன்.
ஊருக்குப் பொதுவில் உள்ள கட்டிடங்களில் எல்லாம் தேர்வுக்குப் படிக்கிற குழந்தைகளை அமர வையுங்கள். பாடங்களை தெரிந்தவர்கள் அவர்கள் பக்கத்திலிருந்து சொல்லிக் கொடுங்கள் மற்றவர்கள் அவர்களுக்கு உணவு, நீர், தேநீர், பிஸ்கட் எனக் கொடுத்து உதவுங்கள்.
வாகனங்கள் வைத்திருப்பவர்கள் “தேர்வுக்கு இலவசம்” என எழுதிவைத்து அவர்கள் தேவைக்கு உதவுங்கள். அந்த நேரம் ரோட்டுக்கு வந்து பெண் குழந்தைகளைப் பார்த்து சொள்ளு வடிக்கின்ற ரோட்டோர ரோமியோக்களை காவல் துறையினரே கொஞ்சம் கவனித்து அனுப்புங்கள். சரியான நேரத்திற்கு பேருந்து வராமல் அவதிப்படுகின்ற குழந்தைகளை ஆட்டோக்கார அண்ணாச்சிகளே! கொஞ்சம் இலவசப் பயணத்திற்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுங்கள்.
குழந்தைகள் தேர்வுக்குப் படிக்கின்றன என்று எத்தனை அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கிறார்கள்? அதே போல் நாம் விடுப்பு எடுக்க வேண்டாம். ஏதாவது அவர்களுக்காக உழைப்போம். எல்லாக் குழந்தைகளுக்கும் உதவ முடியாவிட்டாலும் ஏதாவது ஒரு சில குழந்தைகளுக்காவது உதவி செய்வோமே! கண்டிப்பாக எல்லோரும் ஒரு சபதம் எடுப்போம் ஏதாவது ஒரு உதவியை இந்தக் குழந்தைகளுக்கு நான் செய்வேன். பெற்றால் தான் பிள்ளையா? மற்றதெல்லாம் பிள்ளை இல்லையா? பிறப்பால் தொடர்வதல்ல உறவு? பிணைப்பாலும், அணைப்பாலும் தொடர்வதே நம் உறவாகும் எனவே உதவுவோம், உயர்த்துவோம் எதிர்காலம் செழிப்புற இன்றைய மாணவர்களே வாருங்கள் அனைவரையும் வாழ்த்தி அனுப்புவோம்!
“சத்தமிடாதீர்கள்
இங்கே குழந்தைகள்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்”