25
Apr
2024
கற்பு என்றாலே அது பெண்களைச் சார்ந்தது ஆண்களைச் சாராதது என்று இந்த முட்டாள் சமூகம் எழுதப்படாத சட்டமாக இங்கு கடைபிடித்து வருகிறது. அது ஆண்களின் அத்துமீறலில் பெண்களின் உடலோடு அல்லது சமுதாயம் அங்கீகரிக்காத உறவோடு உறவு கொண்டால் அப்பெண் கற்பிழந்தவளாகக் கருதப்படுகிறாள். ஒரு பெண்ணோடு உறவு கொள்ளும்போது அவள் கழுத்தில் ஒரு தாலிக்கயிறு கட்டப்பட்டால் அது கலாச்சாரம். தாலிக்கயிறு இல்லையென்றால் அது விபச்சாரம் இதில் பெண் என்பவள் கற்பை இழக்கிறாள். இது இந்தப் பேதைகளின் கலாச்சாரம், சட்டம்.
இதற்கு எல்லா மதங்களும் இங்கு தீனி போட்டுத் தீயைப் போல் பரவ விட்டிருக்கிறது. விவிலியத்தில் ஒரு காட்சி. இயேசு சாலையோரம் போய்க் கொண்டு இருக்கிறார். அப்போது ஒரு கூட்டம் ஒரு பெண்ணைப் பிடித்து இழுத்துவருகிறது. இவள் விபச்சாரம் செய்தாள் எனக்குற்றம் சாட்டியது. யூதச்சட்டம் அவளைக் கல்லால் எரிந்து கொல்ல வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் இயேசு இரக்கத்தையும் அன்பையும் போதிக்கிறவர். அவரிடம் வந்து இவளை என்ன செய்ய வேண்டும்? என்கிறார்கள். இயேசு அவர்கள் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு விபச்சாரம் என்கிறீர்கள்! அது ஆணும் பெண்ணும் சார்ந்தது! பெண் இங்கிருக்கிறாள். அந்த ஆண் எங்கே? என்றார் யாரிடமும் பதில் இல்லை. அவனையும் இழுத்து வாருங்கள் பதில் சொல்கிறேன் என்றார். பதில் தெரியாது அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
இராமாயணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இராமனும் சீதையும் பல ஆண்டுகள் பிரிந்து இருக்கிறார்கள். மீண்டும் இராமனோடு சீதை வந்து சேரும்போது தன் கற்பை நிருபிக்க அவள் தீக்குளிக்க வேண்டியிருந்தது. அதேபோல் பிரிந்து இருந்த இராமன் ஏன் தீக்குளிக்கவில்லை? யாரும் கேள்வி எழுப்பவில்லை.
முகமது சகோதரர்கள் தாங்கள் வீட்டுப் பெண்கள் வெளியில் வரும்போது அடுத்த ஆண்களுக்குச் சபலத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்று தன் உடல் முழுவதும் மறைத்தது போல் பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். அதே போல ஆண்கள் வெளியில் வரும்போது பெண்களுக்கு சபலம் ஏற்படாதவாறு ஆண்களும்…! என்று சொல்லவில்லையே…?
இதுதான் இப்படியென்றால் வரலாறுகளும் சற்றும் சளைத்தவையல்ல. ஒரு ஆண் இறந்துவிட்டால் ஒரு பெண் உடன்கட்டை ஏற வேண்டும் என்று சொன்னவர்கள் ஒரு பெண் இறந்து விட்டால் ஆணை உயிரோடு எரிக்க வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை? பின்பு விதவைகளை உருவாக்கி, வெள்ளை உடைகளைக் கொடுத்து, நல்லது கெட்டதற்கு பெண்களை நகர்த்தி வைத்திருக்கிறார்களே! ஆண்களை ஏன் விட்டு வைத்தீர்கள்?
ஆகப் புராணங்கள் மட்டுமல்ல இன்றையத் துறவிகள் கூட மூன்று சத்தியம் செய்து கொடுப்பார்கள் அதில் ஒன்று கற்பு. கற்பு என்பது பிற பாலரோடு தவறான எண்ணத்தில் உறவைக் கொண்டிருப்பது என்பது. இதன் நோக்கம்;. ஆண்களாலும் ஆன்மீகவாதியாலும் பெண்கள் அடக்க, ஒடுக்கக் கொண்டு வரப்பட்டது.
இந்த மதங்களும் சில மடயர்களும் இடையில் வருமுன் தொடக்க காலத்தில் ஒளவைப் பாட்டி அழகாகச் சொல்வாள். “கற்பு எனப்படுவது சொல் பிறழாமை” அதாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். அப்படியென்றால் துறவிகளோ, பெண்களோ வாக்குகளைக் காப்பாற்றி விட்டு யாரோடு வேண்டுமானாலும் எப்படியும் இருந்து கொள்ளலாமா? எனக் கேட்கலாம்! ஒவ்வொரு துறவியும் தான் துறவியாக தன்னை அர்ப்பணிக்கும்போது வார்த்தைப் பாடு அன்று அவர்கள்; கொடுத்த வாக்குறுதி என்ன? அதை மீறாமல் காப்பாற்றுங்கள். நீங்கள் பிளவு படா உள்ளத்தோடு கடவுளை ஏற்றுக் கொள்கிறேன் என்பதனைக் காலம் முழுவதும் கடைபிடியுங்கள் வாக்குக் காப்பாற்றப்படும் போது உடம்பு தானாகவே தன்னைப் புனிதப்படுத்திக் கொள்ளும்.
கற்பு என்பது சொல் தவறாமை என்பதனை இந்த மானிடச் சமுதாயம் தனக்குச் சாதகமாகக் கழற்றி விட்டுவிட்டு உடல் சம்பந்தமாக அதுவும் பெண்களுக்கு உரியதாகப் பித்தலாட்டம் செய்து விட்டது. ஒவ்வொருவரும் அவர்களின் வார்த்தைகளை வைத்தே மதிக்கப்பட வேண்டும் அவர்கள் பேசும், தன்மை, தொனி, மதிப்பு, கனிவு வார்த்தைகளால் அவர்கள் உயர்வார்கள் நல்ல வார்த்தைகள் பேசும்போது நாடுபோற்றும். கெட்டவார்த்தைகள் பேசும்போது கீழே போட்டு மிதிக்கும். அதில் முக்கியமானது வாக்குக் கொடுத்துவிட்டால் உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டும். அதுதான் கற்பு, தன்மானம், வாழ்வு.
இன்று பலர் தான் நினைப்பதைச் சாதிக்க, பிறரைத் தன் வலைக்குள் வீழ்த்த, பிறரை ஏமாற்றிப் பிழைக்க, எண்ணற்ற வாக்குறுதிகளைக், கொடுக்கிறார்கள். அதனை நிறைவேற்றாவிட்டாலும் வெட்கமே இல்லாமல் வெளியே நடமாடுகிறார்கள். இதனைத்தான் அவ்வை அறிவுறுத்துகிறாள். கற்பெனப்படுவது சொல் தவறாமை.
இன்று யார் வாக்குக் கொடுத்து பிறரை ஏமாற்றுகிறார்களோ. அத்தனைபேரும் கற்பிழந்தவர்களே! இன்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றுகிற அரசியல்வாதிகள், கூட்டத்தை கூட்டிவிட்டு தொகையைக் கொடுக்காத அரசியல் கூட்டங்கள் சலுகைகள் தருகிறோம் என்று கூறி நழுவிய முதலாளிகள் வாக்குத்தவறிய வங்கிகள், நிதிநிறுவனங்கள், சீட்டுக் கம்பெனிகள் என்று எவர்களாயிருந்தாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் கற்பிழந்தவர்களே!
பெற்றோர்-பிள்ளைகள், கணவன்-மனைவிகள், குரு-சீடர்கள், ஆசிரிய-மாணவர்கள், முதலாளி-தொழிலாளிகள், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் என்று எவராயிருந்தாலும் நன்கு யோசித்து உங்கள் வாக்குறுதிகளைக் கொடுங்கள் கொடுத்தால் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி விடுங்கள். வாக்கை நிறைவேற்றாவிட்டால் அது கற்பை இழந்ததாகிவிடும்.
நம் உடம்பில் எலும்புகள் இல்லாமல் சதைகளால் சில உறுப்புகள் உண்டானது. அவை புனிதமான உறுப்புகள் ஆகும் அது நன்றாகச் செயல்படாவிட்டால் நாம் நரகத்தில் நின்றாக வேண்டும். அவற்றில் ஒன்று நாக்கு அவை நன்றாக இருக்க வேண்டும்.நாக்கில் இருந்து வருபவையெல்லாம் நல்லவையாக இருக்க வேண்டும்.
ஆகவே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் கற்பு என்பது சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது. அதனைத் தவறு என்று தெரியாமல் திரிபவர்களைத் தட்டிக் கேளுங்கள் இன்று உலகத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் சாக்குப் போக்குச் சொல்பவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகள் ஆகும். வாக்குக் கொடுக்குமுன் உங்களால் முடியுமா? என்று ஒருமுறை யோசித்து முடிவெடுங்கள்.
இன்று சொன்ன சொல்லைக் காற்றில் பறக்க விடுபவர்களும், மாற்றிப் பேசுகிறவர்களும், மறுத்துப் பேசுகிறவர்களும் பிறக்காமல் இருந்திருந்தால் இந்தப் பூமி பேரின்பம் அடைந்திருக்கும். வாக்குறுதி கொடுங்கள். நிறைவேற்றுங்கள் வானளவு புகழப்படுவீர்கள் வாழ்ந்து காட்டுங்கள். உண்மையைப் பேசுங்கள் உரைக்கப் பேசுங்கள். உலகிற்குப் பேசுங்கள். நீங்களும் கடவுள் என்றும் கற்புள்ள கடவுள் என்றும் உலகம் பேசும் வணங்கும்.
“வாக்குத் தவறினால்
வாழ்க்கை மோசமாகும்
நாடு நாசமாகும்”