13

Mar

2026

கண்ணகிகள் கண்டிக்க வேண்டும்!…

-பெண்ணியம்

கண்ணகி என்றவுடன் அவளது காற்சிலம்பும் அவளுடைய கர்சனையும், மன்னனை மண்டியிட வைத்ததையும் தனக்கு மாலையிட்டவனை குற்றமற்றவன் என்று நிருபித்ததையும் நீதியை வாழவைக்க மன்னன் குடும்பத்தைச் சாகடித்ததையும், சாகாவரம் பெற்ற இலக்கியம் சிலப்பதிகாரம் நமது சிந்தனைக் கதவினை நெடுநேரம் தட்டிக்கொண்டே இருக்கும்.

இதனால் என்ன பயன்? கண்ணகியைப் படித்துப் படித்து நமது பாரதத்தில் புரட்சிப் பெண்கள் பெருகிவிட்டார்களா? தவறு செய்யும் அரசுகள் எல்லாம் வீரப் பெண்மணிகளைக் கண்டு வாலைச் சுருட்டி விட்டதா? வேறென்ன விடியலைக் கண்டோம்?

எனக்குப் புரிந்த வகையில் கண்ணகி செய்தது புரட்சியல்ல! இளங்கோவடிகள் செய்ததுதான் இதிகாலப் புரட்சி! ஆணாதிக்கம் நிறைந்த இச்சமுகத்திற்கு, ஒரு அறநெறிக் கருத்தைத் தெளிவுற வளர்க்க அவர் எடுத்த கதாபாத்திரம்தான் கண்ணகி. ஆனால் நாமோ! அவர் கொடுத்த அறநெறியை அங்கேயே போட்டுவிட்டு கண்ணகியை மட்டும் எடுத்து வந்து கதை வடித்தோம்! சிலை வடித்தோம்! காற்சிலம் பொடித்தோம்! மன்னன் கதை முடித்தோம்! இளங்கோவடிகளின் எண்ணத்தை எலும்புக் கூடாக்கிவிட்டோம்! குடத்திலுள்ள தண்ணீரை குப்புறக் கொட்டிவிட்டு வெற்றுக்குடத்துடன் வீடுவந்து சேர்ந்தது போல அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு அணிகலன்கள் அணிந்து அழகுபார்த்துக் கொண்டு இருக்கின்றோம்!

இளங்கோவடிகள் சொன்ன அறநெறிக் கருத்துக்கள் என்ன? i)அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் ii) உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் iii) ஊழ்வினை வந்து உறுத்துட்டும் இதன் கருத்து என்ன? அரசியல் பிழை செய்தவருக்குத் தர்மம் தண்டனை கொடுக்கும்! பெண்களின் புனிதத்தைப் பெரியோர்கள் போற்றுவார்கள். செய்த பாவத்திற்கு சீக்கிரம் தண்டனை கிடைக்கும் என்பதுதானே!

அப்படியென்றால் கோவலனின் மரணத்திற்கு யார் காரணம்? கண்ணகியின் காற்சிலம்பை விற்பதற்கு யார் காரணம்? அவளது கோபம் யாரை நோக்கிச் சென்றிருக்க வேண்டும்? ஒரு நிமிடம் கொஞ்சம் சிந்தித்து இந்தக் கலாச்சாரக் கிழிந்த சட்டையை கழற்றி வைத்துவிட்டுப் பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும்!

அரசனுக்கு நிகரான செல்வாக்கு உள்ள பணக்காரன் கோவலன்! வசதியான வீட்டில் வளர்ந்த பிள்ளை கண்ணகி, பெரியோர்கள் நிச்சயித்தத் திருமணம். அப்படியிருந்தும் அந்த அயோக்கியப் பயல் மாதவி மீது மையல் கொள்கிறான் வாழ வேண்டிய பெண்ணை வாழாவெட்டியாக்கி வீட்டில் அடைக்கிறான். கண்ணகி பூ இழக்கிறாள், பொட்டு இழக்கிறாள், புத்திர பாக்கியத்தை இழக்கிறாள். ஆடவன் வீட்டில் இல்லாததால் அந்நியர்கள் வரவு குறைபடுகிறது கொண்டாட்டங்கள் இல்லை, குலவைச் சத்தம் இல்லை. ஒரு இழவு வீடுபோல் ஆக்கிவிட்டுச் சென்றவனுக்கு வக்காலத்து வாங்கி வாசலுக்கு வந்த கண்ணகியை நாம் கண்டிக்கத்தான் வேண்டும்.

கோவலனைப் போல் கண்ணகி பிறர் மனை போய்வந்தால் அங்கு கண்ணகியின் காற்சிலம்பு கழண்டு இருக்காது கால் எலும்பு கழண்டு இருக்கும். அதுதானே ஆணாதிக்கம்! ஆளுக்கொரு நீதியைச் சொல்வதுதான் அரசியல் தர்மமா? அது நமக்கு வேணுமா?

இன்று வரை கண்ணகிகள் எல்லாம் கணவர்களின் தவறுகளுக்குத் துணைபோவதால்தான் இந்த நாடு நாசமாய்ப் போய்க் கொண்டு இருக்கிறது. அன்று கோவலன் மாதவி வீட்டில் மயங்கிக் கிடந்ததுபோல் இன்றையக் கோவலன்கள் குடியோடு குடும்பம் நடத்திக் கொண்டு சாக்கடைகளில் மயங்கிக் கிடக்கிறார்கள்;. கணவனின் அற்ப ஆசைக்காக கண்ணகிகள் நகைகளை உடைகளை கழற்றிக் கொண்டே இருக்கிறார்கள்? இவர்கள் கற்பைக் காக்கிறார்கள்! குடும்பத்தை அழிக்கிறார்கள்.

கிராமத்தில் கிழவிகள் சொல்வார்கள் தன்னுடைய ஆம்பிளையைத் தட்டிக்கேட்க துப்பில்லாத பொம்பள! வீதிக்கு வந்து விளக்கம் கேட்டாளாம்? என்பது போலதான் இன்றைய பெண்கள் கணவன் விருப்பத்திற்காக எந்த உறவையும் எரிக்கவோ! எடுத்தெரியவோ தயங்கமாட்டார்கள்! ஒன்று தெரியுமா? இங்கு ஆண்களால் கெடுக்கப்பட்ட பெண்களைவிட பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களே அதிகம்!

ஆண்கள் தெரியாமல் துரோகம் செய்வார்கள். ஆனால் பெண்கள் தேவைப்படும் போதெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள துரோகம் செய்வார்கள். இது பலருக்குப் புரியும் இங்கு ஆண்களின் உண்மையை விட பெண்களின் பொய்களுக்கு விலை அதிகம். அதனால் பாதிக்கப்பட்ட ஆண்களும் அதிகம். ஆண்களின் கோபத்தில் அழிந்த பெண்களைவிட பெண்களின் சிரிப்பில் தொலைந்த ஆண்களே இங்கு அதிகம்.

தாங்க முடியாத துயரம் என்னவென்றால் கோவலன் நல்லவனா? கெட்டவனா? நாம்தானே திருத்த வேண்டும் என்று எண்ணுவதை விட்டு விட்டு கோவலனுக்காக பெற்றவர்களை உடன்பிறப்புகளை உதாசீனப் படுத்துகின்ற கண்ணகிகளை இன்னும் உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது! இவர்களை உலகம் மன்னிக்குமா? நாம் என்ன செய்ய பெண் குழந்தையை கொடுத்துவிட்டோம் பொறுத்துத்தான் போக வேண்டும்! என்று சத்தமில்லாமல் தன்னைச் சவக்குழிக்குள் வைத்துக் கொள்ளும் பெற்றோர்களின் வலி இந்த நவீனக் கண்ணகிகளுக்கு தெரியுமா? இது அவளைப் பெற்ற அம்மாக்களுக்கு அவள் பிறந்தபோது வந்த பிரசவ வலியைவிட கொடுமையானதே!

கோவலனுக்காக உடன்பிறப்புகளை உதறி விடுகின்ற மனச்சாட்சியற்ற மங்கைகளுக்கு இது விளங்குமா? தவறான எண்ணங்கொண்ட கோவலனுக்காய் தனது கற்பைக் காப்பாற்றுவதைவிட தாசி என்ற பெயரெடுத்துத் தாய் தந்தையைக் காப்பாற்றலாமே! ஏனென்றால் அவர்களின் பொறுமை நம்மை வெறுமையாக்கிவிடும். அவர்களது சாபம் நமக்கு சமாதி கட்டிவிடும்.

அந்தக் கதையில் கடைசியில் தனது இடது மார்பைத் திருகி கண்ணகி எறிந்து மதுரையை எரிப்பாள்! மார்பு என்பது மானிடத்திற்கு அமுத சுரபியா? அணுகுண்டா? ஏனென்றால் இப்போது சில பெண்களின் மனச்சாட்சியைத்தான் அந்தக் காலத்திலேயே இளங்கோ அணுகுண்டாய் வடித்து விட்டாரோ! புகுந்த வீடு போற்ற வேண்டும் என்பதற்காகப் பிறந்த வீட்டைத் தூக்கி எரிகின்ற பெண்கள் மனச்சாட்சி இல்லாத மனித வெடிகுண்டுகளே! இவர்கள் இருப்பதைவிட மரணிப்பது மண்ணுக்குப் பெருமை!

பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுக்காமல்! பெற்றோர்களை அவர்களது கடைசிநேரத்தில் கவனிக்காமல் உடன்பிறந்தவர்களை கணவனுக்காக ஒதுக்கிவிட்டு சமுதாயத்திற்கு சரியாகத் தன்னைப் பங்களிக்காமல் கணவனால் மட்டுமே கொடுக்கப்படும் அற்ப சுகத்திற்காக அடங்கிப் போகிற கண்ணகிகள் இந்த நாட்டிற்குத் தேவையா? அதுதான் பாதுகாப்பு என்று அற்பத்தனமாக சிந்திக்கிற இன்றைய கண்ணகிகளே! கொஞ்சம் யோசியுங்கள். வாருங்கள் வெளியே! நீங்கள்தான் பூமியின் வேர்! நீங்கள் மட்டும்தான் இந்தப் பூமிக்கு வெளிச்சம்! கற்பைக் காப்பாற்ற வேண்டும் என்று உங்களைக் கட்டி வைத்திருக்கிற காற்சிலம்பை கழற்றி எரியுங்கள். பெண்களுக்கு மட்டுமே வைத்திருக்கிற அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற சிலம்புகளை உடையுங்கள். உங்களது சிறகு விரியட்டும். நீங்கள் பறக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள் அதனைப் பயன்படுத்துங்கள். உங்கள் சுதந்திரத்தை தடுக்கும் எந்த கட்டுகளாக இருந்தாலும் தகர்த்து எரியுங்கள். குடும்பம் என்பது சுடுகாடல்ல உங்களை அடக்கி வைக்க. அன்பையும், பாசத்தையும் கொடுப்பதுபோல் நடித்து உங்களை அடிமையாக்கும் சமுதாயச் சாக்கடைகளை கொழுத்திவிடுங்கள். கண்ணகிகளே!

நவீனக் கண்ணகிகளே! இனியும் உடல் சுகத்திற்காய் அலையும் கோவலனுக்காய் வீதிக்கு வராதீர்கள். உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும் கோவத்திற்காய் வீதிக்கு வாருங்கள். உங்களது வீட்டை முதலில் திருத்துங்கள் உங்களுக்கு நாடு நல்லதாவவே தெரியும். கணவனைக் கண்டிக்காத கண்ணகிகளே! நீங்கள் இனியும் வீதிக்கு வந்தால் உங்களால் பலரும் மனதால் மரணிக்க வேண்டியதிருக்கும். ஆகவே கண்ணகிகளே தவறு செய்யும் துணையைத் தடுத்து நிறுத்துங்கள். இனியும் கணவனைக் கண்டிக்காத கண்ணகிகளைச் சமுதாயம் தண்டிக்கும். இதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.

“உறவுக்காக…
அன்பையும், நட்பையும்
சாகடிக்கிறவர்களே
இங்கு கற்புக்கரசிகள்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES