04
Jan
2025
கண்ணுக்குத் தெரியாத கடவுள்களுக்கு எனது கடிதம் என்றவுடன் நீங்கள் மனதிற்குள் ஒரு நம்பிக்கையை வைத்து அதற்கு மதம் என்ற முலாம் பூசி இதுவரைக் கடவுளைக் காணாமலேயே எனக்கு அருள் புரிகிறான் என இயற்கையாக நடப்பதோடு இறைவனை இணைத்துக் கொண்டு பயணம் தொடரும் பக்தர்களைப்போல் அல்லாமல் உண்மையிலேயே எனக்காய் உழைத்துக் கொண்டிருக்கிற எண்ணற்ற இறைவன்களை வருட முதலில் நினைத்து வணங்கி மகிழ்கிறேன்.
அன்றாடம் நாம் உண்ணும் உணவை விலை கொடுத்து வாங்கியதாலேயே அது எனது உணவு, எனது உழைப்பு என்று மார்தட்டிக் கொள்கிறோம். உழைத்தால் உணவு கிடைக்காது ஊதியம் தான் கிடைக்கும் அப்படியென்றால் அந்த உணவைக் கொடுத்தது யார்?
சின்னக் குழந்தையாய் இருக்கும்போது அழகாய்ச் சொல்வோம் கடவுள் என்று! அது எவ்வளவு பெரிய பொய்! கடவுளைச் சொல்வது தப்பில்லை ஆனால் அதற்குக் காரணமாக இருக்கின்ற உண்மையானவர்களை நாம் உணராமல் விட்டுவிடுகிறோம். உணவு உண்ணுவதற்கு விளைநிலம் தயார் செய்து விதைவிதைத்துப் பயிர் வளர்த்து களை களைந்து கதிர் அறுத்து நெல்லில் இருந்து அரிசி எடுத்துக் கொடுத்தவர்களை நினைவு கூற வேண்டாமா? மறக்க முடியுமா?
அதனைத் தயாரிக்க அடுப்பு, விறகு, பாத்திரம் முதலியவை கிடைக்க வழி செய்தவர்களை நான் வணங்கி மகிழ்கிறேன். மானத்தோடும், மதிப்போடும் வாழ்வதற்கு நான் உடுத்தும் உடைகள்தான் காரணம் அதனைத் தயாரித்துத் தந்தவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
என் வீடு, அது என் அடையாளம் நான் வாழ்ந்த வரலாறு என் குடும்பத்தோடு நான் பாதுகாப்பாய் வாழ்வதற்கு வீடு கட்டி, வசதிசெய்து கொடுத்தவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
நான் பிறக்கும்போது என் தாய்க்கு பிரசவம் பார்த்து என்னைக் குழுப்பாட்டி, பழைய ஆடையில் பக்குவமாய் வைத்து உச்சி மோர்ந்து என் செல்லக்குட்டி என்று புல்லரித்துப் போனோளே என் பாட்டி அவளை மறக்க முடியுமா? இப்போது என் நினைவில் மட்டுமே நின்று சிரிக்கிறாள்.
வாழ்க்கைப் பயணம் என்றாலும் வாழ்க்கைக்குள் நிறைய பயணங்கள் உண்டு. ஆகவே பேருந்துகளிலும் பிற வாகனங்களிலும் பயணிக்கும்போது எனைப் பாதுகாப்பாய் கொண்டு சென்று சேர்ந்தவர்களும் பஸ் பயணத்தில் இருக்கும்போது எனக்கு இருக்கை கொடுத்தவர்களும் உறவே இல்லாமல் மறுபடியும் சந்திக்க மாட்டோம் என்று தெரிந்து இருந்தாலும் மனம் விட்டுப் பேசி இறங்கிச் சென்றவர்கள் அந்த முகம் மறந்தவர்கள் இன்னும் என் மனதைவிட்டு இறங்காமலேதான் இருக்கிறார்கள்.
பாதையில் நடந்து போகும்போது உதவி செய்ய நினைத்து என்னையும் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கடந்து போனவர்களை நான் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியுமா? பயணத்தின் போது அங்காங்கு சில கடைகள், ஹோட்டல்கள் என்று நான் பசியாற, உடல் இளப்பாறப் பரிமாறிய அனைத்து உள்ளங்களையும் எப்படி மறந்து போக முடியும்.
நான் நடந்து வந்த பாதையில் என்னை உயர வைத்த பள்ளிகள், பாடம் கற்றுத் தந்த ஆசிரியப் பெருமக்கள் பக்கத்தில் அமர்ந்த மாணவ மாணவிகள், நாடகம் கற்றுத் தந்த அண்ணன்மார்கள். நடனம் ஆடச் சொன்ன ஆசிரியர்கள் இவர்கள் அனைவரையும் இன்னும் ஒருமுறை பார்க்க முடியுமா?
பள்ளிக்கு வெளியே ஐஸ் விற்ற தாத்தா காசு திருப்பிக் கொடுப்போமா? என்று கூட யோசிக்காமல் கடன் கொடுப்பார்! மாங்காய் விற்கிற பாட்டி திட்டிக் கொண்டே கொஞ்சம் மாங்காய் தின்னக் கொடுப்பாள் அவளிடம் கற்றுக் கொண்டே கெட்ட வார்த்தைகள் தான் கோபப்படும் போது அவ்வப்போது வெளிப்படும்.
என் காலுக்கு சுளுக்கெடுத்தது சிலர்! விழுந்தபோது முறிந்த எலும்பை சரிசெய்த சிலர்! அக்கி பூசிய, மருந்து தடவிய கரங்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.
எங்கள் ஊரில் பொங்கல் விழாப் போட்டியில் கலந்தால் என்ன? என்று சிறிய ஆசையில் தொடங்கி இன்று வரை நான் வாங்கிய பட்டங்கள் பதக்கங்கள் பொன்னாடைகள் போர்த்திய கரங்களையும் அவ்வப்பபோது என்னை வாழ்த்துப் பேசிய உதடுகளையும் நான் எப்படி உதறித்தள்ள முடியும்?
வியாதி என்று வரும்போதெல்லாம் கைராசிக்காரர் என்று அழைத்துச் செல்லும் மருத்துவர் அவர் வரும் வரை ஆறுதலாகப் பேசிக்கொண்டு முதலுதவி செய்யும் செவிலியர் அதுவும் குறிப்பாக கொரனா என்ற கொடிய நோய் தாக்கும்போது உயிரைப் பணயம் வைத்து உதவி செய்தவர்களை மறக்க நினைப்பதைவிpட கொரனோவால் செத்து விடுவது கொஞ்சம் நலம்.
சில நேரங்களில் சில்லறைக்காகச் சில்லறைத்தனமாய் பேசுகிறவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற தன் சில்லைறையைக் கொடுத்து உதவியவர்களை நினைத்துப் பார்க்கிறேன். தினத்தந்திப் பேப்பரை தேடிப்பிடித்து படிக்கும் போது முகம் சுளிக்காமல் கொடுத்து உதவிய டீ கடைக்காரர்தான் என் கவிதைக்குக் கொச்சைத் தமிழை பிச்சுக் கொடுத்தவர்.
பேசத்தெரியாது பாடத் தெரியாது பெயர் வாங்கும் அளவிற்கு எதுவும் தெரியாது என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போது உன்னால் முடியும் என்று உசுப்பேத்தி உள்ளே உறங்கிக் கொண்டிருந்த திறமைகளையும் எழுப்பிக் கைதட்டித் தட்டி என்னை மேடையில் மின்னும் அளவிற்கு என் பக்கத்தில் இருந்து பட்டை தீட்டிய என் உயிர்த் தோழர், தோழிகளை உள் அன்போடு நினைத்துப் பார்க்கிறேன்.
ஆசிரியர் பணியே எனக்கு அதிசயப் பணியாகத் தெரியும்போது அதற்கே என்னைத் தகுதியாக்கத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது தமிழக அரசே எனக்கு நல்லாசிரியர் விருது கொடுக்க வழிகாட்டிய பிரதிபலன் பார்க்காத அந்த பிதாமக்களை நான் கண்ணீரோடு நினைவு கூறுகிறேன்.
பேர் சொன்னால் புரியக் கூடிய அளவில் இல்லாத சிறிய ஊரில் இருந்து புறப்பட்டு வந்து இன்று பேர் சொன்னால் தமிழகமே தெரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் முதன்மைப் பணியாளராய் உயர்ந்து நிற்கக் காரணமான என் சகோதரர்கள் என் குணம் பார்க்காது என் கோபத்தால் விலகாது குறைகளைப் பொறுத்து என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிற எனது ஆசிரியப் பெருமக்கள் என் அன்பு மாணவர்களை உயிருள்ள வரையிலும் உள்ளளவும் மறக்க முடியாதே.
எனக்கென்று ஒரு வலைத்தளம் அதில் எனது நினைவலைகள் அதனை வாசிப்பதன் மூலம் என்னை வருடிச் செல்கின்ற இதயங்கள்! ஒருவரிடம் சொல்ல நினைத்தாலும் ஒவ்வொருவரிடமும் அதனை எடுத்துச் சென்று உலகளவு பரவவிட்டு என் எழுத்துகளுக்கு இறக்கை கட்டிப் பறக்கவிட்ட எத்தனையோ நல்ல உள்ளங்கள் அத்தனைபேரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.
உங்களால் உருவானவன்! உயர்ந்தவன்! உங்கள் உடனிருப்போடு இந்த ஆண்டை இனிமையாகத் தொடர்கிறேன். வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள்!
“உங்கள் இதயம்
எனது உதயம்”