15

Jul

2023

கண்கண்ட தெய்வமே !…

ஐயா என்னுடம்பு புல்லரிக்கிறது. நீங்கள் வாழ்ந்த ஊரை எனக்குத் தெரியும். நீங்கள் இருந்த கட்சி எனக்கும் புரியும். உங்களைப் போல் நானும் ஒரு தமிழன் தான் என்று எனக்கு நானே மார்தட்டிக் கொண்டாலும் உங்களைப் போல் ஓரளவு கூட வாழவும் முடியவில்லை வாழ்ந்தவர்களையும் பார்க்கவில்லை.

ஐயா அரசியல் என்பது தன்னைக் கொடுப்பது என்ற தாரக மந்திரத்தைத் தந்தவரே! இப்போதைய அரசியல் எல்லாம் தனக்காக மட்டுமே எடுப்பது என்றல்லவா? வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களே! இவர்களை எல்லாம் தடி கொண்டு அடிக்க வேண்டும். ஆனால் நீர் ஆத்திரப்படக்கூடியவர் என்பதற்காக உம் சிலையில் கூட தடியை வைக்காமல் உசாராய் இருக்கிறோம்.

சொந்தக்காரர்களுக்கென்று எந்தச் சலுகையும் செய்யாமல் வாழ்ந்த சுத்தத் தங்கமே! இப்போது எங்கள் அரசியல்வாதிகள் செத்துப்போன சொந்தங்களின் பெயர்களை எடுத்து வந்து அடித்து வைத்திருக்கிற பிடுங்கி வைத்திருக்கிற பெயர்களை எல்லாம் பினாமி பெயரில் பதிவு செய்திருக்கிறார்களே இந்தப் பித்தலாட்டக்காரர்கள். ஐயா நீங்கள் வாய்க்கால் வெட்டிய அரசியல் என்ற ஜீவநதியை இப்போது கூவம் நதியாக்கி குளித்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எங்களால் அவர்களை நெருங்கமுடியவில்லை. அந்த நாற்றத்தையும் சகிக்க முடியவில்லை.

ஐயா பள்ளிப்பிள்ளைகள் எல்லாம் பட்டினி கிடக்கிறதே! இவர்கள் பசியை ஆற்றினால்தானே! படிக்க முடியும் என நினைத்து பிச்சை எடுத்தாவது படிக்க வைக்க வேண்டும் என நினைத்த பெரிய மனசுக்காரரே! இதோ எங்கள் அரசியல்வாதிகளும், எல்லோரும் படிக்க வேண்டுமென்று பள்ளி நடத்துகிறார்கள் ஆனால் படிப்பதற்கு வீட்டுப் பட்டாக்கள் வரை புடுங்கிக் கொண்டு பெற்றோர்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்கள்!

ஐயா பிரதமருடன் நீங்கள் நடந்துவரும் போதுகூட நீங்கள் கம்பீரமாய் வருகின்ற தோற்றம் இன்னும் கண் முன்னே நிற்கிறது. ஆனால் இன்று முதல்வருடன் வருகிறவர்கள்கூட முட்டிப் போட்டு நடந்து கொண்டிருக்கிறார்களே! காரணம் காமராஜர் ஐயா நீங்கள் தன்மானச் சிங்கம் தலை நிமிர்ந்து நிற்கிறீர்கள். இன்று பணத்தாசையாலும், பதவியாசையாலும் தலைமைக்குப் பாதம் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் இந்தப் பாவிகளை நீங்கள்தான் ஆவியாக வந்து காப்பாற்ற வேண்டும்.

நீர் வகுத்த திட்டங்கள் எல்லாம் நிலையானவை. ஆனால் எனோ அடுத்த தலைமுறைக்கு வந்து விடாமல் இந்த அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்கிறார்கள். மதிய உணவு கொண்டு வந்தீர்கள். அதனை சத்துணவாக மாற்றினார்கள். ஆனால் அதற்குக் கொடுக்கின்ற காசினை கொள்ளை அடித்து விட்டு மீதம் உள்ளதை மட்டுமே மதிய உணவாக வழங்குகிறார்கள்.

அணையைக் கட்டிக் கொடுத்தீர்கள். நாங்கள் நீரைத் தேக்கினோம். ஆனால் இன்று இந்தக் கயவர்கள் தண்ணீரைக் காசுக்கு விற்று விட்டு எங்களைப் பஞ்சப் பரதேசியாக்கி விட்டார்கள். அழகிய பாலங்களைக் கட்டிக் கொடுத்தீர்கள். அதனைப் பழுதடைய வைத்து விட்டு இன்று பலான தொழிலுக்குப் பக்க பலமாக வைத்து கொண்டார்கள். பாமரனும் படிக்க வேண்டும் என்று படிக்காத மேதை நீர் ஆசைப்பட்டீர். ஆதனால் பார்க்குமிடமெல்லாம் பள்ளிகளைத் திறந்து கட்டணம் என்ற பெயரில் கல்லாக் கட்டி பல குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

வாழ்நாளெல்லாம் பிறருக்காக வாழ்ந்த வள்ளலே இங்கு நாங்கள் வாழ்வதற்குத்தானே நாலுபேரை சாகடிக்கிறோம். சால்ராக்களின் சத்தத்தில் எங்கள் தலைவர்களின் சவ்வு கிழிந்து கொண்டிருந்தாலும் புகழ் என்னும் போதை இறங்காமல் எப்போதும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சத்தியவான் நீங்கள் செத்துவிட்டீர்கள் என்றவுடன். எங்கள் தலைவர்கள் சாதனையாகச் சாராயக் கடைகளை தெருவெல்லாம் திறந்து குடிமக்களை எல்லாம் எப்போதும் குடிமகன்களாகவே வைத்திருக்கிறார்.

இன்னும் கூட வருபவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியமைப்போம் என்று சொல்லிச் சொல்லியே எங்கள் சொத்துக்களை வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் காலத்தில் அதிகாரிகளைக் கூட மரியாதையாக நடத்தினீர்கள் ஆனால் இன்று நீதிமன்றத்தைக் கூட விலைக்கு வாங்கி தீர்ப்புகளை வைத்து பழிதீர்க்கின்ற செயல், கொள்ளையடிக்கின்ற, கொடுமைப்படுத்துகின்ற நிலை குண்டார்கள் அழிவுகளை விடக் கொடுமையானது.

நீங்கள் கொடுத்த சத்துணவை இன்னும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். உன்னைப்போல் நானும் கொடுத்து மகிழ்ந்திட… நீர் கட்டிய அணையிலிருந்து நீரை எடுத்து விவசாயம் செய்கிறோம். நீர் கொடுத்த இலவசக் கல்வியை நானும் கற்றதால் பாடமும் படித்தேன். பாடமும் நடத்துகிறேன். அனைவரும் குலத் தொழில் செய்யுங்கள் என்று கூட்டம் கொக்கரித்ததே! அதற்கு சாவு மணி அடித்தது நம்ம ஐயா! அந்தச் சத்தமே தொலைந்து விட்டது. தூக்கி எறியப்பட்டுவிட்டது.

ஐயா உங்கள் பெருந்தன்மையான மனசு எல்லோருக்கும் வேண்டும். நீங்கள் கடவுள் பக்தி அதிகம் இல்லாதவர் காரணம் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர் அல்லவா!

இன்றளவும் நாங்கள் இறைவனை வேண்டினால் இறைவா எங்களுக்கு இன்னொரு காமராஜரைக் கொடு அவர் எங்களை மட்டுமல்ல அனைவரையும் பார்த்துக் கொள்வார். பாரதத்தை இன்னும் சில படிகள் ஏற்றிவிடுவார். பாரதத்தில் இப்படி ஒரு மகான் பிறந்தார் என்று இன்றளவும் பரலோகத்தில் கொண்டாடிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் பூமியில் தான் அவரது புகழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு இருக்கிறோம். பெரியார் கூட இன்னும் சில ஆண்டுகள் காமராஜரிடம் இந்த நாடு இருந்தால் தான் இந்த நாடு உருப்படும் எனப் பறைசாற்றினார். ஆனால் நாங்கள் காமராஜரையேத் தோற்கடித்தவர்கள் அல்லவா? ஆமாம் எங்கள் சவக்குழியை நாங்கள் எப்போதோ வெட்டி விட்டுத்தான் பணியைத் தொடங்கினோம். கடவுளே இனியும் எங்களை நீர் காப்பாற்ற முடியுமென்றால் இறைவா காமராஜரைத் தா! இல்லை காமராஜரைப் போல் ஒருவரைத் தா!

“ஏழைகள் ஏற்றம்பெற!
எப்போது வருவார்?
எங்கள் காமராஜர்
வழிபார்த்து…”

ARCHIVES