20

Feb

2026

காதலர் தினம்…

காதலர் தினம் கழிந்து இந்தக் கட்டுரை எதற்கு? என்று தோன்றலாம். மேலே உள்ள வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். காதல் என்பது தினம் தினம் தான். அது ஒருநாள் வாழும் ஈசலைப் போன்றது அல்ல. ஈசனே (சிவபெருமான்) தன் காதலை இடப்பக்கம் வைத்திருக்கிறார் என்றால் காதலின் புதுமையும் மகிமையும் உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.

நடைமுறையில் காதல் என்பது பாரதி சொன்னதுபோல் காதல்… காதல்… காதல் இப்போது சாதல்…சாதல்… சாதல்தான். காதலுக்குச் சமுதாயம், சாதியோ, அந்தஸ்தோ, கௌரவமோ, பெற்றோர்களோ எதிரிகள் அல்ல… அப்படி இருந்த காலங்களில் எல்லாம் காதல் போராடி வெற்றி பெற்று இருக்கிறது. சில நேரங்களில் எதிர்க்க முடியாமல் தோல்வியும் அடைந்திருக்கிறது. சரியான புரிதல் இல்லாமல் காதல் அவர்களை அழித்திருக்கிறது. ஆனால் அந்த நிலை இப்போது இல்லை.

இப்போது இருப்பது காதல் இல்லை. காமம் மட்டுமே. காமம் சில நேரங்களில் காதலாக வேசம் போட்டு அவர்களை அழிப்பதோடு சமுதாயம், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் அனைத்தையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது.

காதல் என்பது வாலிப விளையாட்டா? காதல் என்பது பருவ வயதின் ஈர்ப்பா? காதல் என்பது கல்யாணம் நோக்கிய பயணமா?. காமத்திற்கு நாம் தேடுகிற தீனியா? மற்றவர்கள் மட்டில் எனக்கும் ஆள் இருக்கிறது என்ற கெத்தா? ஐயோ எனக்கு ஆள் இல்லை என்றால் மதிப்பு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையா? அடைந்தே தீர வேண்டும் என்ற அசிங்கமான இலட்சியமா? பசிக்கிற போதெல்லாம் இரை தேடுகிற மிருகத்தனமா? இதுதானே பலநேரங்களில் காதல் என்ற போர்வையில் கண்முன் தெரிகிறது! இதைத்தானே இச்சமூகம் கண்டுகொள்ளாமல் ஒதுங்குகிறது!

ஒருமுறை ஒரு மனிதன் காதலர் தினத்தன்று கடற்கறையில் காணுகின்ற காதலர்கள் அத்தனைபேரையும் கொன்று குவித்தான். காரணம் கேட்டவுடன் காதல் என்பது தினத்தில் கொண்டாடுவது அல்ல. தினம் தினம் கொண்டாடுவது. எனவே இவர்கள் காதலைத் தீட்டுப்படுத்துவதால் தீர்த்துக் கட்டுகிறேன் என்றான்.

சில நேரங்களில் திருமணம் முடிந்தவர்கள் அன்றைய தினத்தில் வெளியில் சென்று வருகிறார்கள் என்றால் கூட நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்கள் எப்போதும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் இன்றைய தினம் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என வைத்துக்கொள்ளலாம்.

இப்போது காதல் என்பது ஆண்மையின் அடையாளம்! ஊடகங்கள் ஊட்டிய காமத்திற்கு வடிகால் தேடும் வரம்பற்ற செயலாக இப்போது மாறிவிட்டது. வெட்கம் மறந்து கலாச்சாரம் துறந்து, கண்ணியம் இழந்து, கட்டுப்பாடு தொலைந்து, காணக்கூடாத காட்சிகளாகக் கண்ணெதிரே சதைப் பிண்டங்களின் சல்லாபங்களாக சிலர் செயல்களைச் செய்வதுதான் காதலர்கள் என்றும் அதுதான் காதல் என்றும் நம் கண்முன்னே முகம் சுளிக்கும் காட்சிகளாகத் தெரிகிறது.

காதல் என்பது புனிதமானது! அது கண்ணியமிக்கது! கடவுளைச் சேர்வது. ஆண்டாள் என்பவள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் தான்வணங்கும் கடவுளையே காதலனாகப் பாவித்து அவனையே மாலை சூடும் மணமகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். இந்தக் காதல் தெய்வீகமானது.

மணிமேகலையில் ஒரு காதல் உண்டு. மணிமேகலை என்பவள் ஒரு இளவரசனை விரும்புகிறாள். ஆனால் தெய்வம் அவளைப் மணி பல்லவத்தீவில் இருந்து எடுத்துச் சென்று அவளிடம் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்து உலகெங்கிலும் பசியில் வாடும் மனிதர்களுக்கு உணவு வழங்கும் பணியைக் கொடுத்தது. அதனைச் செவ்வனே செய்வதற்காகத் தன் காதலையே தியாகம் செய்ததும் மக்கள் மீது கொண்ட இரக்கத்தின் காதல் அது. அன்றையக் காலத்தில் வாழ்ந்த அன்னைத் தெரசாள் அவள்.

விவேகானந்தன் என்ற ஒரு மாமனிதன் இராமகிருஷ்ணர் என்ற குருவின் மீது கொண்ட காதலால் இளமையை இறைவனுக்குக் கொடுத்துவிட்டு இதயத்தைக் குருவுக்குக் கொடுத்துவிட்டு காலம் முழுவதும் கண்ணியமாக வாழ்ந்த தூய நெஞ்சத் துறவி விவேகானந்தன்.

அண்ணன் மீது கொண்ட காதலால் தன்னையே அர்ப்பணித்தவர்கள் இருவர். இராமாயணத்தில் இலட்சுமணன் இலக்கியத்தில் இளங்கோவடிகள், இதுதான் காதல்! இதுவும் காதல்.

இதனை ஏன் இந்தக் தலைமுறை கற்றுக் கொள்ளவில்லை? ஏன் நாம் கற்றுக் கொடுக்கவில்லை! நமக்கென்ன வம்பு! என்று சுயநலத்தோடு ஒதுங்கிக் கொண்டே பெரியவர்களால்தானே இந்தச் சிறியவர்கள் விசத்தைப் பால் என்று விரும்பிக் குடிக்கிறார்கள்.

காதல் என்பது கன்னியர்க்கும் காளையர்க்கும் மலர்வது! கட்டிமுத்தம் தருவது! கட்டியணைத்துக் கொண்டு நெடுந்தூரம் பயணிப்பது! காதல் வேட்கைக்காக யாரையும் வெட்டி வீழ்த்துவது காதலிப்பவன் மட்டுமே கதாநாயகன் என்ற விசமத்தன நஞ்சினை வியாபாரச் சந்தையில் விதைத்துக் கொண்டிருப்பதை இளைஞர்கள் இரகசியமாய் தரம்கட்ட ரசனையாக உள்வாங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் இன்னும் கண்டுகொள்ளாமல் இருந்தால் மனிதர்கள் மிருகமாக மாறி சதைவேட்டைச் சமுதாயமாக இனிவரும் காலம் எதிரொலிக்கும்.

உறவுகளை விட்டு நம்குழந்தைகள் ஒதுங்கி ஊடகங்களோடு உறவாடிக் கொண்டிருப்பதால் நம் குழந்தைகளுக்கு இதயம் கூட இறைச்சித்துண்டுதான். உணர்ச்சிகள் எல்லாம் அவனுக்குக் கட்டுபடுத்த முடியாத மனவெழுச்சிகளாகத்தான் வெளிப்படுகிறது.

உடன்பிறப்புகளோடு பழகத் தவறுவதுதான் உறவின் தூய்மை அவனுக்குத் தெரிய மறுக்கிறது. பிறபாலரோடு உள்ள தொடர்பு என்பது அவனைப் பொறுத்தமட்டில் நெறி பிறழ்ந்த நடத்ததைதான். அதுவும் சில வீடுகள் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை, அது ஒருபாலராக இருந்தால் பிற பாலரோடு பழகும் வாய்ப்பு பெரிதும் குறைவுபடுகிறது. அதற்காகப் பயிற்சி கொடுங்கள்.

காதல் என்பது, அன்பின் உறவின் நட்பின், பக்தியின், மதிப்பின், மாண்பின் வெளிப்பாடு என்பதை அறியச் செய்யுங்கள். காதல் என்பது குறிப்பிட்ட வயதில், குறிப்பிட்ட நபரோடு வருவது மட்டும் காதல் அல்ல அது மனவெழுச்சி! அதனைக் கடந்துபோக விட்டுவிடச் சொல்லுங்கள். மனம் திறந்து பேசக் கற்றுக்கொடுங்கள். காதல் என்பது கெட்ட வார்த்தை அல்ல. அதனை மூடி மறைக்க வேண்டியதும் அல்ல. அது தெய்வீகமானது அது நம்மை வாழவைப்பது, வளரவைப்பது மானிட வர்க்கத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வது காதல்தான். காதல் மட்டும்தான்.

சிவனுக்கும், காதல் உண்டு. எவனுக்கும் காதல் உண்டு! காதல் என்பது ஒரு மனிதனுக்குப் பரிமாண வளர்ச்சியைக் கொடுப்பது ஆகவே அதனைத் தெய்வமாகப் பாருங்கள். நம்மை வாழ வைக்கும் புனிதமாகவும் பாருங்கள். நம்மை வளர வைக்கும் அன்பாகப் பாருங்கள் அது நம்மைத் தெய்வமாக்கும்.

ஆகவே எப்போதும் ஒரு காலத்தில் மட்டும் ஒரு நபரை மட்டும் காதலிக்கும் சுயநலவாதிகளாக இருந்து விடாதீர்கள் அது காதல் அல்ல! அது கவர்ச்சி! நம்ம காதல் பிரபஞ்சக் காதலாக இருக்கட்டும். பிறரை வாழவைக்கும் காதலாகவும் மலரட்டும். மனிதர்கள் மீது மட்டும் இல்லாமல் அனாதை இல்லம், முதியோர் இல்லம் நோக்கியும் நமது இதயம் நகரட்டும். காதல் நம்பிக்கையைக் கொடுக்கும் நல்லது நடக்கட்டும். வயதைக் கடந்து யாவரையும் நம்பும் நம்பிக்கைக் கொடுக்கும் உங்கள் உணர்வு உயிருள்ளதாக இருக்கட்டும்! உண்மையுள்ளதாகவும் இருக்கட்டும்! காதல் வாழ்க! காதலர் வாழ்க! காலமெல்லாம் வாழ்க! கடவுளாக வாழ்க!

“காதல் என்பது…
பூமியை அழகாக்கும்
சாமியை உருவாக்கும்…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES