15
Nov
2024
சமீபத்தில் ஒரு வாட்ஸ்-அப் செய்தி ஒன்று படித்தேன். அதில் கதை ஒரு வந்தது நீங்களும் படித்திருப்பீர்கள் இருப்பினும் நினைவூட்டுகிறேன். ஒரு சிறுவன் ஒரு கடைக்குச் செல்கிறான். அங்கு கடைக்காரரிடம் சென்று ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து எனக்குக் கடவுள் வேண்டுமென்று கேட்கிறான். அந்தக் கடைக்காரரோ அதிர்ச்சியாகி அந்தச் சிறுவனைப் பார்த்து சிரித்துவிட்டு அந்தக் நாணயத்தினை விட்டெறிகிறார். உடனே அச்சிறுவன் அந்;தக் காசை எடுத்;துக் கொண்டு ஒரு பெரிய மாலுக்குச் செல்கிறான்.
அப்போது அந்த பையனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது சின்னக் கடையில் கிடைக்க மாட்டார். பெரிய கடைக்குச் சென்று வாங்க வேண்டும் என்று ஒரு பெரிய மாலுக்குப் போனான். அங்கு அவன் இந்த ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு கடவுள் கொடுங்கள் என்று கேட்டான். அவர்கள் அழகுமிகு மால்களுக்குள் ஏதோ வரக்கூடாத ஒருவன் வந்துவிட்டதாக எண்ணி அவனை வேலையாட்கள் பிடித்து வெளியே தள்ளி விடுகிறார்கள். அப்போது அச்சிறுவன் சாலையில் ஒரு காரின் முன் வந்து விழுகிறான். அந்தக் காரில் வந்தவர் இறங்கி வந்து அவனைத் தூக்கி விட்டு என்ன? என்று கேட்கிறார். அதற்கு சிறுவன் இவ்வாறு பதில் சொன்னான்.
என்னை என் அம்மா வளர்த்து வருகிறார்கள். அவர்களும் இப்போது நோயினால் துன்பப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்கள். அங்கு உள்ளவர்கள் இவர்கள் நோயை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்கள். எங்க அம்மா இல்லை என்றால் எனக்கு என்று யாருமே இல்லை. நான் அனாதை ஆகிவிடுவேன். எனவே தான் எங்கம்மாவைக் காப்பாற்ற நான் கடவுளை வாங்க வந்தேன் என்றான்.
உடனே காரில் இருந்து இறங்கி வந்தவர் அந்தப் பையனையும் காரில் அழைத்துக் கொண்டு வந்து அவர்களது அம்மாவையும் சந்தித்து அவர்களை தான் பணிசெய்யும் உயர்ரக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். காரணம் அவர் நகரில் இருந்து பெரிய மருத்துவமனையின் முதன்மை டாக்டர். எனவே அவர் அனைத்து வகை சிகிச்சையும் அந்த அம்மாவிற்கு இலவசமாகச் செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றி தனது மருத்துவமனையிலேயே வேலையும் கொடுத்தார்.
உடனே அம்மா அந்த மகனை கட்டித்தழுவி முத்தமிடும்போது அவன் அவனது அம்மாவிடம் மழலை மொழியில் பேசினான் அம்மா உன்னை மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவமனையில் உன்னைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நான் கடவுளை வாங்குவதற்காகக் கடைக்குப் போனேன் அங்கு துரத்திவிட்டார்கள் கோவிலுக்குப் போனேன் உள்ளே விட மறுத்தார்கள்.
மாலுக்குப்போனேன் தூக்கி வெளியே வீசினார்கள். ஆனால் தெருவில் அதுவும் சாலையில் கடவுளே என்னைத் தேடி வந்தார் என்று பூரிப்போடு சொன்னான். ஆனால் அந்த அம்மா அந்தக் குழந்தையைக் கட்டித் தழுவி நீதான் என் சாமி! நான் ஒரு சாமியை பெத்து எடுத்து இருக்கிறேன். நீ இருக்கிற வரைக்கும் எனக்கு எந்தக் குறையும் இருக்காது. நான் இனி சாகவே மாட்டேன் என்று ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
அன்பு மிக்கவர்களே இந்தக் கதை சொல்லும் பாடம் என்ன? கடவுள் இன்னும் பூமியில் இருக்கிறார் அவர் மனித உருவில் இருக்கிறார். சில கடவுள்கள் தேடினால் கிடைக்கிறார்கள். சில கடவுள்கள் தேடியே வருகிறார்கள். அப்படி இருக்கும் போது இந்தப் புத்தி கெட்ட மக்கள் ஏன் கோவிலில் தேடுகிறார்கள்? என்று தான் இன்று வரை எனக்கும் புரியவில்லை.
எல்லா மக்களும் அவர்கள் ஆசைக்குத் தேவைப்படுகிற கடவுள்களை அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அந்தக் கடவுளை அடுத்தவர்கள் வணங்கும் கடவுளை விட உயர்ந்தவர்களாக அமைக்கிறார்கள். அதுவும் இப்போது உள்ள காலத்தில் அடுத்த கடவுளே இருக்கக் கூடாது. அதனை வழிபட்டால் அவர்கள் வாழக் கூடாது என்று எண்ணுகின்ற மனித மிருகங்கள் வழிபாட்டின் அடையாளங்களோடும் அலங்காரங்களோடும் அலைந்து கொண்டிருக்கின்றன. இன்று கடவுளை நெருங்கிப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக் கொண்டு மக்களிடையே குழப்பத்ததையும், கலகத்தையுமே விளைவிக்கிறார்கள்.
நீங்கள் எந்தக் கடவுளை வணங்கினாலும் சரி அவர்கள் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் மனிதர்களாய் வாழ்ந்து இருக்கிறார்கள். நம்மோடு, நமக்காக வாழ்ந்தவர்கள் அவர்கள் எல்லோருடனும் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லோருக்காகவும் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஏன் எங்க சாமி என்று எகத்தாளம் செய்கிறீர்கள்?
கடவுள் என்பவன் கல்லில் இருப்பவனல்ல! கலசத்தில் இருப்பவனல்ல, சிலையாய் தொங்குபவனல்ல. சமுத்திரத்தில் தூங்குபவனும் அல்ல, விண்ணில் பறப்பவனுமல்ல, மண்ணில் ஆளுபவனுமல்ல, அவன் மனித உருவில் நடமாடிக் கொண்டு இருக்கிறான். மனிதன் நான்தான் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறேன். கண்டுகொள்ளாமலும் இருக்கிறேன். என் கர்வம் கண்ணை மறைக்கிறது. அடுத்தவனை அலட்சியப்படுத்த அடுத்தவன் வளர்ச்சியைத் தடுக்க, அடுத்தவனை அசிங்கப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் தடுக்க இன்று ஆண்டவனை கையில் எடுக்கிறார்கள். இதனால் தான் இன்று மனித மாண்புடன் செயல்படுகிறவர்கள் மதத்தை வெறுக்கிறார்கள். மனிதர்களை வெறுப்பதற்காகவே மனிதர்களைச் சந்திக்கத் தயங்குகின்ற மடையர்கள் பக்தர்கள் என்று பறைசாற்றிக் கொள்கிறார்கள். மனிதனைத் தேடு இறைவனைக் கண்டு அடையலாம். அன்பினைக் கொடு ஆண்டவன் அருகில் நிற்பான்.
அன்புமிக்கவர்களே மனிதம் தேடுங்கள், மனிதனைத் தேடுங்கள், மனிதனில் தேடுங்கள் நீங்கள் இறைவனைக் கண்டடைவீர்கள். இறைவன் எங்கோ இருப்பவன் அல்ல. இமைகளைத் திறந்து அறிவினால் தேடுங்கள். எதிரில் இருப்பான். குழந்தையைப் போல கள்ளம் கபடம் அற்ற இறைவனை உலகத்தில் வேறெங்கும் பார்க்க முடியுமா? அன்னையைப்போல அருகிருந்து அரவணைக்கும் ஒரு தெய்வத்தை அகில உலகம் தேடினாலும் கிடைக்குமா? நண்பனைப் போல ஒரு தெய்வத்தை நாடெங்கும் தேடினாலும் கிடைக்குமா? பிறகெதற்கு இல்லாத இடத்தில் இறைவனைத் தேடுகிறீர்கள்? சொல்லாத பக்தியைக் கடைபிடிக்கிறீர்கள்?
ஆன்மீகம் என்பது நாடகம் அல்ல. வேடம் போட்டு வெளியில் திரிவதற்கு வண்ணங்களும் அடையாளங்களும் நீங்கள் எந்த மதம் என்று சொல்லலாம்! அதனால் என்ன பயன்? இறைவனை கொண்டு வந்து சேர்க்கும் ஏஜென்ட்களாக செயல்படுகின்ற மதக்குருக்களே நீங்கள் எப்போது இறைவனாக மாறப்போகிறீர்கள்?
நல்ல வார்த்தைகளே புனித நூல்! நல்ல செயல்களே இறைவனின் வெளிப்பாடு! நல்லவராக இருப்பதே இறைவனை அடைவது! இதை விட்டுவிட்டு கோவில் கோவிலாக அலைவது கூமுட்டைகளின் செயல் உங்கள் நம்பிக்கை உங்களைக் காப்பாற்றும். ஆனாலும் அடுத்தவர்கள் நம்பிக்கையை காயப்படுத்தாதீர்கள்.!
மரங்கள் கனிகளை தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை. நதிகள் நீரை தானே குடித்துக் கொள்வதில்லை. வயல்கள் விளைச்சலை தன் வாழ்க்கைக்கு வைத்துக் கொள்வதில் பசு தனக்காக பாலினைப் பதுக்கிக் கொள்வதில்லை. ஆனால் மனிதன் நீ மட்டும் எதற்கு சுயநலத்தில் சுருண்டு கிடக்கிறாய்? கோயிலுக்கு வரும்போது செருப்பு இரண்டையும் கழற்றிவிட்டு வந்து புனிதம் தேடுவதுபோல் சமுதாயத்திற்குள் நீங்கள் வரும்போது சாதியையும், மதத்தையும் கழற்றி எறிந்துவிட்டு வாருங்கள்.
அரியாத சிறுவன் கடவுளை காரில் வருபவரிடம் கண்டான். எனவேதான் இயேசு குழந்தைகளாய் மாறாவிட்டால் நீங்கள் விண்ணரசில் சேர முடியாது என்பார். இதனால் அனைவரும் குழந்தை உள்ளமாய் கபடமற்ற மனிதர்களாய் மாற கடவுள் அழைப்பு விடுக்கிறார்.
கடவுள் கண்ணில் தெரிபவன். மண்ணில் மாற்று உருவில் நடமாடுகிறவன் அடுத்தவர்களுக்காக அழுகின்ற கண்ணினையும் அடுத்தவருக்காகத் துடிக்கின்ற இதயமும் அடுத்தவர்களுக்காக உதவும் கரங்களையும் அடுத்தவர்கள் துயர் துடைக்க நடக்கும் கால்களையும் கொண்டவன். எவனோ! அவனே கடவுள். மதங்கள் வேறுபட்டு நிற்கட்டும் கோயில்களில் வித்தியாசம் தெரியட்டும் வழிபாடுகள் மாறுபட்டு நிற்கட்டும் வருகின்ற பாதை பலவாக இருந்தாலும் அடைகின்ற இடம் ஒன்று தான். மதம் வேண்டாம் மனிதம் வேண்டும் மறுபரிசீலனை செய்வோம்.
“வெளிச்சம் ஒன்றுதான்
விளக்குகள் மாறுபடும்”