20
Nov
2020
…..மடல்
-பெண்ணியம் பேசுகிறேன்
என் மகளே! நீ நலமாய் இருக்கிறாயா? என்று கேட்பவனல்ல நீ என்னுடன் இருப்பதை நலம் என எண்ணுகிற அப்பா நான். கடவுளிடம் கையேந்தி தவமாய் இருந்து வரமாய் கேட்டபோது மகளாய் உன்னைத் தந்தான். பெற்றவளையே தன் கையில் வைத்துக் கொஞ்சும் பெரும் புண்ணியம் என்னைப் போல் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைத்த பொக்கிசம். அம்மா கொடுத்த அத்தனை முத்தங்களையும் திருப்பித் தரக் கிடைத்த அறிய வாய்ப்பு இது.
எனக்குப் பிள்ளையாய்ப் பிறந்ததால் உன் வளர்ச்சிப் பாதையில் எந்த இடத்திலாவது நான் எட்டிப் பார்த்து விடாதபடி எச்சரிக்கையாய் இருக்கிறேன். நான் என் எல்லையை மீறி இருந்தால் அப்பா என்றும் பார்க்காமல் அதட்டி விடு. உன் அம்மா உன்னை அவள் சமைக்கும் நேரத்தில் மட்டும்தான் என்னிடம் கொடுப்பாள். அப்போது உன்னை வீதியில் வைத்துக் கொண்டு விளையாடும்போது தத்துப்பித்து என்று தடுக்கி விழுவதைப் பார்த்து ரசித்தபோது தான் நான் படித்த தத்துவ நூல் தராத நிறைவை மகளின் நடை தந்து நின்றது.
உன் எதிர்காலம் இந்தக் கல்விக் கூடத்தில் இருப்பதாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை உனக்குத் தேவையெனப் பட்டால் மட்டுமே அதனைத் தேடி எடுத்துக் கொள். நான் தடுக்க மாட்டேன். அங்கு நீ படிக்கும்போது யார் யாரோ எழுதியதையும் பேசியதையும் உன்னை உட்கார வைத்து மனனம் செய்ய வைத்து பலர் கைதட்ட நீ பாரட்டுப் பெறுவதையும் நான் பயிற்றுவிக்க விரும்பவில்லை ஏனென்றால் பலர் கை தட்டினால்தான், பாராட்டினால்தான் நீ உயர்ந்த இடத்திலிருக்கிறாய்! என்ற தவறான பாடத்தை நான் உனக்குத் தந்து விடக்கூடாது. பலர் கூடித் தருகின்ற பல்லக்கும் ஒன்றுதான் பாடையும் ஒன்றுதான். நீ மேடையில் பலர் முயற்சியால் நிற்பதைவிட நீ ஒடையில் தனியாக நீயே ஓடிச் சென்று பட்டாம் பூச்சியைப் பிடித்துப் பறக்கவிட்டு கைதட்டி இரசிப்பதே எனக்குக் கண்கொள்ளாக் காட்சி. ஏனென்றால் அது உனக்கான உலகம் அதனில் யாரையும் உள்ளே நுழைய விடாதே.
எச்சூழலிலும் உள் வளர்ச்சிப்பாதையில் என்னை எதிர்பார்காதே. நான் வாழ்ந்த காலமும், பார்த்த உலகமும் வேறு. அந்த அனுபவங்கள் உனக்குப் பயன்படுமா? என்று தெரியவில்லை. நான் பாஸ்புக்கில் படத்தை ஒட்டியவன். நீ பேஸ்புக்கில் படத்தை வைத்திருப்பவள். உனக்குத் தெரியுமா? உன்னை நடைபழக்கும் போது விரல்பிடித்து அழைத்துச் சென்றவன். நீ சைக்கிள் பழகும்போது பின்னால் நின்று கொண்டேன். அதன்பிறகு என் நிழல் கூட உன் முகத்தை மறைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.
உனக்குள்ள வானத்தை நீயே உருவாக்கிக் கொள் உன் சிறகுகளை எதற்காகவும் சுருக்கிக் கொள்ளாதே. உன் சுதந்திரத்தை எவர் கையிலும் இழந்து விடாதே, சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி உன்னைச் சங்கடப் படுத்துவார்கள் எவர் வலையிலும் எப்போதும் சிக்கிவிடாதே.
நாலுபேர் என்ன சொல்லுவார்கள்? என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதனைத் தாண்டி வந்துவிடு. தயங்கி விடாதே. மனதை அடக்கு என்று பாடம் எடுப்பார்கள். மனதை அடக்கக் கட்டுப்பாடு விதிப்பதும் பிணத்தை அடக்கம் பண்ண கட்டுக்கள் போட்டு வைப்பதும் என்னைப் பொறுத்த மட்டில் ஒண்ணுதான். நீயாவது சுயமாய்ச்சிந்தி, சுதந்திரமாய் முடிவெடு.
திருமணம் என்பது தேவையா? என நீயே தீர்மானித்துக் கொள். தாய்மை அடைய வேண்டாமா? என அடுக்களை அம்புகள் பாயும். தாய்மை என்பது கருப்பையை நிரப்புவதல்ல பலரின் இரப்பையை நிரப்புவது அதனால்தான் நாம் அன்னை திரசாளை இன்னும் கொண்டாடுகிறோம். திருமணம் முடியாமலேயே தாயாகிவிடலாம் ஏனென்றால் எத்தனை தத்துப்பிள்ளைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். எடுத்துவிட்டோம் என்பதற்காக எந்த ஆடையையும் அணியாதே. லூசாக இருந்தால் உன்னை லூசாக்கி விடும். பிடிப்பாக உன்னைக் கஷ்டப்படுத்தும் சரியாக இல்லையென்றால் எடுத்து எறிந்து விடு அது உடையாக இருந்தாலும் சரி உடன் வரும் உறவாக இருந்தாலும் சரி.
அம்மாவை மட்டும் அதிர்ந்து பேசாதே. நீயும் நானும் தான் அவளுக்கு உலகம். ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்தவர்களையே உயிர் கொடுத்தவர்களாக எண்ணும் போது அவள் தன் உதிரத்தையே பாலாகக் கொடுத்தவள். அவள் அறியாத உலகத்தை அடைந்திடவும் அவள் சுவாசிக்காத சுதந்திரக் காற்றை நீ நித்தம் பருகிடவும் வேண்டும். என் உயிர் பிரியுமுன் நீ வர வேண்டும் என்பதற்காக இந்தப் பூமியில் எந்த எல்லைக்கும் செல்லாமல் இருந்து விடாதே. என் உயிர் எப்போதோ பிரிந்து விட்டது. அது உன் உருவில் இந்த உலகில் நடமாடுகிறது. நீ வரும்போது என் உயிர் போகாது. வந்துகொண்டு இருக்கும் என் கல்லறையில் கூட ஒரு சுதந்திரப் பறவையை இந்தப் பூமிக்குத் தந்தவன் என்று இருக்கட்டும் என் அன்பு, ஆசை எல்லாம் என் மகளே நீ….நீயாக……இருப்பதுதான்.
“நான் சப்பரத்தைத் தோளில்
சுமந்தவனல்ல….என்
சாமியைச் சுமந்திருக்கிறேன்
என் மகளை……”
என் கல்லறையிலும் ஒரு சிறு சன்னலை வைத்து விடுங்கள் என் மகள் வரும்போதெல்லாம் நான் எழுந்து எட்டிப் பார்க்க வேண்டும்.