09

Jan

2025

எங்கே என் தமிழச்சி…?

சங்கத் தமிழைக் காணவில்லை! என் சிங்கத் தமிழனையும் காணவில்லை மதுரை வளர்த்த தமிழை மறந்து விட்டோமா? அந்த மதுரையைச் சுற்றி இப்போது ஆங்கிலப் பள்ளியின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. அகத்தியன் வளர்த்த தமிழை ஆங்கிலம் தின்றுவிட்டதா? சிவபெருமானை கேள்வி கேட்ட தமிழ் சிறகொடிந்து விட்டதா? எங்கு பார்த்தாலும் மம்மி டாடியா? எல்லாமே ஆங்கிலத்தைத் தேடியா?

பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழப் போகிறோம். ஆனால் பொங்கல் திருவிழா தெரிகிறது. அதற்குக் காரணம் தெரியாமலேயே என் தமிழ் சமூகம் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. பருவ காலங்களில் அக்டோபர் மாதத்திற்குப் பின் பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் உடனே உழவர்கள் கழனி திருத்தி, பயிர் வளர்த்து, நெல் அறுத்து, புது அரிசி கொண்டு வருவார்கள். ஆனால் இன்று கழனியில் இறங்கி பயிர் செய்யும் விவசாயி எங்கே? அரிசி எங்கிருந்து வருகிறது என்று இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா?

விவசாயி பயன்படுத்திய ஏர், கலப்பை, வண்டிகள் எங்கே? வேகமாகப் போகிற அவசரத்திலும் விரைவாக வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் மாட்டு வண்டியை நாம் மரணமடையச் செய்து விட்டோமே? டிராக்டரை கொண்டுவந்தோம் வேலையை எளிதாக்கினோம். ஆனால் சாணி உரத்திற்குச் சமாதி கட்டிவிட்டோமே! அது எத்தனையோ மருத்துவக் குணங்கள் நிறைந்தது. வீடு மொழுகுவதற்கு, சாணம் எரிப்பதற்கு, உரமாய் இடுவதற்கு. இதற்கு மாற்றாகப் பூச்சிக் கொல்லியைக் கொண்டு வந்து வியாதியை விலைக்கு வாங்கி விட்டோம் அதனால் இன்று நாம் ஆஸ்பத்திரியை ஆக்கிரமித்திருக்கிறோம்.

களையெடுக்கும்போதும் பயிர் நடவின் போதும் கவலை இன்றிப் பாட்டுப்பாடும் என் தமிழச்சி. இப்போது அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கணிணியில் எதையோ தேடிக்கொண்டு வாழ்வைத் தொலைத்துவிட்டு வருகிறாள். யாருமற்ற காட்டுக்குள் விறகு பொறுக்கப் பயமின்றி சென்ற என் தமிழச்சி காட்டு விலங்குகளையும் கண்டு நடுங்காமல் திரும்பி வந்த தமிழச்சி! இப்போது சுற்றுச் சுவருக்குள் காவலாளிகள் பாதுகாக்க கேமிராக்கள் கண்காணிக்க, விளக்குகள் ஒளியினை உமிழ தன் நண்பரோடு பேசிக் கொண்டிருந்த என் தமிழ் மாணவி மானங்கெட்ட தமிழனால் மானமிழந்து போனாளே! இதுவா என் மண்ணின் பெருமை? கயவனைப் பிடிப்போம், கட்டிவைத்து உரிப்போம். இனிமேல் எவனும் பெண்களைத் தவறாகப் பார்க்கக் கூடாது எனப் பயமுறுத்தி அனுப்புவோம்.

இப்போது நடப்பதைப் பாருங்கள் இதில் எதையும் செய்யாமல் அந்த பெண்ணின் மனதைப் புண்படுத்தும் விதமாகத் தினமும் கற்பழிக்கப்பட்டாள் என்று வார்த்தையால் கற்பழிக்கும் வஞ்சகர்களின் வாலை அறுக்க வேண்டும். அரசியலாக்கி ஆதாயம் தேடும் அயோக்கியர்களை அடித்து நொறுக்க வேண்டும்.

கணுக்கால் தெரிய கழனியில் வேலை செய்தவள்! மேலாடை மூடாமல் தலையில் சுமையைச் சுமந்தவள்! மார்பில் பாவாடை கட்டி ஆற்றில் அரட்டை அடித்துக் கொண்டு குளித்து மகிழ்ந்தவள்! ஆண்களோடு ஆபாசமன்றி தொட்டுப் பழகியவள்! வார்த்தையில் இரட்டை அர்த்தங்கள் வந்து விழுமே தவிர, மனதில் மாலையணிந்தவனைத் தவிர மற்றவனை எண்ணாமல் கள்ளம் கபடமின்றி யாரிடமும் எளிதாகப் பழகிய தமிழச்சிகள் வாழ்ந்த நமது மண்ணில் பெண்மை எவ்வாறு சீர்கெட்டு நிற்கிறது. சிந்தித்துப் பாருங்கள்!

மனமுறிவு ஏற்பட்டு, மற்றவர்களோடு பிறழ்ந்த உறவில் கலந்து, கள்ளக்காதல் என்று சொல்லி உயிர்களைப் பறித்து, ஒத்துப் போகாத வாழ்வால் விவாகாரத்தில் விழுந்து, அதனால் தகப்பன் அறியக் குழந்தைகள் சமுதாயத்தின் அவலங்களாகி, குடும்பமாக வாழ்வதே மிகவும் பாடுபட்டு அமைக்க வேண்டிய பரிதாபத்தில் தமிழனின் தலையெழுத்து நிற்கிறது.

வாருங்கள் பொங்கல் சமைப்போம் என்று அழைத்தீர்கள்! அப்படி என்றால் பானையைத் தேடுவீர்கள் தானே! முதலில் பானை செய்பவனைத் தேடுங்கள். அவன் களிமண்ணைக் களவுசெய்து, மாற்றுப் பாத்திரங்களை இறக்குமதி செய்து, அவன் தொழிலில் மண்ணை அள்ளிப் போட்டதால் இன்று அவன் வறுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். மாட்டிற்குப் பதிலாக டிராக்டர்களைப் பயன்படுத்துவதால், இன்று மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு மடிந்து கொண்டிருக்கிறது.

கரும்புகள் பொங்கலில் முக்கியமான ஒன்று. ஆனால் யாவரும் செய்கின்ற தவறுகளால் இயற்கை சீறி எழுந்து பொங்கலுக்கு முன் புயல்களாகப் புறப்பட்டு வருகிறது. இடைவிடாத மழையாக இங்கு இறங்குகிறது. அது விவசாயிகளின் கரும்புகளை வேட்டையாடிவிட்டுத்தான் அடங்குகிறது. அவர்களே அதற்காக அரசாங்கத்திடம் கையேந்திக் கொண்டு இருக்கும்போது நாம் பொங்கலுக்கு கரும்பை நினைப்பது மனதிற்கு ஏனோ கசப்பாகத்தான் தெரிகிறது. கரும்பு சக்கையான காலம்போய் கரும்பு வாங்கிய கடனுக்காக விவசாயி சக்கையாகிச் சங்கடப்படுகிறான். வணிக நிறுவனங்கள் அவனை வஞ்சித்து சாறு பிளிந்து கொண்டு இருக்கிறது.

இயற்கை வழங்கிய மரங்களில் தாயினும் சாலப் பரிந்தூட்டும் மரம் பனைமரம் வேரிலிருந்து ஒலைவரை வீட்டிற்குத் தேவையான அத்தனை பொருளையும் கொடுக்கிறது. காலத்திற்குத் தகுந்தாற்போல் அது கடவுள் போல் நம்மைக் காக்கிறது வெயிற்காலத்தில் நுங்கு, பதநீர், என்றும் விழாக்காலத்தில் கிழங்கு என்றும், கூரைக்கு ஒலை, ஒய்வுக்குப் பாய், பெட்டி விசிறி விறகு என விதவிதமாகக் கொடுக்கிறது பனைமரம். பொங்கலுக்குக் கிழங்கு கொடுக்கும் பனையை நாம் தான் அழித்து விட்டோமே! அழிந்தது பனை அல்ல நாம் தான். பனைமரம் மண்ணரிப்பைத் தடுத்து பூகம்பத்தை நிறுத்துகிறது. இது எதுவும் தெரியாத முட்டாளாக இருந்து பனையையும் அழித்ததால் நம்மை நாமே நரபலி கொடுத்துவிட்டோம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழன் என்று சொல்லி வந்தவர்களையெல்லாம் வாழவைத்து விட்டு, நம் வாழ்வை வசந்தமில்லாமல் செய்து விட்டோம். வாழ்வை இழந்து கல்வியில் முன்னேறி பெற்றோர்கள் செய்யும் குடிசைத் தொழில், விவசாயம் போன்றவற்றிற்கு உதவக் கூட மனமில்லாத ஊனமுற்றவர்களானோம். எதற்குப் படிக்கிறோம்? என்று கூடத் தெரியாமல், எந்த வேலைக்கும் போகாமல், சொந்த வேலையும் தெரியாமல், சோரம் போனவர்களாய் சோற்றுக்குத் திண்டாடுகிறோம்.

இருப்பதையெல்லாம் பகிர்ந்து கொடுப்பது எங்கள் இனம் என்று மார்தட்டிக் கொண்டிருந்த தமிழன் இப்போது கிடைப்பதை எல்லாம் சுருட்டும் கீழ்தர மனிதனாகி விட்டான். சுடுகாட்டைக் கூட சுற்றி வளைக்க ஆரம்பித்து விட்டான். பணத்திற்கும், பதவிக்கும், பேருக்கும், புகழுக்கும் நாயாய்ப் பேயாய் திரிந்து இன்று நடுத்தெருவில் நிற்கிறான்.

இங்கு இருந்த தமிழினம் எங்கே போனது? நல்ல தமிழ் இங்கில்லை. வள்ளுவன், இளங்கோ, பாரதிகள் எல்லாம் கண்முன்னே கல்லாய்த்(சிலை)தான் இருக்கிறார்கள். அவர்கள் சொல் எல்லாம் சுடுகாட்டில் பிணத்தை எரித்ததுபோல் புரட்டிப் பார்க்காமல் பொசுக்கிவிட்டோம். கல்விக் கூடத்தில் தமிழ் கற்றுத் தருகிறார்கள் என்றவுடன் எங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அடகு வைத்துவிட்டோம்.

எங்கள் வேட்டி சேலைகள் எல்லாம் காற்றில் பறந்து விட்டது. மானம் மறைக்க மாற்றுடை வந்தாலும் உடைகள் சுத்தமாகவும் உள்ளத்தை அழுக்காகவும் இன்று வைத்திருக்கிறோம். அம்மி, ஆட்டுக்கல், எல்லாம் கல்லென்று நினைத்து அஸ்திவாரத்தில் போட்டு நிரப்பி விட்டோம். கும்மி, கோலாட்டம் போன்ற தமிழ் மரபுகளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இப்போது கவர்ச்சி நடனத்தில் காலம் தள்ளுகிறோம். எங்கள் தமிழ் இலக்கியம் யாருக்கும் புரியாத புதிராகி விட்டது. தமிழ் பாலின் மார்பகங்கள் அகற்றப்பட்டு ஆங்கில மார்பகங்களைச் சுவைத்தபடி எங்கள் குழந்தைகள் ஆரம்பப் பள்ளியில் தூங்குகின்றது.

தமிழர் திருநாள் வருகிறது. மீண்டும் தமிழினம் எழுந்துவர தமிழன் தான் இங்கு இல்லையே அந்தத் தடம் கூட இப்போது இல்லையே! இருந்தால் சொல்லுங்கள். அவர்கள் விலாசம் தேடி வந்து நான் வணங்குகிறேன்.

“தமிழன் என்றொரு
இனமுண்டு அவனுக்கு
இருப்பதை கொடுக்கிற
மனமுண்டு”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES