01
Dec
2016
வாழ்க்கையில் ஒரே முறை சந்திக்க வரும் உன்னத நண்பன், உடன் அழைத்து செல்பவன்; ஆனால் அவனைப் பற்றி ஒரு போதும் நாம்; எண்ணமாட்டோம். ஏனென்றால் நாம் நினையாத நேரத்தில் அழையாத விருந்தாளியாக வருபவன். அவன் பெயர்தான் மரணம். நாம் மரணத்தைச் சந்திக்க விரும்புகிறோமோ இல்லையோ அவன் கட்டாயம் நம்மைச் சந்தித்தே ஆவான்.
எப்ப வருவான்? எப்படி வருவான்? எங்கே வருவான் என்று எவருக்கும் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் வந்தே தீருவான். உயிர்பிரிந்;து போகும்போது, போகும் உயிர்கள் எல்லாம் சொல்லிவிட்டுப்போகும் ஒரே வார்த்தை இன்று நான்! நாளை நீ! ஓவ்வொரு இறப்பு இல்லங்களிலும் கலந்து கொள்கிறவர்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான். ஆனால் நாம்தான் உணர மறுக்கிறோம்.
ஆனால் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது. நாம் உயிர்பிரிந்து போகும்போது காற்று நம் உடம்பை விட்டு கடந்து போகிறது. நமது உலக வாழ்க்கை முடிந்து போகிறது. இந்த காற்றினை எத்தனையோ முறைகளில் எத்தனையோ வழிகளில் நாம் முடக்கி வைத்திருந்தோம். அடக்கிவைத்திருந்தோம், எத்தனை நிலைகளையும், நேரங்களையும், ஏன் மனிதர்களையும்கூட நாம் கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் நம் ஆன்மக்கூட்டுக்குள் அந்த காற்றுப்பறவையினைக் கட்டிப் போட முடியவில்லையே! பிறகு ஏன் நாம் பலவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.
எதுவுமே நிரந்தரமற்றது என்பதனை எப்போது புரிந்துகொள்ள போகிறோம்? இதனைத் தானே கையில் என்ன கொண்டுவந்தோம் கொண்டு செல்ல? என்று கவிஞன் பாடுகிறான். நம் முன்னோர்கள் ஊரைவிட்டு நம் உடலை அடக்கும் செய்யும் கல்லறைத் தோட்டத்தைச் சற்று தொலைவில் வைத்திருந்தார்கள், காரணம் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் இறந்தவர்களைப்பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே போக போதுமான நேரம் வேண்டும் என்பதற்காகச் சற்று தொலைவில் வைத்திருந்தார்கள் ஆகவே அனைவரும் அவ்வளவு தூரத்திற்கும் சொல்லிக்கொண்டு செல்கிற அளவு புண்ணியங்களை நாம் செய்திருக்க வேண்டும். அதுதான் பூமியல் நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையின் நேரம் அதனை புரிந்து வாழ்ந்திட வேண்டும்.
உயிர் கூட்டைவிட்டுப் பறந்தபிறகு, உடல் வீட்டை விட்டுப்போகும் போது அப்போது நால்வர் நம்மைச் சுமந்துதான் செல்லவேண்டும். அந்தப் பெட்டிக்குள் நாம் பிணமாகச் செல்லும் போது சொல்லும் செய்தி என்ன? பூமிக்கு வரும்போது ஒருத்திக்குப் பாரம், பூமிவிட்டுப் போகும்போது நாலுபேருக்குப் பாரம். நாம் வாழும் போது யாருக்கும் எச்சூழலிலும் பாரமாக இருந்துவிடக்கூடாது, எதையும் பாரமாகவும் எண்ணிவிடவும்கூடாது என்பதுதானாம்.
இறுதியில் ஆறடி நிலம். யாரும் கடக்க முடியாத பள்ளம். வாவென்று நம்மை அழைத்து வைத்துக்கொள்ளப் போகிறது. ஆனால் எதை எதையோ தேடி இன்றுவரை அலைந்தோமே! இறுதிநாளில் நாம் எதைக் கொண்டு போகப்போகிறோம். இது எனக்கு உரியது என்று எதை எதையோ வாழ்நாளில் சொல்லிக்கொண்டு இருந்தோம். அனால் நாம் எதையும் கொண்டு போகவில்லை; நம்மைத்தான் இந்த ஆறடிநிலமும் அதில் உள்ள மண்ணும் கொண்டு போகப்போகிறது. இதை எல்லாம் எப்போதாவது நாம் நினைத்துப் பார்ப்பதற்குதான் ஒவ்வொரு இறப்பின் மூலமும் இறைவன் நம்மிடம் பேசுகிறான்.
ஒன்று தெரியுமா? நாம் கொண்டாடுகிற ஒவ்வொரு பிறந்தநாளும் மரணத்திற்கு மாலையிட ஒரு அடி எடுத்து வைக்கிறோம் என்பதுதான். ஓவ்வொருநாளும் அதனை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இருக்கிற வாழ்வை செம்மைபப்படுத்த உடனிருப்பார்களின் ஒத்துழைப்பையும், பெரியோர்களின் வழிகாட்டுதலையும் இறந்தவர்களின் ஆசியையும் நம் பாதையாக அமைத்துக்கொள்வோம்.
நம் நாட்டில் இறந்தவர்கள் பேயாக அலைவதாக பாட்டன்கள் கதை சொல்வதுண்டு ஆனால் அவர்கள் ஆவி உருவில் நம்மைச் சுற்றி நிறைந்திருப்பதாகவும், அவர்களால் பல நன்மைகள் நிகழ்வதாகவும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதுபல நேரங்களில் உண்மையாகவும் இருக்கிறது. ஆனால் இறந்தவர்கள் பேயாக வந்தால் என்ன ஆகும்; கொலை செய்தவர்களைக் கொல்வர்கள், துரோகம் செய்தவர்களைத் துரத்துவார்கள்; செய்தார்களா? இல்லையே! அழிந்துபோகின்ற உடம்பை எடுத்து பூமிக்கு வந்திருக்கிறோம் ஆக்கத்தை விதைத்து விட்டு போவோம்.
நமது அடையாளம் நம் பிறந்த இடம்தான். நாம் இறந்தபிறகு நம்மை அடையாளப்படுத்துவது கல்லறையும் அதில் நாட்டப்படும் சிலுவையும்தான். இது இரண்டும் சொந்தமாக இல்லாமல் சாதித்து விட்டுப் போனாரே இயேசுகிறிஸ்து. அவர்தானே நம் கதாநாயகன். பிறகு எதற்கு நாம் சாதிப்பதற்கு பிறரைச் சார்ந்து இருக்க வேண்டும்?
ஒரு மனிதன் எதற்கு ஆசைப்படுகிறான். நாம் இருக்கும் போது பலர் நம்மிடம் வந்து சிரிப்போடு செல்லவேண்டும், நாம் இறக்கும்போது நமக்காக வந்து அழுகையோடு செல்ல வேண்டும். இதற்கு மாறாக நடந்தால் நம் வாழ்க்கை வேறாக அமைந்துவிடும் சிந்திப்போம்.