18

Jul

2022

கட்டாயம் இல்லை…

-ஆனால் கடைப்பிடிக்கிறோம்…

வாழ்க்கைப் பயணத்தில் வழி நெடுகில் யதார்த்தத்தைத் தொலைத்துவிட்டு பாசாங்கு செய்வதும் பம்மாத்துப் பண்ணுவதும் பதவியில் இருப்போருக்குப் பல்லக்குத் தூக்குவதும் ஏழை எளியவர்கள் இடத்தில் அதிகாரச் சாட்டையை அத்துமீறி பயன்படுத்துவதையும் நமது அன்றாட வாழ்வில் எந்நாளும் பார்க்கின்ற இனிய நாடகம் இது.

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் வாழ்வில் ஒரு நாளில் எத்தனை மணிநேரம் நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள்?. மற்றவர்களுக்காக எத்தனை மணிநேரம் மாறுவேடம் போடுகிறோம்? என எண்ணிப்பாருங்கள் இதனைப் படித்தவுடன் ஏதோ பெரிய நாடகம் போடுவது போல் கற்பனை பண்ணிக் கொள்ளவேண்டாம். நாம் நாமாக இருக்கமுடிகிறதா? மற்றவர்களுக்காக மாறிக் கொண்டே இருக்கிறோமா? இதனை எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆடை அணிவதன் அவசியமே அடுத்தவர்களுக்காகத்தான்!

ஒவ்வொரு நாளும் நமது வாழ்வில் மனதிற்குப் பிடித்ததைப் பேச முடிகிறதா? செய்ய முடிகிறதா? மனதிற்குப் பிடித்தவர்களோடு பேச முடிகிறதா? இல்லையே! சட்டம், சம்பிரதாயம் சமூகம் என சகலத்தையும் எண்ணித் தானே பேசவோ, பழகவோ முடிகிறது. ஒரு நிறுவனத்தை எண்ணிக் கொள்ளுங்கள் எத்தனைபேர் நம் மனம் கவர்ந்தவர்கள்? ஆனாலும் அத்தனை பேருக்கும் நாம் வணக்கம் போட வேண்டியது இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம் தானே? நாம் நாமாக இருக்கமுடிவதில்லையே!.

குடியரசு தினம், சுதந்திரத்தினம் போன்ற நாட்களில் ஒவ்வொரு நாட்டு அதிபரும் முதல் மரியாதை ஏற்பார்கள் உலகமே நின்று வேடிக்கை பார்க்கும். ஆனால் மரியாதை செய்பவர்கள் மனமுவந்து செய்வார்களா? இல்லையே எத்தனை பயிற்சிகள்! எத்தனை சாகசங்கள்! அத்தனையும், சட்டத்திற்காகவும், தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளவும், அதிகாரியிடம் நற்பெயர் எடுக்கவும் நாம் போடும் மாறுவேடம் தானே?!

ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் செல்வோம் அங்கு இருக்கிற தலைவரையும், அவர் குணத்தையும் நமக்குக் கொஞ்சம் கூடப்பிடிக்காது. ஆனால் அதனைச் சொல்லவோ, நம் விருப்பப்படி நடக்கவோ நம்மால் முடியுமா? ஆனால் அவருக்குப் பயந்து அவரது அதிகாரத்திற்குப் பயந்து அவரைப் பிடிப்பதுபோலும், அவருக்குப் பிடிப்பதுப் போலவும் நாம் ஒரு நடிப்பை வெளிப்படுத்துவோமே! அது உலக நடிகனையெல்லாம் ஓரங்கட்டிவிடும். நாம் நினைத்ததைச் சாதிக்கவும், நாம் நினைத்தவர்கள் சாதிக்கவும் நாம் போடும் நாடக வேடம் நாடே அறியும் இருப்பினும் நாம் நன்றாக நடிப்போம்.

நம்மைச் சுற்றி வாழும் துறவிகளைப் பாருங்கள் அவர்கள் பல்வேறு பணிகளில் பல்வேறு பதவிகளில் பல்வேறு இடங்களில் பவனி வந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் இறுதியில் எண்ணிப் பார்த்தால் எத்தனை பேர் யதார்தமாகப் பழகி இருப்பார்கள்? என்று எண்ணிப் பார்த்தால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பதவியில் இருக்கும் வரை பழத்த மரத்துப் பறவையைப் போல் உண்டு கொழுத்;து உறவாடி மகிழ்ந்தவர்கள் எல்லாம் இன்று கண்டும் காணாமலும் போய்க் கொண்டிருப்பார்கள் மேடையில் வைத்து இராஜா, மந்திரி என்று இராகம் போட்டு இசைத்தவர்கள் எல்லாம் இன்று மற்றவருக்குத் தாளம் போட மத்தளம் இசைத்துக் கொண்டு இருப்பார்கள்! ஜால்ராக்கள் சத்தம் மட்டும் சவ்வு கிழியும். ஆனால் தலைவர்கள் மட்டும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பார்கள்.

இல்லறத்தில் இதைவிடக் கொடுமை கணவன் மனைவி என்ற இல்லறப் பந்தத்தில் எட்டு வைத்தபிறகு எங்கேயும் எட்டிப்பார்க்க முடியாது. உறவுகளைத் தொட்டுப் பேச முடியாது முகமூடி அணிந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோம் சில சுயநலவாதிகள் பெண்களை பிறந்த வீட்டிற்கே அனுப்பாமல் பித்து பிடித்தவனைப்போல் கட்டுத்தறிக்குள் விழும் காளைகளைப் போல் கயிற்றினைக் கட்டி கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். உணர்ச்சிகள் முற்றிலும் செத்த கோமா நிலையில் குடும்பம் நடத்துகிற பெண்கள் இந்தப்பூமியில் எத்தனைபேர்?

இதுவே இப்படி என்றால் காதல் திருமணம் என்ற பெயரில் திருட்டுத்தனமாகப் பேசி திருட்டுத்தனமாகத் திருமணமே முடித்தபிறகு இன்றும் திருட்டுத்தனம் தொடருமோ? என அடுத்தவர்களை வேவு பார்த்து மனைவியைச் சந்தேகத்திலேயே சமாதி வைத்திடுவான் நம்பாத கணவனிடத்தில் நல்ல விதமாய் நடிக்க வேண்டியது இருக்கிறது. பெற்றோர்கள் நடிப்பு, பிள்ளைகள் நடிப்பு, அலுவலகத்தில் நடிப்பு அரசியலின் நடிப்பு ஆக ஒவ்வொரு நடிப்பும் ஓராயிரம் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுத் தரும்.

சரி எது எப்படியோ! யதார்த்த நிலையிலும் எப்போதும் வாழ்ந்து விட முடியாது. அதற்காக நடித்தே நாட்களை நகர்த்தி விடவும் முடியாது. அதுவும் நெஞ்சுக்குள் நெறிஞ்சி முள்ளாய் குத்தும். அடுத்தவர்களுக்காக வாழ நினைக்கும்போது தான் ஆயிரம் முகமூடிகளைப் போட வேண்டியது இருக்கிறது. கூடுமானவரையில் சாயம் போகாமல் சோரம் போகாமல், எதையும் தாங்கும் துணிவும், எதையும் இழந்து விடுவோம் என்ற பயமும் இல்லாமல் வாழ முயற்சிப்போம். பலரைச் சிலகாலமும் சிலரைப் பல காலமும் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. அப்படி இருக்க உங்களை ஏன் ஒவ்வொரு நாளும் ஏமாற்றுகிறீர்கள் நீங்கள் நீங்களாகவே இருங்கள்!

“படித்தவர்களுடன் வாழ்வதைவிட – மனதிற்குப்
பிடித்தவர்களுடன் வாழ்வோமே!”

ARCHIVES