03
Jan
2012
வருடம் ஒருமுறை என் வாசலுக்கு வந்துபோகும் அந்தக் கிறிஸ்மஸ் குடிலைக் கண்டதும் இன்றைய நாளில் இவர்கள் வந்தால் நான் என்ன சொல்லுவேன் என்ற யதார்த்தத்தின் வெளிப்பாடு.
மார்கழிக் குளிரில்
மாடடைக் குடிலில்
யார் இவர்கள்?
இறைத்தூதர்களா?
இல்லை, இலங்கை
அகதிகளா?
பஞ்சம் பசியோடு
பாரதம் வந்து
சேர்ந்தீர்களோ!
இனத்தைக் காக்க
இலங்கையில் துப்பாக்கி தூக்க
இந்த துர்ப்பாக்கிய
நிலைக்கு இவர்கள்
துரத்தப்பட்டிருக்கிறார்கள்
மனுமகனாமே!
மண்ணுக்கு எதற்கு வந்தீர்?
விண்ணில் கூட வெடிகுண்டா!
இல்லை வேலை தேடி வந்தீரா?
நடந்தே வந்தீர்களோ!
நலிந்து போயிருக்கிறீர்களே
பஸ்ஸில் கூட வழிப்பறியென்று
பயந்து விட்டீர்களா?
காலைப் பார்த்து வையுங்கள்
கண்ணி வெடி இருக்கப் போகிறது!
பையையும் பார்த்துக் கொள்ளுங்கள்
பறித்து விடப்போகிறார்கள்
வீட்டில் இடமில்லை யென்றதும்
விரக்தி யடைந்தீர்களாமே!
எங்களுக்கு வீடே இல்லையே
வீதிகளில் உறங்கவில்லையா!
விடிவெள்ளி உனக்கு
வழிகாட்டியதாமே!
வெளியில் சொல்ல வேணாம்
விற்று விடப் போகிறார்கள்
ஆயர்களைத் தேடிப்போனாயோ?
அவர்களே ஆள்பவர்கள் வந்தால்
ஆடுகளை மேய்ந்து விடுவார்களென்று
அங்கு போய் இருக்கிறார்கள்
ஏரோது மன்னன் ஏதோ
எதிர்த்துப் பேசினானாம்!
எந்தக் கட்சியென்று தெரியலையே?
எதிர்ப்புத் தெரிவிக்கலாம்
ஓட்டுப் போடவா வந்தீர்கள்?
ஓரமாகப் போய் நில்லுங்கள்
கள்ள ஒட்டுப் போட வந்தவர்கள்
காத்துக் கொண்டு இருக்கிறார்கள்
புதல்வனைக் கொல்லத் தேடுகிறார்களாம்
புத்தி கெட்டவர்கள்
கருவறையிலே காலி செய்யாமல்
கழுத்தறுப்பது பாவமல்லவா!
அதோ வானவன் வருகின்றான்
வாய்மொழியாய் ஏதோ கூறுகின்றான்
தென் மாவட்டங்கள் பக்கம்
திரும்பிப்பார்க்க வேண்டாமாம்
அங்கு சிலைகளுக்கு சீதனம் தர
சிரச்சேதம் செய்கிறார்களாம்
வெடிகுண்டுகள் வைத்தே
விளையாட்டுப் போட்டி நடக்கிறதாம்
அங்கு ஏன் போகிறீர்கள்? அடைக்கலம் தேடியா? அகப்பட்டதைச் சுருட்டி விட்டு அம்போ என விடப் போகிறார்கள்
அரசுத் தொட்டிலையா தேடுகிறீர்கள்?
அப்புறப்படுத்தி விட்டார்கள்
தொட்டிலை மட்டுமல்ல
தூங்கிய குழந்தையுந்தான்!
சீக்கிரமாகப் போய் விடுங்கள்
சி. பி. ஐ வருகிறது
கொள்ளையடித்தவனை விட்டு விட்டு
கொண்டு வந்தவனைக் கொல்லுவார்கள்
நல்லாட்சி எங்களுக்கு
நாங்கள் கண்ட கனவு
விண்ணிலாவது நல்லாட்சி
விளங்கிடப் பாருங்கள்
மண்ணில் இருக்கும் வரை
மரியாதை கிடைக்காது
போய்விடுங்கள் விண்ணுக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கள்!