17
May
2022
நாட்டில் அக்கிரமங்களும், அயோக்கியத்தனங்களும் மட்டுமீறி கட்டுப்பாடற்றுக் காட்டுத்தனமாக நடைபெற ஆரம்பித்தால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வறுமை தலைவிரித்தாடும் போது வழிப்பறியும், கொள்ளையும் அதிகமாகும். வகுப்புவாதம் அதிகமாகும் போது கொலை தாறுமாறாக அரங்கேறும். சில நேரங்களில் நக்சல்கள், சில நேரங்களில் சாதிப்பிரச்சனைகள், சில நேரங்களில் மொழிப் பிரச்சனைகள், மதக்கலவரங்கள் இப்படி எல்லைமீறிப் போகும் போது காவல்துறைக்கும், இராணுவத்திற்கும் சவாலாக இருக்கும். ஆனால் இன்று சவாலாக இருப்பது பயங்கரவாதமோ! தீவிரவாதமோ! அல்ல மாணவச் சமுதாயம்! இதனை கேட்கவே ஆச்சரியமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது.
இதற்குக் காரணம் என்ன? கல்விச்சுமையா? ஆசிரியர்களின் கண்டிப்பா? பெற்றோர்களின் கவனமின்மையா? ஊடகங்களின் தவறான வழிகாட்டுதலா? அரசுகளின் கண்டு கொள்ளாத தன்மையா? கண்டிக்கத் தயங்கும் காவல்துறைக்குக் கைகள் கட்டுப்பட்டுள்ளதா? எனப் பல கேள்விகள் எழும்புகின்றன. பல நோக்கில் ஆராயப்படுகின்ற அவசியமான கேள்வி.
இன்றைய மாணவர்களிடத்தில் கொரோனா விடுப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விடுப்பின் தாக்கம் மாணவர்களை பாதை மாற பல்வேறு வழிகளில் தவறான பாதையை அவர்கள் தக்க வைக்கக் காரணமாயிருக்கிறது.
பரிச்சை எழுதாமல் பாசாக வேண்டும் பாடம் படிக்காமல் வகுப்பறையில் இருக்க வேண்டும். வேண்டும் போது மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். வீட்டுப்பாடம் கூடாது. ஏன் படிக்கவில்லை? என்று ஆசிரியர்கள் கேட்கக் கூடாது. நோட்டு கேட்கக் கூடாது பாடம் கேட்கக் கூடாது பள்ளிக்கு ஏன் வரவில்லை? என்றும் கேட்கக் கூடாது நினைத்தால் வருவான். இல்லாவிட்டால் வர மாட்டான் இதனையும் மீறி ‘பெற்றோரை அழைத்து வா என மிரட்டினாலும் யாரையாவது அழைத்து வந்து இவர்தான் என் பெற்றோர் என்று சாதித்துவிடுகிறான்.
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி” இந்த இரண்டு ஆண்டுகளில் ஆள் வளர்ந்திருக்கிறான் ஆனால் பாட அறிவு வளரவில்லை. இதனால் நற்பண்புகளோ நல்ல பணிகளோ எதுவுமே வளரவில்லை இதற்கு மத்தியில் ஆன்லைன் வகுப்பு என அவனிடத்தில் செல்லைக் கொடுத்து ஒரு வன்முறையைத் தூண்டும் ஆயுதத்தை கொடுத்ததற்குச் சமமாகிவிட்டது. ஆன்லைன் வகுப்பறையில் அவன் இஷ்டப்படி இருந்தது போல் இப்போது வகுப்பறையில் இருக்க ஆசைப்படுகிறான் கொரோனா காலத்தில் மாணவர்கள் வெளியில் கூடியவுடன் வெட்டியாகப் பேசுவதும் வேடிக்கையாக விளையாடுவதும் போலவே இப்போது அவன் வகுப்பறையிலும் விளையாடவும் வேடிக்கை பார்க்கவுமே நினைக்கிறான்.
அந்த விடுமுறை நேரத்தில் பள்ளி மாணவர்களைக் கடந்து பிற முறையற்ற மாணவர்களோடு சேர்ந்து தேவையற்ற படங்களைப் பார்ப்பதும், போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதும், சாதி, மத அடையாளங்களை வளர்க்கும் விதமாக பொருட்களை பயன்படுத்தவும், பிறரை காயப்படுத்தவும் துன்பப்படுத்தவும் பழகிக்கொண்டான்.
இதற்குக் காரணம் யார்? பெற்றோர்களே! பெற்றோர்கள் மட்டுமே! அந்த இரண்டு ஆண்டுகள் தானே அதிகமான மாணவர்கள் கெட்டுப் போய்விட்டார்கள் உங்களிடம் தானே வளர்ந்தான். குடும்பத்தின் சூழலைக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பெற்றோர்களின் உழைப்பைக் காணச் செய்திருக்கலாம் பெரியோர்களை மதிக்கக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். உழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழவும், தகுதிக்கேற்ற ஆசைப்படவும் கட்டாயம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். பெற்றோர்களிடம் வாழ்ந்த காலத்தில் முடி சரியில்லை, முழி சரியில்லை, உடை சரியில்லை, உறவு சரியில்லை, மதிப்பு, மாண்பு எதுவுமே தெரியாமல் மடத்தனத்தை மட்டுமே வளர்த்து வைத்திருக்கிறார்கள்.
பெற்றோர்களின் மனநிலை என்ன? ஓடி ஓடி உழைக்கணும் பள்ளியில் பணத்தைக்கட்டி பிள்ளைகளைச் சேர்த்து விட வேண்டும் அது மட்டுமே அவர்கள் வேலை பெற்றோர்கள் விரும்பும்படி அவர்கள் குழந்தைகளை உருவாக்கித்தர வேண்டியது ஆசிரியர்கள் கடமையென எண்ணுகிறார்கள். இவர்கள் களிமண் தருவார்களாம் ஆசிரியர்கள் சிலைகளாக, கலைப்பொருட்களாக, உபயோகப் பொருட்களாக உருவாக்கித் தர வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள் சரி ஆனால் நீங்கள் இப்போது கொடுத்திருப்பது காய்ந்த களிமண். இதனைத் தட்டினால் தூசிதான் வரும் இடங்கள்தான் அசிங்கமாகும் நாம் விரும்பும்படி எதனையும் செய்ய முடியாது!.
பெற்றோர் உழைப்பது தான் உங்கள் கடமை என்று எண்ணாமல் குழந்தைகளை உருவாக்கும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதனை மறந்துவிடாதீர்கள் ஆசிரியர்கள் உங்களால் பக்குவப்படுத்துவப்பட்ட குழந்தைகளையே உருவாக்க முடியும் கல்லில் நார் உரிக்க முடியாது கடப்பாரையில் துளிர்விடச் செய்ய முடியாது மணல் வீட்டில் மாடியைக்கட்ட முடியாது என்பதனை மறந்து விடாதீர்கள் உங்கள் வாரிசை வளர்த்தெடுக்க உங்களுக்கு இல்லாத அக்கறை ஊர்காரர்களுக்கு எப்படி வரும்?. உடனே முடிவு எடுங்கள். குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில் உங்கள் கையில் மட்டுமே.
“பெற்றோர்களே வெளிச்சங்கள்
பிள்ளைகளைப் பக்குவப்படுத்தாவிட்டால்
என்றைக்குமே அவர்கள்
இருட்டாய்த்தான் இருப்பார்கள்”