19
Apr
2020
– மகதலேன் மரியாள் (யோவான் 20/18)
கல்லறையில் இருந்து உயிர்த்த இயேசுவைக் கண்டவுடன் மகதலேன் மரியாள் கூறிய வார்த்தை இது. கடவுளோடு இருந்தவள், அவரோடு வாழ்ந்தவள் அதிகம் அன்பு செய்தவள். ஆயினும் அவளால் உயிர்த்த இயேசுவை உடனே அடையாளம் காணமுடியவில்லை. காரணம் கற்பனையில் கடவுளை அவள் மனதில் வைத்திருந்ததால் கண்முன் தெரிந்த கடவுளை அவள் தோட்டக்காரனாக பார்த்தாள். பிறகு கடவுளே அவளது பெயர் சொல்லி அழைத்த பிறகுதான் அவளுக்கு கடவுளை அடையாளம் காண முடிகிறது.
இவ்வாறு கடவுளுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்தான், பழக்கம்தான் ஆன்மீகம் என்பது. ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொருவருடைய கடவுள் நம்பிக்கையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்த கடவுள் பக்தியும் அவர்கள் மனதிற்குள் கோவிலாகவும் தெய்வமாகவும் வீற்றிருக்கும். ஆனால் இந்தக் கொரோனா என்ற கொடிய வியாதி உலகை ஆட்டிய பிறகுதான் நமது ஒவ்வொருவருடைய ஆன்மீகத்தையும் அது ஆட்டிப் பார்க்கிறது.
கடவுள் யாராக நான் கேள்விப்பட்டேன்? சொல்லிக் கொடுக்கப்பட்டது? என்றால் வரம் கொடுப்பவராக! உடன் இருப்பவராக! நமது நலன் பேணுபவராக! தவறு செய்யும்போது தடுப்பவராக! குற்றங்களை மன்னித்து ஏற்றுக் கொள்பபவராக எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. இவையெல்லாம் என் வாழ்வில் நிகழும் போது கடவுள் எனக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். தானாக நடந்தால் அது மேலிருந்து இறைவன் அருளியதாகவும், மனிதர்கள் மூலம் நடக்கும்போது அவர்களே கடவுளின் அவதரமாகவும் எண்ணினேன்.
நோயும், பேயும் எனை மிரட்டும் போதெல்லாம் கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் என அழுவேன், தொழுவேன், மரண பயம் வரும்போதும், துன்பம் துயரம் வாட்டும் போதும் அவர்முன் மண்டியிடுவேன். கடவுள் மகிழ்ச்சிக்காய் தொண்டுகள் செய்வேன். இதுவரை கோவில்கள்தான் எனக்குக் கடவுள் வாழும் இல்லம். நோயைக் குணப்படுத்த தாயத்துத் தந்தவர்கள், தண்ணீர் தெளித்தவர்கள், மந்திரம் செபித்தவர்கள், தலையில் ஆசீர்வதித்தவர்கள், வரம் சொல்லும் சாமியாடிகள், சாமியார்கள் என் விடுதலைக்குப் போராடும் சாதித்தலைவர்கள், ஆபத்து என்றால் தன் உயிரை பணயம் வைத்து திரையில் மட்டும் காப்பாற்றுகின்ற திரைக் கதாநாயகர்கள் இவர்களைத்தான் கடவுளாக நினைத்து வழிபட்டு வந்தேன். கொரோனா வந்தது. கோவில் கூடாரம் காலியானது. இறையடியார்கள் இறைவனின் அவதாரங்கள் என்ற கும்பல்களும் தலைமறைவானது.
இப்போதுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. இனிமேலாவதுக் கடவுளை சரியாகக் கண்டுகொள்ள வேண்டும் அல்லவா? கொரோனா ஆன்மிகத்தை அசைத்துப் பார்ப்பது மட்டுமல்ல அடியோடு மாற்றியும் விட்டது. கொரோனா மரணபயத்தைக் கொடுத்துவிட்டது. இதில் ஓடோடி வந்து உதவி செய்ய வருகிறவர்கள் யார்? இவர்களே கடவுள்கள் கடவுளின் அவதாரங்கள்.
காலத்தில் தேவையை உணர்ந்து சேவை செய்கிற ஒவ்வொருவரும் கடவுளின் அவதாரங்களே. கடவுள் சொன்ன தன் குடும்பத்தைப்பிரிந்து சமூகத்தை நேசிக்கிறவன் யார் என்றால்? இன்று காவல்துறையினர் தன்குடும்பத்தை பிரிந்து சமூகத்தைக் காக்க தெருவில் நிற்பவர்களே. தனக்குரியதை விற்று ஏழைகளுக்கு கொடுப்பவர், சமூக நல ஆர்வலர்களே. ஆங்காங்கு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குகிறவர்கள் பொதுநலம் பேணுபவர்கள். தன் உயிரைத் துறந்து பிற உயிர்களைக் காக்கினறவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே. இறைவன் சொல்வதுபோல் இன்று சமூகத்திற்காகத் தன்னையும் தம் வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள் இவர்கள்தானே. இவர்கள் தான் இறைவன் விரும்பிய இறைவன் சொன்ன கடவுளும், கடவுளின் அவதாரங்களும் ஆகும்.
இப்போது சாமியாடியவர்கள் எங்கே? வாக்குச் சொன்னவர்கள் எங்கே? கடவுள் விடுவிக்கிறார்! கடவுள் குணமாக்குகிறார் என்று கதைவிட்டவர்கள் எங்கே? கல்லாப் பெட்டியில் காசு நிரப்பியவர்கள் எங்கே? இப்போது புரிகிறதா!
உயிர்த்த இயேசுவை மகதலேன் மரியாள் தோட்டக்காரனாகப் பார்த்தாள். தோட்டக்காரர்தான் கடவுளின் அவதாரம் என்பது தெரியாததால் அன்று அவளால் கடவுளைக் காண முடியவில்லை. இன்றளவும் தோட்டக்காரர்களாக இருக்கின்ற விவசாயிகளை கடவுளாக காணமுடியவில்லை. அதனால்தான் கண்முன் நடந்த அவர்களது மரணத்தையும் தடுக்கவில்லை. கடவுள் எங்கேயோ இருக்கிறார்! என்று எண்ணிவிடக் கூடாது கண்முன்னே என் மரணத்தைத் தடுப்பதற்காக தன் உயிரைக் கொடுக்கின்ற காவல்துறை, மருத்துவர்கள், பொதுநலசேவகர்கள் இனிவரும் காலங்களில் இறை அவதாரமாக இருக்கட்டும், உடைகளைக் கண்டு மயங்கிவிடாதீர்கள், போலிச் செபங்களைக் கண்டு உங்களை இழந்துவிடாதீர்கள். நம்மை எப்போதும் முட்டாளாக்கத்துடிக்கின்ற தலைவர்களிடமிருந்து ஒதுங்கியே இருங்கள்.
உலகம் இப்போது வறுமையின் பிடிக்குள் தன்னை இழந்து கொண்டிருக்கிறது. உங்கள் ஆடம்பரங்களைக் குறைத்துப் பிறர் அத்தியாவசத்திற்கு உதவுங்கள். கோயில்களின் உண்டியல்களை நிரப்புவதை விட்டுவிட்டு ஏழைகளின் வயிற்றினை நிரப்புங்கள். ஆலயங்களை விரிவுபடுத்துவதை விட்டுவிட்டு குடிசைகளுக்குக் கூரை வேய்யுங்கள். கடவுளுக்குக் கொடுக்கிறேன் என்று தலைவர்களிடமும், நன்கொடை வசுலிப்பவர்களிடமும் கொடுத்து விடாமல் இல்லாத ஏழைகளிடத்திற்கு நீங்களே நேரில் சென்று கொடுத்து விடுங்கள்.
இனிமேலும் நமது பயணம் கோவிலை நோக்கியல்ல, குடிசையை நோக்கி… வழிபாட்டுக்குச் செலவு செய்வதைவிட பிறர் வாழ்க்கை பாடுகளுக்கு செலவு செய்வோம். அர்ச்சனைப் பொருட்கள் வாங்குவதை விட அரிசி பருப்பு வாங்கிக் கொடுப்போம். ஒவ்வொரு கடவுள் பக்தரும் ஒரு பாமரனைத் தத்தெடுப்போம். இறந்த கடவுள் உயிர்த்து விட்டார். அவர் உயிர்த்த பிறகும் இறந்து கொண்டிருக்கிற மனிதர்களை உயிர்ப்பிக்கச் சொல்கிறார், வாருங்கள் அவர் வழியில் நடப்போம். அவர் நினைவில் கலப்போம். நாமும் கடவுளாக இருப்போம்.