02
Aug
2024
இறைவா இது என்ன சோதனை? இது யாருக்குத்தண்டனை? இறைவனின் கோபமா? இயற்கையின் சீற்றமா? இயற்கையை அழித்திருக்கிறோம். அதற்காக இயற்கை நம்மை அழிக்குமா? தண்ணீரின்றி தவித்திருக்கிறோம். ஆனால் தண்ணீரில் தவிப்போமா?
நிலம் பொறுமையானது என்பார்களே! ஏன் பொறுமை இழந்தது? இடைவிடாத மழை எப்போதும் வருவது தானே…! என்றுதானே நினைத்தோம்! இப்போது எங்களுக்கு அது நினைவு அஞ்சலி செலுத்திவிட்டதே!. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமா? இங்கு சத்தமின்றி இரத்தமின்றி சகதியில் புதைந்தோமா?
இயற்கையை நம்பித்தானே எங்கள் வாழ்க்கை. இயற்கை துரோகம் செய்து விடுமா? பாவ புண்ணியம் பார்க்காமல் எந்தப் பாரபட்சம் காட்டாமல் படுகுழியில் தள்ளி விட்டதே! இறக்கும்போது யாராவது நாலுபேர் நம்மைத் தூக்கிக் போட வேண்டும். அதற்காகவாவது நாலுபேரைச் சம்பாதிக்க வேண்டும் என்பார்கள். இங்கு யார் இறந்தது? யார் தூக்கிப்போடுவது? யாரையும் விட்டு வைக்கவில்லையே அதுதான் இயற்கையே நம்மை குழிதோண்டாமல் குழி மொழுகி விட்டதே!.
நேற்று அவர்கள் நினைத்தார்களா? நாளை நாம் இருக்கமாட்டோம் என்று! இல்லையே! அங்கு எத்தனை நினைவுகள்! எத்தனை கனவுகள்! எத்தனை இலட்சியங்கள்! எத்தனை முன்னெடுப்புகள் அனைத்தும் ஒரே நாளில் ஊத்தி மூடிவிட்டாயே! எத்தனை மருத்துவர்கள்! எத்தனை வல்லுநர்கள்! எத்தனை தலைவர்கள்! எத்தனை கலைஞர்கள்! எத்தனை போதனையாளர்கள்? எத்தனை சாதனையாளர்கள்! அத்தனையும் இன்று வேதனையாகிவிட்டதே! முதிர்ந்த மரங்கள் சாயலாம்! முற்றிய கனிகள் உதிரலாம்! ஆனால் இலை, பூ, பிஞ்சு, காய், கனி என்று அனைத்தையும் அழித்துவிட்டாய் ஆண்டவா…! இது என்ன பாவப் பூமியா? சாத்தானின் தோட்டமா? சாவு வந்து சந்தித்ததே…
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 15 நாட்களாகக் கனமழை பெய்து கொண்டிருந்தது. குறிப்பாக காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் மழை கொட்டிக் கொண்டு இருந்தது. கடந்த 30ந் தேதி வயநாட்டுப் பகுதியில் உள்ள சூரல்மாலா பகுதியில் சுமார் 86,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் பயங்கர கனமழை பெய்தது அப்போது 1550 மீட்டர் உயரத்தில் இருந்து ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
தொடர் மழையின் காரணமாக மண் பலகீனமாகிறது. இதனால் இடம் நகர ஆரம்பிக்கிறது. இயற்கைத் தனது இருப்பிடத்தை மாற்றும்போது நதிகள் வேறு இடம் நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதனால் நகரம் நரகமாகிறது. இதனால் இங்கு ஓடுகின்ற இருவைப் புழா ஆறு, சாலி ஆறு வேறு இடம் நகர்கிறது அப்போது அங்கிருந்த வீட்டிற்குள் நுழைகிறது அப்பகுதியில் அகப்பட்ட மேம்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி வெள்ளேரிமலை, பொத்துகலு போன்ற கிராமங்கள் மூச்சுத்தினறி மூச்சுவிட மறந்தன. மூச்சையடக்கி இறந்தன.
கடவுள் தேசம், கைவிடப்பட்ட தேசம் ஆகிவிட்டது. அம்மா அடித்து குழந்தை இறக்குமா? எப்போதாவது அரிதாக இது நடக்கும் அதுதான் இங்கு நடந்து விட்டது. அவ்வப்போது மழை வரும். சிறு சிறு மிரட்டல்கள் இருப்பினும் இருப்பிடம் விட்டு எங்கு செல்வது? என்று எண்ணி வாழ்ந்த மக்களை இருந்ததையே காலி செய்து விட்டது.
தப்பிப் பிழைத்து ஒருவர் தொலைக்காட்சியில் பேசினார். தூரத்தில் இருந்த மகன் தொலைபேசியில் மண் சரிவு ஏற்படுகிறது அப்பா ஒடுங்க என்றவுடன் உயரமான பகுதிக்கு ஓடுவதற்குள் அருகில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலி ஆறு ஓடிவந்து சந்தித்தவர்களையெல்லாம் சமாதியாக்கிக் கொண்டிருந்தது.
கடவுள் கைவிட்டுவிட்டாரா? இயற்கையை ஏவிவிட்டாரா? இங்கு இறந்ததில் அதிகம் குழந்தைகள் தானே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஆபத்து என்றால் கத்தக் கூட முடியாமல் ஆண்டவனால் மட்டுமே சமாதியாக்க முடிகிறது. இவன் காப்பவனா? கதை முடிப்பவனா?
எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ? என்று சொல்வது போல எந்தச் சகதிக்குள் எத்தனை பிணங்களோ? மண்ணைத்தோண்டி பிணங்களைப் புதைப்போம். இப்போது மண்ணைத் தோண்டி பிணங்களை எடுக்கிறோம்! இரவில் அவர்கள் தூங்கினார்கள் ஏதோ ஒன்று வந்து தொடுகிறது மூடுகிறது, அமுக்குகிறது. துடிக்க வைக்கிறது ஐயோ பக்கத்தில் இருப்பவர்களுக்கு என்னவோ? என் பிள்ளைகளுக்கு என்ன நடக்கிறதோ? என்று துடிக்க துடிக்க அவர்கள் மூச்சை நிறுத்துகிறது. கடைசியாக அவர்கள் என்ன சொல்ல நினைத்திருப்பார்கள்? அவர்களின் கடைசி ஆசை என்ன? யாருக்குத் தெரியும்? பேசாமலேயே பிணமாகிவிட்டார்கள்.
பாவம்! பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ஆனால் பிழைக்கவில்லை இறந்துவிட்டார்கள். நாம் சேர்த்தது எல்லாம் நம்ம கூட வரவா போகிறது? என்பார்கள். ஆனால் இவர்களை மூட வந்திருக்கிறது. சகதியில் மாட்டியதால் அவர்களை மொத்தமாகக் கூட மீட்க முடியவில்லை. கையைப் பிடித்தால் கை மட்டும் வருகிறது. காலைப் பிடித்தால் கால் மட்டும் வருகிறது. மண்ணின் பசிக்கு அகப்பட்ட மனிதர்களை விட மறுக்கிறதோ? என்னவோ?
மரணம் வரும்! அது எதிர்பாராத நேரத்தில் வரும்! உண்மைதான் ஆனால் இப்படி வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காலன் தன் கடனைத் தீர்த்துக் கொண்டானோ! மண்ணுக்குப் பசி அடங்கவில்லையோ! அழுகக்கூட ஆட்களை வைக்காமல் அடக்கம் செய்துவிட்டானோ…!
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது. சாவுக்குப் பயப்படலாம். ஆனால் ஊரே பயப்படும் அளவிற்கு ஒரு சாவு வேண்டுமா? இறைவா அமைதியாக எங்களைப் போக விடு! எந்தக் கோபம் இருந்தாலும் மன்னித்துவிடு! இயற்கையை ஏவி விடாதே! நிலம் பொறுக்கும் என்பார்கள் நிலம் அவர்களை விழுங்கிவிட்டதே! அந்தக் காட்சியை எல்லாம் காணொளியில் பாருங்கள்! கண்ணீர் விடுவதற்காக அல்ல கடவுள் நம்மையும் ஒரு நாள் அழைப்பான்! ஆனால் எப்படி அழைப்பான்? யாருக்குத் தெரியும்? அடக்கம் பண்ணப்படும் வரை நாம் அடங்கியே இருப்போம். அதிகாரம் வந்தாலும் கொஞ்சம் அடங்கியே இருப்போமே! ஏனென்றால் முடிவு அவன் கையில்… நீங்கள் முட்டினாலும் மோதினாலும் முடியாது.
இவர்கள்…
கண்மூடியதால்…
மண் மூடியவர்களலல்ல…
மண் மூடியதால்…
கண் மூடியவர்கள்….