07
May
2020
“இறைவா என் சுமையை எளிதாக்கு!”
“இல்லையென்றால் என் தோளைப் பலமாக்கு!”
கொரோனாவே உன் விலை என்ன? இந்தக்
கொடூரத்தின் நிலை என்ன?
ஊரே நடுங்குது. இந்த
உலகம் பதறுது…
மரண ஓலம் கேட்குது எங்கும்
மௌன கீதம் இசைக்குது.
சீனா கொடுத்ததனால்?
மலிவாக இருக்கலாம்! ஆனால்
மரணமாக இருந்தது! – எங்கும்
சடலமாகக் கிடந்தது.
ஊரடங்கினால் இதனை
ஒடுக்கிவிடலாம் என்றார்கள்
ஊர்தான் அடங்கியது. கொரோனா
உலகெல்லாம் பரவியது.
கிருமி என்றார்கள் – அது
உருமிக் கொண்டு வந்தது.
இருமிக் கொண்டிருந்தால் அதுதான்
அடையாளம் என்றார்கள்.
கண்ணுக்குத் தெரியாத போர்
காணச் சகிக்காத அக்கப்போர்
இரத்தம் இல்லை மரணம் உண்டு
எதிரி இல்லை வீழ்ச்சி உண்டு.
வல்லரசுகள் வீழ்த்தப்பட்டது
உலகச் சந்தை தகர்க்கப்பட்டது
பொருளாதாரம் புதைக்கப்பட்டது
வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
ஆலயம் மூடப்பட்டது
வழிபாடு நிறுத்தப்பட்டது
ஆண்டவனுக்கே விடுமுறை! நாம்
வாழ்வதற்கெங்கே வழிமுறை?
வங்கிகள் திவாலானது
விவசாயம் பொலிவிழந்தது
தொழில்கள் தொலைந்துபோனது
பொருட்கள் முடக்கிப் போனது.
கை கழுவினால் போதுமென்றார்கள்
வயிறு கழுவ என்ன செய்ய?
கொரோனாவில் பிழைத்துவிட்டு
கொடும் பசியில் செத்துவிடவா?
வீட்டுக்குள் முடக்கிப்போனோம்!
ஊருக்குள் அடங்கிப்போனோம்
சவக்குழியில் அடங்குவதற்கு
சத்தமில்லாத ஒத்திகைப் பார்த்தோம்.
கண்ணுக்குத் தெரியாத வைரஸ்
கண்ணாமூச்சி ஆடுகிறது!
இருக்கிறதா? இல்லையா? – என
நினைத்து நினைத்து
இறப்புக்கு அழைக்கிறது.
மருத்துவர்களையே!
மரணம் முத்தமிடுகிறது
மருந்துகளே இல்லாத
மர்ம நோயாய் இருக்கிறது!
எட்டுத்தித் திக்கும் மரணங்கள்
கொத்துக் கொத்தாய் கிடக்கிறது
திக்குத் தெரியாமல் இருக்கிறோம்
தெளிவு கிடைக்காமல் தவிக்கிறோம்.
கடவுளும் கைவிட்டான்
நம்பிக்கையும் தொலைந்துபோனது
எதிர்காலமோ இருட்டுக்குள்?
நடைமுறை நடைபிணமாய்…
விடிவு இல்லையோ? இதற்கு
முடிவும் இல்லையோ?
எங்களை முடித்த பின்புதான்
இதற்கு வழியும் தெரியுமா?
மரண ஒலங்கள் – எங்கும்
மயானக் காடுகள்
இப்படியே போனால்?
பூமி இருக்கும்.. மனிதர்களின்றி…
என்ன செய்ய இறைவா?
என்ன செய்ய?
என்ன செய்வாய் நீ – தெரிந்தால்
எங்களுக்குப் புரிந்திருக்குமே.
சாட்சிக் காரனின் காலில் விழுவதைவிட
சண்டைக் காரனின் காலில் விழ வேண்டியதுதான்!
கொரோனாவே எங்களை விட்டுவிடு – உன்
கொடூரத்தை இத்துடன் நிறுத்திவிடு!
தாங்கிக் கொள்ள மாட்டோம்.
எங்களைத் தப்பிக்க விடு!
நிரந்தரத் தூக்கத்தில் தள்ளிவிடாமல்
நிம்மதியாய் கொஞ்சம் வாழவிடு!
கொரோனாவே உன் விலை என்ன? இந்தக்
கொடூரத்தின் நிலை என்ன?