17
Aug
2020
“உலகமெல்லாம் ஒருவன் தனதாக்கினாலும்
தன்னை இழந்தால் பயன் என்ன?”
நான் யார்? இது ஒரு சாதாரணக் கேள்வி போல் தெரிகிறது. ஆனால் சகலத்தையும் உள்ளடக்கிய கேள்வி இது? இயேசு எனும் மகான் தன் சீடர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி இதுதான். என்னை யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? என்பதுதான் அவர் கேட்ட மகத்தான கேள்வி. தன்னை ஆய்வுச் செய்ய தானே நடத்துகின்ற தேர்வுக்களம் இது.
இதே சிந்தனையோடு படுக்கையைவிட்டு எழுந்து கண்ணாடிமுன் நின்று என்னையே நான் கேட்டுப் பார்த்தபோது நான் மனிதன்! ஆம் வீட்டில் வசிக்கிறேன். கண்ணாடியில் என் பிம்பத்தைப் பார்க்கும் போது நான் ஆண். என் முடி அமைப்பில் முகத்தில் தெரிந்த மீசை, தாடி இதனைத் தெரியப்படுத்தியது. வெளியில் வரும்போது எனது ஆடைகள் அதை இன்னும் ஆழப்படுத்தியது.
எனது பணி ஆசிரியர் என்பதால் அரசு, மற்றும் தேர்வு நேரங்களில் அந்த அடையாள அட்டையைக் காண்பிக்கிறேன். வாக்காளர் என்பதற்கு வாக்காளர் அட்டையும் வாகனத்தில் செல்லும்போதும் ஓட்டுனர் உரிமம். வங்கியில் பணம் எடுக்க A.T.M கார்டு, இருப்பிடம் அறிய ஆதார் கார்டு, ரேசன் கார்டு, உடல் நலம் குன்றினால் மருத்துவக் காப்பீட்டு கார்டு இதனை கடந்து கடவுச்சீட்டு மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுத் தெரிய துறவி என்பதற்காகத் துறவற ஆடை, மேல்ப்படிப்பு படிக்கும் போது பல்கலைக் கழகங்கள் தந்த அடையாள அட்டைகள் என பல அடையாள அட்டைகள் என்னை அடையாளப்படுத்தின. இவைகள்தான் என் அடையாளங்களா? இவையெல்லாம் காலத்தால் அழியக்கூடியதுதானே! இதனைத்தான் நான் என் அடையாளங்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேனா? இதனைத் தானே அரசு அதிகாரிகளும் காவல்துறையும் ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். நிரந்தரமற்ற ஒன்றுதான் எனது வாழ்க்கைப் பயணத்தின் வரலாறுகளா? இவை ஒவ்வொன்றும் காலம் முடிந்தவுடன் காலாவதியாகிவிடுமே! இதைத்தான் என் அடையாளங்கள் என்று பெருமையாகச் சுமந்து கொண்டு திரிகிறேனா? நினைப்பதற்கே வருத்தமாகவும் இருக்கிறது. வெட்கமாகவும் இருக்கிறது.
நான் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் கடவுளின் சாயலைக் கொண்டவன். ஒருபாடல் சொல்கிறது. “ஆசை கோபம் களவு செய்பவன் பேசத் தெரிந்த மிருகம். அன்பு, நன்றி கருணை கொண்டவன் மனிதன் உருவில் தெய்வம் என்கிறது. இதில் நான் யார்? கடவுள் பாதி மிருகம்பாதி கலந்து செய்த கலவை நான்” என்பான் கவிஞன் என்னில் அந்தக் கலவையில் எது அதிகமாகத் தெரிகிறது. என்னிடத்தில் என்னைக் குறித்த அடையாளங்கள் என்ன?
இந்த அத்தியாவசியமான அடையாளத்தை அரசு அதிகாரிகள் கேட்கமாட்டார்கள். ஆய்வு செய்யமாட்டார்கள் நம் அருகில் உள்ளவர்கள்தான் பார்ப்பார்கள், விமர்சிப்பார்கள். ஆகவே வீதிக்கு வருவோம் நம்மை யார்? என்று நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் கேட்போம் பிறர் நம்மைப் புகழும்போது இதில் ஏதாவது நம்மிடம் இருக்கிறதா? என்று எண்ணிப் பார்ப்போம். பிறர் நம்மைத் திட்டும்போது அது நம்மை ஒட்டியிருக்கிறதா? என நம்மைத் தட்டிக் கேட்போம். நீங்களும் சொல்லுங்க (நெஞ்சைத்தொட்டு) நான் யார்?
“என்னைத் தேடித் தொலையாதே
தன்னைத் தேடி கண்டடைவாய் – இறைவன்…”