05
Jul
2024
உலகக்கோப்பை கிரிக்கெட் T20ல் நமது இந்திய நாடு வென்று கோப்பையைப் பெற்றுள்ளது. இதை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பல நாட்டுத் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். வெற்றி பொதுவானது தான். ஆனால் கொண்டாட்டங்கள் வித்தியாசமாக இருந்தது. ஆராவாரமோ, ஆர்ப்பாட்டமோ, அடுத்தவர்களை வீழ்த்தி விட்டோம் என்ற வெறியோ, எதிரில் விளையாடுகிறவர்களைச் சீண்டியோ, பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கோ இல்லாமல் ஆனந்த கண்ணீரில் மூழ்கிய நிலையில் ஆர்ப்பாட்டமில்லாத ஒரு வெற்றியாக இது அமைந்தது.
என்னைப் பொறுத்தமட்டில் இதனை இறைச் சிந்தனையோடு பார்க்கும்போது இறைவனே இந்தியாவிற்குக் கொடுத்தது என்று சொல்லுகிறேன். “எல்லாப் புகழும் இறைவனுக்கு”, “Praise the Lord”, “அன்பே சிவம்” “சிவாய நமக” ஏனென்றால் பலமுறை திறமையோடு முன்னேறி வந்தும் உலகமே இந்தியாவிற்குத்தான் வெற்றி என்று கூறும்போதும் நாம் அதிர்ச்சித் தோல்வியில் ஆட்டத்தை விட்டு வெளியேறுவோம். ஆனால் இந்த முறை தோல்வியின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வந்திருக்கிறோம்.
எப்போதும் நம்மை வரிந்து கட்டிக்கொண்டு வம்பிழுக்கும் பாகிஸ்தானும் சரி. இறுதிப் போட்டியில் நம்மைப் பயமுறுத்தும் ஆஸ்திரேலியாவும் சரி, தானாகவே வெளியேறுமாறு தடுமாறிவிட்டார்கள். தென்னாப்பிரிக்கா மில்லர் என்பவர் கொல்லர் என்று வர்ணிக்கப்படுபவர் குறைந்த பந்து குறைந்த ரன் அப்படி இருக்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் ஆகாய சூரனாக மாறிய சூரிய குமார் யாதவ் பிடித்த கேட்ச் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இது எல்லாமே இறைவனின் திருவிளையாடல் தானே!
அந்த விளையாட்டைப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரியும் ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திய கேட்ச் என்றால் அது சூரிய குமார் யாதவ் கேட்ச் தான். கடுமையாகப் போராடி இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு அனைவராலும் பாராட்டப் பெற்றவர். ஆனால் சமீப காலமாகச் சரியாக விளையாட முடியாமல் கடந்த 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அதற்காகவே இறைவன் இப்போட்டியில் கடைசி இரண்டு கேட்சுகளையும் அவரே பிடித்து அவற்றில் ஒன்றில் உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார். அதிலும் இந்திய அணி கோப்பையை வென்ற தேதி ஜுன் 29 அன்றுதான் அவரது தங்கையின் பிறந்த நாள் தங்கைக்கு இதனை காணிக்கையாக்குகிறேன் என்று கண்ணீரோடு கூறினார்.
ரிஷப்பந்த் ஒரு பெரிய விபத்தினைச் சந்தித்தவர் அவர் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளாகி எரிந்து அதற்குள் கிடந்து ஊர்ந்து வந்து ரத்தச் சகதியில் கிடந்தார். ஏறக்குறைய மரணத்தைத் தொட்டுவிட்டு வந்தவர். அவரது பங்களிப்பு இப்போட்டிகளில் அபாராமாக இருந்தது. அவரது கையில் உலகக்கோப்பை இருக்கும்போது எனக்குப் பட்டது! என்ன இறைவனின் கருணை! இப்படியும் நடக்குமா? என்பதுதான்.
ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் எதிரியை கட்டுக்குள் கொண்டு வந்தவர். சிறுவயதிலேயே சிறப்பாக விளையாடியவர் IPL-ல் குஜராத் அணிக்குத் தலைமையேற்று கோப்பையை வென்றவர் அதன்பிறகு பல சறுக்கல்களைக் கண்டார். பின்பு மும்பை இந்தியன் அணிக்குத் தலைமையேற்றுத் தோற்றதாலும் ரோகித் சர்மாவை மாற்றி விட்டு இவர் வந்ததாலும் ஒருபுறம் அவரது இரசிகர்கள், மறுபுறம் ரோகித் சர்மா இரசிகர்கள் அவரை ஊடகங்களில் வறுத்து எடுத்தார்கள். நம்ம மொழியில் சொல்வதென்றால் கழுவி ஊற்றினார்கள். மனைவியின் பிரிவு, தந்தையின் மரணம் அவரை ஒரு தனிமைக்குத் தள்ளியது. அதனால் ஆண்டவர் அவரையே தேர்ந்தெடுத்து அவர் மூலமாகவே அந்தக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். வெற்றியின் விளிம்பில் கண்ணீரோடு சொன்னார் நான் இப்போது தனியாக நிற்கிறேன் என்றார்.
மறக்க முடியாத நபர் ஒருவர் விராத்கோலி. விராத்கோலி என்றால் உலகமே தலை வணங்கும். தந்தையின் இறப்புக் காலத்தில் கூட அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடிய ஒரு அற்புத மனிதர். இந்தத் தொடரில் கொஞ்சம் சறுக்கல்களைச் சந்தித்தார். எனவே இறுதிப் போட்டியில் அதிகம் நம்பியிருந்த மூன்று வீரர்கள் திடீரென்று வீழ்ந்தவுடன், இதுவும் வழக்கம் போல் எப்போதும் இறுதிப் போட்டியில் தடுமாறுவோம், தோற்றுப்போவோம் என எண்ணும் போது அதுவரை தடுமாறிக் கொண்டு இருந்த விராட்கோலி அணியைத் தாங்கிப் பிடித்தார். தூக்கி நிறுத்தினார். ஆண்டவர் அவரையும் மகிமைப்படுத்தத் தவறவில்லை.
ரோகித் சர்மா இவர் ஒரு இராசி இல்லாத தலைவர். இவர் காலத்தில் நாம் எந்த கோப்பையையும் வெல்ல மாட்டோம் என்று ஏளனமாகப் பேசியவர்களுக்கு இந்தப் போட்டியில் தனது மட்டையால் அந்த மடையர்களுக்குப் பதில் சொன்னார். இறுதிப் போட்டியைத் தவிர ஒவ்வொரு போட்டியிலும் கணிசமான ரன் குவித்து அடுத்த போட்டிக்கு அழைத்து வந்தவர் இவர் தான்.
பயிற்சியாளர் இராகுல் டிராவிட். இவர் இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர். தோல்வியடைந்து விட்டோம் என நினைத்த பல போட்டிகளை இவரது பொறுமையான ஆட்டத்தால் நம் பெருமையைக் காத்தவர். இறுதியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி தலைமைப் பொறுப்புப் பறிக்கப்பட்டு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பட்ட அவமானத்தை இப்போது பயிற்சியாளராக நின்று வெற்றியைப் பெற்றுத்தந்து கடைசி நேரத்தில் தன்மீது விழுந்த கறையைத் துடைத்துக் கொண்டார்.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியும் நாம் வென்று விடுவோம் என நினைத்து ஆட்சியாளர்கள், மதவாதிகள் அதனைத் தமக்குச் சாதகமாகக் கொண்டாட நினைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மமதையில் இருக்கும் போது இந்திய அணி எதிர்பாராத விதமாக மண்ணைக் கவ்வியது. மானத்தை இழந்தது. மனிதன் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் முடித்து வைப்பது இறைவன். அகந்தையில் ஆடியவர்களை எப்போதும் இறைவன் அடக்கியே வைத்திருக்கிறான். இந்த எதிர்பாராத வெற்றி இறைவன் கொடுத்த வெற்றி.
முத்தாய்ப்பாய் முழங்க வேண்டியது விராத்கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு அறிவிப்பு. இந்த உலகம் பணக்காரர்களையும், வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடும். திறமைசாலிகளையும், முயற்சி செய்பவர்களையும் ஏறிட்டுப் பார்க்காது. ஆகவே இந்த வெற்றியில் தாங்கள் முகங்களை ஆழமாய் பதிப்பதைவிட இளைஞர்களை அடையாளம் காட்ட அவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்க வழியை விட்டு, வாய்ப்பு வழங்கும் அந்த வள்ளல்களை எப்படி வாழ்த்துவது? வார்த்தையே இல்லையே! வெற்றி கிடைத்தவுடன் அதன் மீது கட்டில் போட்டு படுத்துக் கொள்பவர்கள் மத்தியில் தனக்குரியதைத் தம்பிகளுக்கு கொடுத்தவர்கள் இவர்களல்லவா இராமர்கள்! இவர்களுக்குத் தானே கோவில் கட்ட வேண்டும்! இத்தகைய வெற்றி! இந்தக் கொண்டாட்டம்! நமக்கும் ஏதோ ஒன்றைச் சொல்லும். சிந்திப்போமே!
“ஆண்டவன் கொடுப்பதை
யாரும் தடுக்க முடியாது
ஆண்டவன் தடுப்பதை
யாரும் கொடுக்க முடியாது.”