16
Mar
2017
கிறிஸ்தவர்களின் வசந்தகாலம் கிட்டத்தில் இருக்கிறது. ஆம் தவக்காலம் ஆரம்பமாகப் போகிறது. வருடம் ஒருமுறை நம் வாசலுக்கு வந்துவிட்டுப் போகும் வசந்தகாலம் தன்னையே ஆய்வு செய்து தனக்குள் பயணித்து குறைகளைக் களைந்து நிறைகளை வளர்த்து நிறைவான வாழ்வு வாழவும் நிம்மதியைத் தேடிக்கொள்ளவும் நிர்ணயிக்கப்பட்ட காலம் அது.
அதேவேளையில் ஆதிக்காலத்தைப்போல் விவிலியம் உரைப்பதுபோல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோணியை உடுத்திக்கொண்டு, தன்னை வருத்திக்கொண்டு, தன்னைத்திருத்திக்கொள்வதுதான் தவக்காலத்தின் நோக்கம் என்றால் அது நவீன காலத்தில் ஏற்புடையதல்ல. வீழ்ந்து கிடக்கும் மானிடத்தையும் அழிந்துபோகும் மனித நேயத்தையும் மீண்டும் உருக்கொடுத்து உயிர்வாழச்செய்வதே தவக்காலத்தில் நாம் செய்யும் முதல் கடமையும் இறைவனுக்கு ஏற்புடைய செயலும் ஆகும்.
இறைவனுக்குச் செய்வது எல்லோருக்கும் விருப்பம்தான் ஆனால் அந்த இறைவன் எங்கே இருக்கிறார்? என்பதனை அறியாதவர்கள்தான், இந்தப் பூவுலகில் இறைவனுக்கு ஏற்புடைய செயல்களை செய்யாதவர்களாக ஏதோ ஒன்றை எங்கேயோ! செய்துவிட்டு இறைவனுக்கு ஏற்புடையதைத்தான் செய்கிறோம் எனத் தனக்குத்தானே எண்ணிக்கொண்டு தன்னையும் ஏமாற்றி, சமுதாயத்தையும் ஏமாற்றி காலம் முடியுமட்டும் கடவுளையும் காணாமல் கடவுளுக்கு உரியதையும் செய்யாமல் காலமாகிப் போய்விடுகிறார்கள்.
ஒருமுறை கருணை இல்லத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சகோதரர் ஒருவர் ஒரு நல்ல நாளில் கருணை இல்ல மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்க நகரில் பெரிய தொழிலதிபர் ஒருவரை அணுகிக் கேட்டார்.
அதற்கு அத்தொழிலதிபர், ஐயா அவர்களைக் கும்பிட்டு ஒன்று நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் கோயிலுக்கு என்று கேட்டு வந்தீர்கள் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்று சலிப்போடு ஒரு பதிலை சொன்னார். சகோதரர் அவர்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் இந்த அப்பன் பேரு தெரியாத அனாதைப் பயல்களுக்குச்செய்வதெல்லாம் ஆண்டவனுக்குச் செய்வதாகி விடுமா என்ன? என்று அசால்டாக ஒரு பதிலைச் சொன்னார்.
அருகிருந்த எனக்கு பயங்கரக் கோபம் வந்தது. சகோதரரை அழைத்துகொண்டு வெளியே வந்துவிட்டேன். எவ்வளவோ கிறுக்கன்கள் இப்படித்தான் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அவர்களுக்கு ஒரு விசயம் தெரியவில்லை என்று நினைத்திருந்தேன். இன்று இந்தப் பெரிய மனிதனைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது இப்படி எண்ணம் உள்ளவர்களுக்கு இரண்டு விசயம் தெரியவில்லை என்பதுதான். 1.நீங்கள் கொடுத்துதான் கடவுளுக்கு நிறையப்போவதிலலை. ஏனென்றால் நீங்கள் கொடுக்கின்ற நிலையிலும், கடவுள் பெறுகின்ற நிலையிலும் இருந்தால் அவர் கடவுளே இல்லை. 2. நீங்கள் கொடுக்காவிட்டால் தேவையில் இருப்பவர்கள் செத்துபோவதுமில்லை.
ஆனால் இறைவன் திருவிளையாடலில் இதுவும் ஒன்று. இறைவன் வைக்கும் தேர்வும் இதுதான் இன்று உங்களை உத்தமர்களாகவும், உலகில் உயர்ந்தவர்களாகவும் உலகமே போற்றும் அளவிற்கு உருவாக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பே இறைவன் நடத்தும் இந்த நாடகம் ஆகும்.
உங்களிடம் பிறரோடு பகிர்வதற்கு எண்ணற்ற வளங்களை இறைவன் வழங்குகிறார். அதனை வாங்குவதற்காகத் தேவையிலிருப்பவர்கள் உள்ளத்தில் உறைந்து அவர்கள் உருவத்தில் வந்து உங்களிடம் கேட்பார். இதில் தன்னை பகிர்ந்துகொள்கிறவர்கள் எல்லாம் இறைவனை அறியாதவர்களாக இருந்தாலும் இறைவனின் அருகிலிருக்கிறார்கள். இருந்தும் தன்னைத் தரமறுக்கிறவர்கள் தனக்குத்தானே சூன்யம் வைத்துக்கொள்கிறார்கள்.
ஏழைகளுக்குச்செய்கிற உதவியெல்லாம் இறைவனுக்குச் செய்வதாக எண்ணுகிறவர்கள் ஞானம் பெற்றவர்கள். இதனை அறியாமல் தரமறுக்கிறவர்களும், கோயிலுக்குச் செய்கிறேன் எனக்கூறுபவர்களும் ஒருவகையில் வெள்ளயடிக்கப்பட்ட கல்லறைகள்தான்.
இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் எவ்வளவோ சொல்லலாம் குறிப்பாக வெளியில் சென்று வீடு திரும்பும் ஒரு தாத்தா தன் மனைவியிடம் ஒரு செம்பு தண்ணீர் எடு;த்துவா என்றார். உடனே அந்தப்பாட்டி தட்டுத்தடுமாறி எழுவதற்குமுன் அவளது பேத்தி வந்து தண்ணீர் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். உடனே அந்தப்பாட்டி பேத்தியை அழைத்து மகராசி எனக்கு நீ பெரிய உதவியை செய்துவிட்டாய் என்று பாராட்டுகிறாள். இதனைப் பாருங்கள் அந்தப்பேத்தி தாத்தாவிற்குத்தான் உதவி செய்தாள். ஆனால் பாட்டி செய்ய வேண்டிய வேலையைச் செய்ததால் பாட்டி தனக்கு உதவி செய்வதாக எண்ணிக்கொள்கிறார். இதனால்தான் இயேசு இச்சின்னஞ்சிறிய சகோதரர்களுக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று கூறுகிறார்.
ஒரு பார்வையற்றவர் சாலையைக் கடக்கவேண்டும். யார் உதவி செய்வார்? அவனைப் படைத்த இறைவன் தான் செய்ய வேண்டும். இறைவனை அழைக்கிறார். ஒரு மனிதர் வந்து அவர் சாலையைக் கடந்து செல்ல உதவிசெய்கிறார். இப்போது அந்த பார்வையற்றவருக்கு சாலையை கடத்திவிட்டவர் இறைவனாகவும், இறைவனுக்கு அவர் தான் செய்ய வேண்டிய பணியை செய்ததால் தனக்கே உதவி செய்தவராகவும் எண்ணப்படுகிறார்.
இதனைமட்டும் கண்முன் கொண்டு இந்தத்தவக்காலத்தில் தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்தால் தேடுபவர்களுக்கு கடவுளாகவும், கடவுளுக்கு உதவுபவர்களாகவும் இருப்பீர்கள் எனவே இறைவன் சொன்ன பசியாய் இருந்தேன் உண்ணக்கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன் குடிக்கக்கொடுத்தீர்கள் என்று சொன்ன வார்த்தைக்கேற்ப உலகில் உள்ள உயிரினங்களுக்கு எல்லாம் கொடுக்க முடியாவிட்டாலும், நம்மால் முடிந்தளவிற்கு உதவிசெய்வோம். வெயில்காலத்தில் ஒரு கிண்ணம் தண்ணீர் எடுத்து மொட்டை மாடியில் வைத்து பறவைகள் நீர் அருந்த வழிசெய்தால் அதுவே பெரிய தவமாகும். ஆகவே இந்தத்தவக்காலம் மனம் மாறுவோம் என்பதல்ல மற்றவர்களுக்காக வாழுவோம் என்பதே. இதுவே இயேசு விரும்புவது, இயேசுவுக்குச் செய்வது….