15

Dec

2023

கொடுப்பவர்களெல்லாம்…

பூமி என்பது உயிர்கள் நிறைந்;தது அவை மகிழ்ச்சியாக வாழ வளங்கள் நிறைந்தது. அவரவருக்கு என்னென்ன தேவையோ? அவற்றைத் தேடி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் மானிடன் பூமியில் அவதரித்த பிறகுதான். தேவையில்லாததைக் கூட திருடும் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தான் விவிலியம் ஆதாம் ஆப்பிள் திருடியதைக் கூறும். கடவுள் எவ்வளவோ கண்டிப்பாய் கூறிய பிறகும் ஆதாம் ஆப்பிளுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாததைத் திருடிவிட்டான். அதனால் கடவுள் அவனைத் துரத்திவிட்டார். ஆனால் இன்று பார்க்குமிடமெல்லாம் ஆதாம்கள் தான் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அப்புறப்படுத்தும் கடவுள்தான் இன்னும் கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை.!

பிரபஞ்சம் சுயநலத்தால் சுற்றிக்கொண்டு இருக்கிறது. தனக்குத் தனக்கு என்று பதுக்கவும் எதிர்காலத்திற்கு என்ன செய்ய? என்று ஒதுக்கவும் செய்கின்ற தலைமுறைகள் தலையெடுத்து விட்டன. எவன் எப்படிப் போனால் என்ன? நான் சுகமாய் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் பெருகிவிட்டார்கள் இப்படியே இந்த உலகம் போய்க் கொண்டிருந்தால்? சுரண்டுபவர்கள் சுகமாய் வாழ்வார்கள் சுரண்டப்படுகிறவர்கள் சுடுகாடாய் மாறி இருப்பார்கள். இருப்பினும் இன்னும் இளகிய மனம் இருப்பதால் தான் படைத்தவர்கள் இதயத்தில் ஈரம் இருப்பவர்கள் தான் இன்றும் இந்தப் பூமி பசுமையாய் படர்ந்திருக்கிறது. இயற்கைப் பேரிடர்களால் நம் இனம் அழியாமல் இருப்பதற்குக் காரணமே இன்னும் தர்மம் செய்கிறவர்களால் மட்டுமே!

ஏழைகளுக்குக் கொடுப்பவர்கள் எளியவர்களுக்கு உதவுபவர்கள் யார்? எனக் கேட்டால், மனிதர்களை அன்பு செய்கிறவர்கள்! பொன்னையும், பொருளையும், புடவையையும், நகையையும், சொத்தையும், சுகத்தையும் தேடுகிறவர்கள் மானிடவம்சத்தின் சொத்தைகள் தான், தனது தன் குடும்பம், தன் உறவு எனும் தற்குறிகளால் இந்தப் பூமி புண்ணியத்தை இழந்து கொண்டிருக்கிறது. இவர்கள் எதிர்காலம் இன்பமாய் இருக்க அருகில் இருப்பவர்களை இருட்டாக்குவார்கள், பழகுவார்கள், பேசுவார்கள் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். சொந்தத்திற்காகச் சுருட்டுவார்கள். பிறருக்குச் செய்ய பொய் காரணம் சொல்லி பிதற்றுவார்கள். பட்டுடை எடுப்பார்கள். ஏழையாய் நடிப்பார்கள். கந்தல் உடைகளை கண்டும் காணாமல் இருப்பார்கள். கந்தல் உடையில் கடவுள் பிறந்தார் என்பார்கள். கந்தல் உடையோடு இருப்பவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் இந்தக் கல்லான இதயத்தவர்கள்.

கொடுப்பவர்கள் எல்லாம் கொடைவள்ளல்கள் அல்ல பிரதிபலன் பாராமல் பிறருக்குக் கொடுப்பவர்கள் மட்டுமே வள்ளல்கள் தனக்குப் போகத்தான் தானம் என்பவனை தர்மன் என்று சொல்லிவிடாதீர்கள். தனக்கு உரியதிலிருந்து செய்வதுதான் தர்மம். தனக்கு இல்லையென்றாலும் கொடுப்பது தாய்மை. புடவை கட்டியவர்கள் எல்லாம் பெண்கள் தான். அதில் கொடுப்பவர்கள் மட்டுமே தாய்கள். கொடுக்க மனமில்லாத பெண்கள் மகவுகளைப் பெற்றிருந்தாலும் மனத்தால் மலடானவர்கள். இவர்கள் மானிட வம்சத்தின் சாபக்கேடுகள்.

கொடுப்பவர்கள் தனக்கு ஆதாயம் தேடாமல் கொடுப்பவர்களே கொடுப்பவர்கள். தன் வழியாக வந்த பொருட்கள் தனக்கு மட்டுமல்ல என்று உணர்பவர்கள். ஆடம்பரத்திற்காக அருகிலிருப்பவர்களை இழக்காதவர்கள் சுயநலம் என்ற நஞ்சை சிறிதளவும் கலக்காதவர்கள். ஆனால் நானும் கொடுத்தேன் என்று சொல்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று எண்ணி விடாதீர்கள். நம் நாடு சுயநலவாதிகளால் சூழப்பட்டது. கைகளில் எல்லாம் கரைகளின் ரேகைக்குள் இருக்கின்றன. எல்லா மனிதர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறப்பு நிச்சயம் அது எப்போது என்று தெரியாததால் தான் இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இங்கு பலபேர் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் கொடுப்பதெல்லாம் தர்மம் அல்ல. பெண்ணை வாழ வைப்பதற்காக மாப்பிள்ளை வீட்டிற்குக் கொடுக்கிறார்கள், படிப்புக்கு, பதவி உயர்விற்கு, வேலைக்கு, தப்பு செய்வதற்கு, தண்டிப்பதற்கு, தப்பிப்பதற்கு, போலிகள் தயாரிக்க புகழுக்கு மயங்க, மகிழ்ச்சியில் திளைக்க, மயக்கத்தில் இருக்க, பெண்களைத் துய்க்க, பிறரன்பைக் கெடுக்க, என்று நிறையக் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் பாவத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்பவர்கள். இவர்கள் கையிருப்பதை வைத்து களவாடுபவர்கள், கயமைத்தனம் புரிபவர்கள் இவர்கள் கொடை வள்ளல்கள் அல்ல நடைபிணங்கள்.

வாங்குபவர்கள் எல்லாம் பிச்சைக் காரர்கள் அல்ல. தேவைக்காக கையேந்துபவர்கள் பிச்சைக்காரர்கள் என்று கூறலாம். இலஞ்சம், வரதட்சணை என்று அடுத்தவர்களை அபகரிப்பவர்களை, அரித்து எடுப்பவர்களை இச்சைக்காரர்கள் எனலாம். இச்சையுள்ளவனுக்கு தினவு எடுத்தால் எதிரில் வரும் பெண்ணைச் சூறையாடுவான். அதுபோல் தன் சுக வாழ்வுக்காக தன் இச்சையைத் தீர்க்க எவரிடமும் கையேந்துவார்கள். பெண்ணின் மீது இச்சையுள்ளவன் எப்போதாவது வரம்பு மீறுவான். ஆனால் இந்த இச்சைக் காரர்கள் வெட்கமே இல்லாமல் ஆட்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே அத்து மீறுவார்கள். ரோட்டில், வீட்டில் அலுவலகத்தில் ஏழை பணக்காரன் என்றும் பாராமல் இச்சையைத் தீர்த்துக் கொள்வார்கள்.

வாங்கிக் குவித்தவன் வானத்திற்குப் போனதுமில்லை தேவையைச் சுருக்கியவன் பூமியில் சுருண்டதுமில்லை. தர்மம் வாழ வைக்கும் தர்மம் செய்தவன் வாழ்ந்து கொண்டே இருப்பான். தர்மம் செய்கிறவன் மனிதநேயம் உள்ளவன். மற்ற உயிர்களையும் தன் உயிர்போல் நேசிப்பவன் சொந்தங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கிவிடாமல் பந்தங்கள் என்ற பரந்த வானத்திற்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் இருப்பதால்தான் மனிதனுக்குள் இதயம் இயங்குவதை இன்றளவும் பூமி புரிந்து கொள்கிறது.

எடுத்துக் கொண்டு போக முடியாத பொருளை எதிரில் தேவையிலிருப்போருக்குக் கொடுத்து விட்டுப் போவோமே! எல்லாம் இங்கு கொடுத்தது தானே! இவர்களால் கொடுத்தது தானே! எத்தனை பேருக்கு நாம் இருப்பதைப் பகிர்ந்திருக்கிறோம்? இல்லாதவர்களுக்கு நாம் உதவியிருக்கிறோம்? முகம் தெரியாத, முகவரி தெரியாத மனிதர்களின் கண்ணீர் துடைத்திருக்கிறோம்? எத்தகையத் தியாகங்களைச் செய்து எத்தனை பேருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறோம்?

எனக்குக் கிடைத்த நலன்களும், வளங்களும், கிடைக்காதவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளத்தானே! புரிந்து கொண்டோமா? இன்று நாம் தர்மம் செய்வதை விட மருத்துவத்திற்குச் செலவு செய்தது அதிகம் தானே! உலகத்தையெல்லாம் வளைச்சுப் போட்டாலும் உப்பு இல்லாமல் தானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்! கொடுக்க மனமில்லாதவர்களுக்கு இரத்தக் கொதிப்புகதானே மிஞ்சுகிறது. தனக்கு நகை தேடுகிறவர்கள் தானே அடுத்தவர்கள் புன்னகையைப் பார்க்க முடியவில்லை. உங்களுக்கே சேர்த்துச் சேர்த்து உருப்படாமல் போய் விடாதீர்கள் இதயம் துருப்பிடிக்க விட்டுவிடாதீர்கள்.

“கொடுங்கள் கொடுக்கப்படும்” இயேசு மகான் சொன்னது. நீங்கள் தர்மம் கொடுங்கள் உங்களுக்கு அன்பு, அமைதி, நிறைவு, மகிழ்வு, சமாதானம் கொடுக்கப்படும் என்பார்கள். உறவுக்காரர்களையும், தெரிந்தவர்களையும் நினைவில் வைத்திருப்பார்கள் தர்மம் செய்தவர்களை இதயத்தில் வைத்திருப்பார்கள் என்னுடைய நினைவில் என் பெற்றோர் உறவினர் இருப்பார்கள் என்னுடைய இதயத்தில் எனக்கு உதவியவர்கள் இருப்பார்கள். இளைஞர்கள் இதயத்தை காதலுக்கு வரைந்து களங்கப் படுத்திவிட்டார்கள்! சமுதாயத்தில் ஒருவர் உங்களைப் பார்த்து உனக்கு இதயம் இல்லையா? என்று கேட்டால் இரக்கம் இல்லையா? என்பதன் வெளிப்பாடுதான். காதல் இல்லையா? என்று யாரும் கற்பிக்கவில்லை எனவே உங்களையே ஒருமுறை ஆய்வு செய்து பாருங்கள். சுயநலம் கொண்டு யோசிக்காமல் பொதுநலப்பார்வையை வீசுங்கள் உங்கள் இதயத்தில் இருப்பவர் யார்? நீங்கள் எத்தனைபேர் இதயத்தில் இருக்கிறீர்கள்? சொல்லுங்கள் கேட்கிறேன் உங்கள் இதயத்தையும் பார்க்கிறேன்.

“தேவைக்குக் கேட்பவர்கள்
பிச்சைக் காரர்கள்
தேவையில்லாமல் கேட்பவர்கள்
இச்சைக் காரர்கள்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES