04
Jan
2022
அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இந்தக் கடிதத்தின் மூலம் கண்ணுக்குள் விழுந்து நெஞ்சுக்குள் கலந்து எண்ணத்தில் எழும் என் எழுத்துக்கள் உங்கள் இதயத்திலும் படர்ந்து இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எனது வலைத்தளப் பயணம் பத்தாண்டு முடித்து பதினோராவது ஆண்டில் இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் பாதுகாப்பிலும், பங்களிப்பிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து சிறகடித்துப் பறக்கிறது.
சிலர் வாழ்த்தினீர்கள், சிலர் வழிமொழிந்தீர்கள், சிலர் பலருக்கு அனுப்பி ஆனந்தப் பட்டீர்கள், சிலர் ஆலோசனை நல்கினீர்கள். சிலர் ஆதரவு தந்தீர்கள். சிலர் விமர்சித்தீர்கள். சில விடியலைத்தந்தீர்கள். சிலர் உடனிருந்தீர்கள். சிலர் உற்சாகப்படுத்தீர்கள். மொத்தத்தில் ஒரு பட்டம் விட்டுச் சந்தோசப்படும் சிறுவனைப்போல் புறப்பட்ட என்னை ஒரு ராக்கெட் செய்து அனுப்பக் கூடிய அளவில் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். வணங்குகிறேன். வாழ்த்துகிறேன்.
ஆரம்பத்திலிருந்து என்னோடு பயணிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களையும் என் ஆத்மார்த்தமான நன்றியினை உரிதாக்குகிறேன். இந்த உலகம் பெரியது ஆனால் நம் வாழ்வு குறுகியது. வாழ்நாளில் இது சாதனையாகவோ, வேதனையாகவே இதனை எண்ணியதில்லை இதன் மூலம் என் வாழ்நாளில் பலருக்குக் கிட்டாத எண்ணற்ற உறவுகளோடு உறவாடி மகிழ்வதற்கு அருமையான ஆயத்தமாக, இணைப்புப்பாலமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
அகில உலகில் அன்றாடம் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் என்னையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பவற்றை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். பலரை பாதித்தவைகள் என் மனதிற்குள் போகாமல் இருக்க நான் மரக்கட்டை அல்ல. எதிர்வீடு தீப்பற்றி எரியும் போதே அதனை நான் ஏன் என்று ஆராயும் அளவிற்கு எனக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.
எனது எழுத்துலகப் பயணத்திலும் சமுதாயத்தின் சாரம்சம் தான். விரவிக்கிடக்கும் மனதில் பட்டதை எழுதியதை விட மனதைச் சுட்டதைதான் அதிகமாக பகிர்ந்திருக்கிறேன். எழுத ஆரம்பித்தபோது எழுந்த விமர்சனங்கள் ஏளனமாக இருந்தது. பின்பு அவர்களே மௌனமானார்கள். இப்போது வாழ்த்துகிறார்கள். இதுதான் வாழ்க்கை யாரும் விமர்சிக்கிறார்கள் என்று உங்கள் விருட்சத்தைச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.
அவர் என்ன சொல்லுவார்? இவர் என்ன சொல்லுவார்? என்று எண்ணிக்கொண்டே இருந்தால் நாம் சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டுவிடுவோம். ஆகவே எவர் சொல்வதையும் கேட்போம் முடிவு எடுப்பது நமதாக இருக்கட்டும். அவர் என்ன நினைப்பார்? இவர் என்ன நினைப்பார்? என்று நினைத்து நினைத்து பல நேரங்களில் நம் வாழ்க்கையை நாம் வாழாமல் இருந்துவிடுகிறோம். இதற்குப் பயந்து நாம் எத்தனை பேரிடம் பேசாமலேயே இருந்திருப்போம். உறவுகளைக் கூட தப்பாக நினைத்துவிடுவார்களோ என எத்தனை பேரை ஊதாசீனப்படுத்தியிருப்போம். பிறருக்குப் பயந்து பயந்து வாழ்கிறவர்கள் நடமாடும் பிணங்கள். அது இருந்தால் என்ன! செத்தால் என்ன? எவரும் நினைக்கிறபடி நாம் வாழ்வதற்காக இப்பூமிக்கு வரவில்லை அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வோம் அடுத்தவர் வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை. ஆனால் அடுத்தவர்களுக்காக நாம் வாழுவோம் இந்தாண்டின் சபதமாகவே இதனை எடுத்துக்கொள்ளுங்களேன்!
பிறருக்குப் பயந்து பேச மறந்தவர்கள், மறுத்தவர்கள் சிரிக்க மறந்தவர்கள் இனிமேலாவது சொந்தக் காலில் நிற்கப் பாருங்களேன். பல்வேறு தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் பொறுப்பான பதவிகளில் இருந்து கொண்டு திறமைசாலிகளை எதிரிகளாய் எண்ணிக்கொண்டு தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்! எண்ணிப்பாருங்கள்.
காரியம் ஆகும்வரை காலைப்பிடித்து காரியம் முடிந்தவுடன் கழுத்தறுப்பவர்களையும் நாம் கண்டு கொண்டுதானே இருக்கிறோம். எத்தனை இடத்தில் எடுபுடிகள் எடுத்துக் கொடுக்க கெடுபிடிகள் பிடிபிடி எனப் பிடிக்க திறமைசாலிகள் விரக்தியடைவதையும் நாம் கண்டுகொண்டுதானே இருக்கிறோம். அழகான பெண்கள் அதிகாரிக்கு வளைந்து போகவில்லை என்றால் அவர்கள் படும் பாடுதான் என்ன? அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதுதான் என்ன? அரட்டி உருட்டி அடிபணிய வைக்க அவர்கள் படும்பாடு அவர்களுக்குக் கீழ் பணிசெய்ய அப்பெண்கள் படும்பாடு காலம் காலமாக இந்தக் கண்றாவிகள் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது.!
இதுதான் உலகம் இவர்களுக்குப் பயந்து நாம் ஏன் முகமூடி அணிந்து வாழ்க்கையை நகர்ந்த வேண்டும்? நம் வாழ்க்கையை நாம் வாழுவோம் உறவுக்காக ஒரு வாழ்க்கை உயர் பதவிக்காக ஒரு வாழ்க்கை, பிறருக்காக ஒரு வாழ்க்கை, பிழைகளை மறைக்க ஒரு வாழ்க்கை, பெரியவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கை, எதிரி ஏளனமாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு வாழ்க்கை எத்தனை அவதாரங்கள்தான் எடுக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் நாம் விரும்பும் வாழ்க்கையை பிறர் இல்லாத இடத்திலும், பிறருக்குத் தெரியாத இடத்திலும் நெருங்கியவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளை நம் பெயர் கெட்டுப்போகக் கூடாது என்று இன்று செத்துக் கொண்டிருக்காதீர்கள். இந்த பூமி ஒருமுறைதான் நமக்கு வாய்ப்புக் கொடுக்கும் நம் வாழ்க்கையை நாம் விரும்பும் வாழ்க்கையை நாம் விரும்பும் பலரோடு நாம் விரும்பியபடி வாழ்வோம். இதற்கு ஒத்து வராதவர்களை உதறிவிட்டுச் செல்வோம். அது உறவாய் இருந்தாலும் சரி, உயிராயிருந்தாலும் சரி நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம். வாருங்கள் வாழுவோம்.
“நீ நீயாக இரு
நிறம் மாறாதே! – அது
பச்சோந்தி!”