09
Apr
2021
ஒவ்வொரு நாளும் விசித்திரமான உலகைப் பார்க்கிறோம். வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதிலும் அசுத்த ஞானிகள் என நான் எண்ணுகின்ற உங்கள் பார்வையில் பைத்தியம் என்று சொல்கின்ற மனிதர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நான் சந்தித்தவர்கள் இன்னும் என் நினைவில் நீங்காமல் நிழலாடிக் கொண்டிருக்கிறார்கள் பேரூந்து நிலையத்தில் பீடி பிடித்துக் கொண்டு ஆங்கிலம் பேசியவர், நெடுஞ்சாலையில் எப்போதும் நடந்து கொண்டே திரிபவர், யாரைப் பார்த்தாலும் டீக்கு காசு கேட்பவர், தேவையில்லாத துணிகளைப் பொறுக்கி வைத்துச் சுமந்து கொண்டே திரிபவர், தனியாகப் புலம்பிக் கொண்டே இருப்பவர், திடிர் திடிரென்று பயப்படுகிறவர், இப்படிப் பல முகங்களை நான் பார்த்து இருக்கிறேன்.
ஒரு நாள் என் பையனுடன் செல்லும்போது அப்படி ஒருவனைப் பார்க்க நேரிட்டது. இவர் யாரு? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? எனக் கேட்டான் இவர்கள் தான் பைத்தியம் என்றேன். பைத்தியம்னா? தனியாப் பேசிக் கொண்டு திரிபவர்கள், தேவைக்கு அதிகமாக துணிகளைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், புரியாத மொழியில் பேசுபவர்கள் எனக் கூறினேன். காரணம் நமது காலத்தில் நாம் பல்வேறு இடங்களுக்குச் சுற்றி வந்ததால் அனைவரும் நேரில் பார்த்தோம். இப்போது உள்ள குழந்தைகள் வீட்டிலே இருப்பதால் அவர்களுக்கு அனுபவம் குறைவு நான் சொன்ன கருத்துக்களை மட்டும் வைத்துக் கொண்டு புத்தனைப்போல் வெளி உலகை என் பையன் பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு நாள் ஓடிவந்து என் பையன் சொன்னான் இரண்டு பைத்தியம் அங்கு நிற்கிறது என்றான். எப்படிக் கண்டுபிடிச்சே? தனியாப் பேசும்னு சொன்னீங்களே என்றான். நான் நம்ம தெருவில் கிடையாதே! என்ற தயக்கத்தோடு வெளிவந்தேன். ஒருவன் அலைபேசியை வைத்து கொண்டு தனியாகப் பேசிக்கொண்டிருந்தான். இன்னொரு இடத்தில் ஒரு குடிகாரன் உளறிக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரையும் தான் அவன் பைத்தியக்காரன் என்று நினைத்திருக்கிறான்.
திடிரென்று வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்தவன் அம்மா ஒரு பைத்தியம் என்றான். எப்படி என்றேன் பீரோவைத் திறந்து பார்த்து இருக்கிறான் அளவுக்கு அதிகமான துணிகள், நகைகள், பொருட்கள் வாசனைத் திரவியங்கள். எனக்குச் சிரிப்பு வந்தது. நான் ஏற்கனவே அவனிடம் சொன்னேனே. தேவையில்லாத துணிகளை அள்ளிக் கொண்டு அலைவார்கள் என்றேனே அதன் தாக்கம் இது. ஒருநாள் ஒரு செபக் கூட்டத்தில் ஏதோ மொழியில் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டவுடன் இதுவும் பைத்தியமா? என்றான் நானே குழம்பிப்போய் விட்டேன்.
நான் சொன்னது உண்மையா? அவன் சொல்வது உண்மையா? அவன் சொல்வதைப் பார்த்தால் நம்மைச் சுற்றி எத்தனை பைத்தியங்கள்! பணத்தின் மீது, புகழின் மீது, ஆட்சியின் மீது, அதிகாரத்தின் மீது, உணவின் மீது, உடையின் மீது, பிள்ளைகள் மீது ஐய்யையோ எத்தனை பைத்தியங்கள் என்னைச் சுற்றி இதனை எப்படிக் குணமாக்குவது?
திபெத் நாட்டில் புத்த பிட்சுகள் சாலையில் சந்திக்கும் மனநலம் குன்றியவர்களையெல்லாம் பிடித்து வந்து சுத்தம் செய்து அவர்கள் போக்கில் விட்டு விடுவார்களாம் அவர்கள் அந்த மடத்தில் திடிரென்று சத்தமிட்டாலும் ஏதாவது பொருளைப் போட்டு உடைத்தாலும் எந்த எதிர்வினையும் செய்யமாட்டார்களாம் புத்தத் துறவிகள் தாங்கள் கடமையை மட்டும் செய்து கொண்டு அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்களாம். அதனால் அந்தப் பைத்தியங்கள் விரைவில் குணமடைந்து விடுமாம்.
ஆகவே நாமும் அன்றாடம் சந்திக்கும் பைத்தியங்கள் குணமாக வேண்டுமென்றால் அவர்கள் செயலுக்கு எதிர்வினையாற்றாதீர்கள். நான் வீதியில் சொல்லவில்லை. நம்முடைய வீட்டிலும் சொல்லுகிறேன். திடிரென்று குடித்து விட்டு வந்து வீட்டில் கன்னாபின்னா என்று திட்டும். பொருட்களைப் போட்டு உடைக்கும் நீங்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் அந்தப் போதைப் பைத்தியம் குணமடைய வாய்ப்புண்டு. அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் வயசு வித்தியாசம் இல்லாமல் யாரையும் கத்திக் கொண்டு இருக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அந்த பைத்தியம் குணமடையட்டும்.
தாங்கள் பதவிக்கு வருவதற்காக அடுத்தவர்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிக் கொண்டே திரியும். அப்போது பதில் சொல்லாதீர்கள் இந்தப் பதவிப் பைத்தியங்கள் குணமாக கொஞ்சம் பொறுமையாகக் காத்திருங்கள். திடிரென்று அலைபேசியில் அழைத்து அசிங்கமாகப் பேசும், ஆபாசமாகக் குழையும் அலைபேசியை அப்படி வைத்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். அதுவாகப் பேசி அடங்கட்டும் இல்லாவிட்டால் அந்தப் பைத்தியங்கள் அசிங்கப்பட்டுவிடும். அவர்கள் குணமடையட்டும்.
ஒருவருடைய உடைகளை, நகைகளைப் புகழ்ந்து வீடாதீர்கள். அவர்களுக்கு பைத்தியம் இன்னும் அதிகமாகி அந்தப் பைத்தியம் கடன் வாங்கி, லோன் வாங்கி, கையூட்டு வாங்கி, பொருள் வாங்க இன்னும் இழிவான நிலைக்குப் போய்விடும். எப்போதும் அமைதியாக இருங்கள் அவர்கள் விரைவில் குணமடையட்டும்.
சாலையில் வாகனத்தில் பயணிக்கும் போது எதிரில் வருகிறவர்களை எல்லாம் திட்டிக்கொண்டே பயணிப்பவர்களையும் மறித்து ஏதாவது சொல்லிவிடாதீர்கள் அது காலப் போக்கில் குணமாகி விடும். தன்னையே பற்றியே புகழ்ந்து கொண்டு இருக்கிற பைத்தியங்களையும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கிற பைத்தியங்களையும் சந்திக்கும் போது அமைதியாக இருந்து விடுங்கள் அவர்களுக்கு குணமாகவிட்டாலும் பிரவாயில்லை அதிகமாகி விடக்கூடாது. கூட இருந்து குழிபறிக்கிறவர்களையும், ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றித் தவறாகப் பேசுகிறவர்களைக் கண்டால் அந்த இடத்தை விட்டே ஒடி விடுங்கள். ஏனென்றால் அவர்கள் நம்மைப் பைத்தியமாக்கி விடுவார்கள்.
என்னைப் பொறுத்த மட்டில் தேவையில்லாத ஆசைகளைச் சுமப்பவர்களும், அதனை நிறைவேற்றத் துடிப்பவர்களும் பைத்தியங்களே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ பைத்தியங்களைச் சந்தித்திருப்பீர்கள் இல்லையா? ஆனால் அவர்கள் பைத்தியங்கள் என்று தெரியாமல் சண்டை போட்டிருப்பீர்கள். அதனால் அவர்களுக்கு முற்றி இருக்கும். அந்தப் பைத்தியங்கள் மீது இரக்கப்படுங்கள் வீட்டில், அலுவலகத்தில், சந்திக்கும் மனிதர்களில், உறவுகளில் எத்தனையோ பைத்தியங்கள். அவர்களோடு தானே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் அமைதியாய் இருங்கள் அவர்கள் குணமடையட்டும். அதற்கு முன் உங்கள் அறையையும் பார்த்துக் கொள்ளுங்கள்! நீங்கள்….? நானும் என் அறையைப் பார்க்கிறேன்….! பாதிப் பைத்தியம் தான். பொருட்கள் மீது அல்ல! மனிதர்கள் மீது…..!
“எல்கை இல்லாமல் அலைந்தால்…..
குணப்படுத்தக் கூடிய பைத்தியங்கள்
கொள்கை இல்லாமல் அலைந்தால்
குணப்படுத்த முடியாத… பைத்தியங்கள்.”