19
May
2023
கோடை வெயில் வாட்டிக் கொண்டு இருந்தாலும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏதாவது இன்பச்சுற்றுலா சென்று வருவோமே! என்று எண்ணுவோம். குழந்தைகளும் இப்போது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்பதால் எப்போது பள்ளி முடியும்? எங்கேயாவது போய் வருவோமே!? என ஏங்குவார்கள். எனவே, கட்டுகளை உடைத்து, விலங்குகளை முறித்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடிக்கின்ற குழந்தைகளை எங்கே அழைத்து செல்லப்போகிறோம்?
சிலர் மலைப்பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து மகிழ்வர். சிலர் அழகான அரண்மனைகள், கோட்டைகள் என அழைத்துச் சென்று மகிழ்வர். சிலர் கடல் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலையோடு விளையாடி, தன் கையால் தண்ணீரில் முகம் பார்த்து, முகம் கழுவி, வாய் கொப்பளித்து, அலை வரும் போது ஓடி, பின்பு அலையிடம் தோற்று ஆடைதனை நனைத்து விளையாடும் விளையாட்டில் மகிழ்வர். சிலர் கோவில்களுக்கு அழைத்துச் சென்று, பக்தியை வளர்த்து, பரவசத்தை விதைத்து, பிராத்தனையில் உருகி, கோவில் சடங்குகளில் கரைந்து, நினைவுப் பொருட்களை அணிந்து, விளையாட்டுப் பொருள்களை வாங்கி வீடு வந்து சேருவதும் உண்டு. இதனால் குழந்தைகள் மகிழ்ந்தனர். குழந்தைகள் என்ன கற்றனர்?
சந்தோசமாக இருக்க வேண்டிய நேரம். இதில் கற்பதற்கு என்ன இருக்கிறது? எப்போதுமே கற்றுக் கொண்டிருக்கிற குழந்தைகளை இப்போதாவது விட்டுவிடுங்களேன் என கூறுவது உண்மைதான். ஆனால் நான் கற்க சொல்வது பரிட்சைக்கு அல்ல வாழ்க்கைக்கு. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிற பள்ளிக்கூடம் எங்கிருக்கிறது? இருக்கிறது! அது நமக்கு தெரியாமல் இருக்கிறது!
வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் வரப்பிரசாதம் நமது சொந்தக் கிராமம். அங்கு பாடங்களைப் பக்குவமாய் கற்றுக் கொடுப்பவர்கள் நம் உறவினர்கள். இவர்கள் வார்த்தையால் கற்றுக் கொடுப்பதை விட வாழ்க்கையால் நாம் படிக்க வேண்டியது ஏராளம். உறவுகளைச் சொல்லி அழைப்பார்களே அது ஓராயிரம் அரிச்சுவடிகளுக்குச் சமம். உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாதாடுவார்களே அதனை எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாதே. ஏனென்றால் இங்கு இதயம் இணைந்தவர்களே அதிகம். எங்கு எவர் தப்புச் செய்தாலும் யாரும் தட்டிக் கேட்பார்கள் இந்தத் துணிச்சலை நாம் கிராமத்தில் கற்காமல் வேறெங்கு கற்க முடியும்.
சேவல் கூவி காலை விடிவதை நாம் வேறு எங்கும் கணிக்க முடியாதே! அந்த வைகறைப் பொழுதில் தூக்கம் கலைந்து படுக்கை விட்டு எழாமல் பல கதைகள் பேசுவோமே! அதனை எந்தப் பல்கலைக்கழகம் கற்றுக் கொடுக்கும்? எழுந்தவுடன் வயல்வெளிப் பக்கம் சென்று காலைக் கடன் கழித்து, வேப்பங்குச்சியை ஒடித்து, பல்த் துலக்கி, கிணற்றுத் தண்ணிரில் குளித்து, துண்டை உலர்த்த தோளில் போட்டுக் கொண்டு வருவோமே. இவர்களுக்கு எந்த மருத்துவர் இந்த வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தார்? இவர்கள் எல்லாம் எந்தப் பாத்ரூமிலும் வழுக்கி விழுந்து இடுப்பை ஒடித்துக் கொண்டு சாகும் வரைச் சவமாய் கிடந்ததில்லையே!
நாயோடு ஒடுகிறோம் கன்றுக் குட்டியோடு விளையாடுகிறோம். ஆட்டுக்குட்டிகளைக் கொஞ்சுகிறோம். கோழியைப் பிடித்து வந்து முட்டைக்கு அடைக்கிறோம். இதெல்லாம் எந்தப் பட்டினத்திலாவது சுட்டுப்போட்டாலும் கிடைக்குமா? உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் என்று எந்த இறையடியாரும் எங்கள் ஊரில் வந்து சொல்லவில்லையே! இங்குள்ள மக்கள் அனைவரும் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். யாரும் பார்க்கிறார்களா? எனப் பாசாங்கு செய்து வேலை செய்யும் பழக்கம் அந்தப் பாமர மக்களிடம் இல்லையே! இதனை அவன் எங்கு போய் படித்து வந்தான்? அது சரி, படித்தவன்தானே இந்தப் பாசாங்கு வேலையைச் செய்கிறான். யாருக்கு ஆபத்து என்றாலும் ஊர் கூடி ஒற்றுமையாய் நிற்கிறதே! எனக்கென்ன என்று யாரும் எப்போதும் சொன்னதில்லையே!
தனியாகப் பெண்ணொருத்தி வயல் வெளியில் இரண்டு காளை மாடுகளைப் பிடித்துக் கொண்டு வருகிறாள். அவள் முகத்தில் பயமே தெரியவில்லையே! அடுத்த வயல்வெளியில் ஆணொருவன் மீது சேற்றை எறிந்து ஒரு பெண் விளையாடுகிறாள். யாருக்கும் சந்தேகம் வரவில்லையே! இதனையே நகரத்திற்குக் கொஞ்சம் நகர்ந்து பாருங்கள். கண், காது வைத்து நாசுக்காகப் பேசுவார்களே! ஊரில் யார் வீட்டில் விழா என்றாலும் ஒன்று கூடி மகிழ்கிறார்களே. யாரும் எனக்கு வேலை இருக்கிறது என்று சாக்குப் போக்குச் சொல்லவில்லையே. இது இக்காலத்தில் சாத்தியமாகுமா? ஆளுக்கொரு அறை என்பது அங்கு இல்லை. குடிசையில்தான் ஒரு கூட்டுக் குடும்பமே குடியிருக்கிறது. இதுதானே இன்றைய காலத்தின் கோயில். இதனை விட்டுவிட்டு எங்கே போய் எந்தத் தெய்வத்தைத் தேடப் போகிறோம்?
இந்தக் கிராமத்து மண்ணுக்கென்று ஒரு வாசம் உண்டு. கிராமத்துப் பெண்களிடம் நிறையப் பாசம் உண்டு. பாசம் உண்டு ஆபாசம் கிடையாது. நேசம் கொண்டு நெருங்குவார்கள் வேசம் போட்டு ஏமாற்ற மாட்டார்கள். நமக்காகத் துடிப்பார்கள் நம்மிடம் நடிக்கமாட்டார்கள். துரோகம் என்பது அவர்கள் நினைவைக் கூட நெருங்காது. கூட இருந்து குழி பறிப்பது அவர்கள் குலத்திற்கே தெரியாது. நம்பி கழுத்தறுப்பதோ, கைவிடுவதோ, அவர்கள் இருப்பிடத்தைக் கூட அணுகாது. குடும்பமே கோவில். குழந்தைகள் வரம். பெரியோர்கள் தெய்வம். உறவுகள் சொர்க்கம் இப்படி ஒரு வாழ்க்கை இன்றும் கிராமத்து மண்ணில் நிலவிக் கொண்டிருக்கிறது. நாகரீகம் கருதி நகரத்திற்கு வந்தவர்கள் நரகத்தில் கிடக்கிறோம். சொர்க்கத்திற்கே ஒரு முறை சுற்றுலா சென்று வர வாருங்கள். நம் சொந்தக் கிராமத்திற்குச் சென்று வருவோம்.
கல்விச் சுற்றுலா, கற்றுக் கொள்வதற்காகச் செல்வது வாழ்க்கைச் சுற்றுலா வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்துவிட்டு வருவது இங்கு நகரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போனால் நம்மை நசுக்கிவிடுவார்கள். கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் வாழத்துடிக்கின்ற நம் குழந்தைகளை அவர்களிடம் அனுப்புங்கள். வாழும் கலையைக் கற்றுக் கொண்டுவரட்டும். ஊடகங்களை மறந்து, ஓடிப் பிடித்து விளையாடட்டும். கூட்டுக் குடும்பத்தோடு கொஞ்சிக் குலாவட்டும். வாழும் போதே சொர்க்கத்தில் வாழ்ந்து பார்க்கட்டும். புறப்படுங்கள்! போய் வருவோம்!!
“சொர்க்கம் இருப்பது
எங்கே!?
சொந்தம் இருப்பதே
அங்கே!”