16
Feb
2012
“ஒரு தெருப்பாடகனின் தேசிய கீதம்“
ஓ இளைஞனே ! நீ எழுந்தால் இமயம். நடந்தால் நதி. ஓடினால் புயல். கூடினால் கடல். ஆனால் உன்னையே நீ அறியாததால் உலகம் இன்று தன்னை மறந்து நிற்கிறது. சமுதாயம் காதலைக்காட்டியே உன்னிடம் கண்ணாமூச்சியாடுகிறது. வேலை கொடுக்காமலேயே விரக்தியில் தள்ளுகிறது. உன்னை அடியாளாய் வைத்தே இன்று அரியணை செய்யப்படுகிறது. இந்தச் சரித்திரம் மாற்றப்படவேண்டாமா?
வெறுங்கை என்பது மூடத்தனம். பத்து விரல்கள் நமக்கு மூலதனம் என்ற கவிஞனின் வரியை மறந்து விட்டாயா? தூங்குகிறாயா? இல்லை தூங்குவது போல் நடிக்கிறாயா? எழுவாய்! நீ பொங்கி எழுவாய்! புரட்சியாய் எழுவாய்!
பூக்களை எரித்த போக்கிரிகளுக்குப் போர்வாளாய் எழுவாய்! பயணத்தை மறந்து பாதையில் படுத்துறங்கும் பாமரர்களுக்கு பகலவனாய் எழுவாய்! சோரம் போன அரசியலைச் சுட்டெரிக்க ஒரு சூத்திரமாய் எழுவாய்! போலிச் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உடைத்துவிட்டு புதிய சரித்திரமாய் எழுவாய்!
இளைஞனே! மனதில் ஏற்படுகின்ற வலியும் உடலில் ஏற்படுகின்ற பசியும்தான் ஒரு புரட்சியாளனாய் இந்தப் பூமி பிரபஞ்சம் ஒவ்வொருமுறையும் பிரசவித்துத் தந்திருக்கிறது. இந்த என் போதிமரம் என்ற நூலும் உன்னுடைய வலியையும் உணர்ச்சிகளையும்தான் நான் சற்று உரக்கச் சொல்லியிருக்கிறேன். இதில் உன்னையே உரசிப்பார் நிச்சயம் நீ முரசு கொட்டுவாய்! வா!… வாளேந்தி வா!… புதிய வரலாறு படைக்கவா! இந்த வாலிப வாசலில் உன்னை வரவேற்க நான் காத்திருக்கிறேன்.