17

Feb

2023

எதற்கு?…

எதற்கு? அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டது போன்று அதிர்ச்சியாய்ப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்! கல்வி என்பது கடைசரக்கு அல்ல அதனைக் காசு கொடுத்து வாங்குவதற்கு ஆனால் இன்று பலர் பணத்தைக் கொடுத்து பட்டம் வாங்கத்தானே ஆசைப்படுகிறார்கள்.

கல்வி என்பது கட்டுப்பாட்டினைக் கொண்டு வரும் ஒழுக்கத்தைக் கற்றுத்தரும். நாகரீகத்தில் வாழ வைக்கும். பெரியோர்களை மதிக்கச் செய்யும், காலத்தைக் கண்ணெனக் கருதும். மற்றவர்களுக்கு உதவி செய்யும், மானம் மரியாதையோடு வாழச் செய்யும். செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதச்செய்யும். ஒற்றுமையை வளர்க்கச் செய்யும் வேற்றுமையைக் களையச் செய்யும். சமத்துவத்தைக் காக்கும் சண்டை சச்சரவுகளை நீக்கும். கற்பனைத் திறன் வளரும் கட்டுப்பாட்டுடன் உயரும். போதுமென்று நினைக்கும் பொன்பொருள் மேல் உள்ள ஆசையைத் தவிர்க்கும் பிறப்பால் உயர்வு தாழ்வை நீக்கும் பிறர்பால் அன்பின் மீது கண்ணியம் காக்கும் இவையெல்லாம் இருந்தால் அவர்கள் கற்றவர்கள் மற்றவர்களைவிட அவர்கள் உயர்ந்தவர்கள், உன்னதமானவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என எண்ணத் தோன்றும்.

ஆனால் இன்று கல்வி அதைத்தான் செய்கிறதா? கற்றவர்கள் என்றால் இப்படித்தான் வாழ்கிறார்களா? மாணவர்கள் அனைவரும் மாண்புடன் நடந்து கொள்கிறார்களா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்? அந்தக் காலத்தில் வீட்டில் அதிகமான குழந்தைகள் இருந்தனர் சிலர் படித்தார்கள். சிலர் தெரிந்த வேலைக்குப் போனார்கள். வேலைக்குப் போனவர்கள் கடினமாக உழைத்து மீதமுள்ளவர்களைப் படிக்க வைத்தார்கள்.

அதனால் அன்பு இருந்தது தியாகம் இருந்தது ஒற்றுமை இருந்தது கூட்டுவாழ்வு இருந்தது. ஆனால் இப்போது ஒன்று இரண்டு குழந்தைகள் அனைவருக்கும் கல்வி ஆனால் என்ன மாற்றத்தைக் கண்டிருக்கிறோம்? படித்த பெண்களின் கல்லூரியில் சென்று காண்போமா? கற்ற மாணவர்களின் கட்டுப்பாட்டினை பேரூந்து நிலையத்தில் பார்ப்போமா? குழுக் குழுவாக நின்று சண்டையிடுவது மாணவர்கள் சாதிதானே! கண்டிக்கும் ஆசிரியரைத் தண்டிக்கத் துடிக்கின்ற மாணவர்கள் பெருகி வருவதைத்தான் அனைவருக்கும் கல்வி கற்றுத்தருகிறதா?

அன்றைய பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வருவார்கள். இவன் களிமண்ணாய் இருக்கிறான் எனக்கு சிலை செய்து கொடுங்கள் என்பது போல் அவர்கள் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்று பெற்றோர்கள் ஏதோ தங்கத்தைப் பெற்று வைத்திருப்பது போலவும் அதனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு வருவதும் போலவும் வாழ்கிறார்கள். தன்பிள்ளையைத் தானே அறியாது கற்பனையில் அவர்களை கலெக்டராக எண்ணிக் கொண்டு தானும் கண்டிக்காது ஆசிரியர்களையும் கண்டிக்க விடாது களைகளை வார்த்துவிடுகிற பெற்றோரால் இங்கு பயிர்களுக்குப் பங்கம் ஏற்படுகிறது.

ஆங்கிலக் கல்வி என்ற ஒன்றை வைத்துக் கொண்டு ஏதோ ஆண்டவனால் கொடுக்கப்பட்டது போல எண்ணிக் கொண்டு கடனை வாங்கி கஷ்டத்தை மறத்து பிள்ளைகளுக்கும் கவலை, கடன், கஷ்டம் எதுவுமே தெரியாமல் வளர வைக்கிறார்கள் அது என்னவோ ஐயிரைக்குப் பிறந்துவிட்டு விலாங்குச் சேட்டை பண்ணிக் கொண்டிருக்கிறது. படித்து பட்டம் பெற்று ஒரு பதவி வகித்து உடையணிவதை இப்போது படிக்கப் போகும்போதே அணிந்து விடுவதால் அதன் அருமை தெரியாமல் அதனை அழுக்காக்கி விடுகின்றார்கள்.

பள்ளிக்குச் செல்வதற்கு பஸ் பயணம், படிக்கட்டில் இறக்குவதற்கு ஒரு ஆயா உணவூட்ட ஒரு அம்மா! எத்தனை வேலைக்காரிகள் தான் L.K.G, U.K.G லேயே எண்ணிப்பாருங்கள் இப்படி இருந்தால் அவன் மனதில் என்ன தோணும்? அவனுக்கு அவனே உதவவும், உழைக்கவும் கற்றத்தராத கல்வி ஒரு கல்வியா?

இன்றையக் கல்வி கற்கும் மாணக்கர்களை எண்ணிப்பாருங்கள், முடி சரியில்லை, முழி சரியில்லை, உடை சரியில்லை, நடை சரியில்லை, பேச்சு சரியில்லை ஒழுக்கம் தறிகெட்டுத் தெரிகிறது. சாதிக்கொரு பொட்டை வைத்துக் கொண்டு சண்டையிட்டுத் திரிகிறார்கள். போதைப் பொருள் அதிகமாகப் பயன்படுத்துவது மாணவச் சமுதாயமே! ஒரு பெண்ணுக்கு இரண்டு பேர் அடித்துக் கொண்டு திரிவதும் காணச் சகிக்காத கண்றாவிச் செய்திகள். வீட்டிலிருந்தால் பெற்றோருக்கு எரிச்சல் பேரூந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் பேரூந்தில் நடத்துனரிடம் சண்டை பள்ளி கல்லூரியில் ஆசிரியரிடம் தகராறு இதில் ராகிங் கொடுமை வேறு!. இப்படி கண்முன் பல காட்சிகள் நமக்குத் தெரியும் போது இன்னும் இந்தக் கல்வி மாணவர்களைச் செம்மைப்படுத்தும் என்று எப்படி நம்புவது?

அப்படியே படித்து முடித்து வேலைக்கு வந்தாலும் லஞ்சம் பெறுவது அடுத்தவர்களை ஏமாற்றுவது, உறுப்புகளைத் திருடுவது, மோசடி செய்வது என தவறான செயல்களில் தடம் பதிக்கிற எத்தனை அயோக்கியர்களைப் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது கற்றவர்கள் பெருகிவிட்டால் மக்கள் இனம் மாண்புறும் என்று எப்படி நம்புவது? விரும்பியவர்கள் படிக்கட்டும் மற்றவர்கள் வேலைக்குப் போகட்டும் என இருந்த காலத்திற்கும் இப்போது எல்லோருக்கும் கல்வி என்ற நிலை வந்தபிறகு என்ன மாற்றத்தைப் பார்க்கிறீர்கள். ஏதோ படித்து விட்டோம் என மிதப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பதனால் சின்னச் சின்ன வேலைகளைக்கூட செய்யாமல் வட இந்தியர்கள் வந்து வாடகைக்கு இருந்து வேலை செய்கிறார்கள் நம்ம இளைஞர்கள் வெட்டியாக ஊர் சுற்றி வரட்டுக் கௌரவத்தை, வளர்த்துக் கொண்டு தனக்கு வேலை இல்லை என்று தாழ்வு மனப்பான்மையோடு நடைபிணமாய் நடைபோட்டுக் கொண்டு இருக்கிறார்கள்! இதுதான் இன்றையக் கல்வியா? இதற்குத்தான் அனைவருக்கும் கல்வியா? பக்குவம் இல்லாது கல்வி கற்பது பாழும் கிணத்திற்குள் விழுவதற்குச் சமம். தடம் காட்டாது கல்வி தறிகெட்டு ஓடச்செய்யும் கல்வி நமக்கு கண்திறக்கட்டும் மற்றவர் நம்மை மதிக்கும் கல்வியைக் கற்போம் காலத்தால் உயர்வோம்!

“புதிய இந்தியா உன்
வயிற்றில் – நல்
புதல்வர்கள் வரட்டும் – களைப்
புற்கள் வளர்ந்துவிடக் கூடாது”

ARCHIVES