12
May
2020
‘எதிரியே இல்லை என்றால் வாழலாம்!
வளரமுடியாது!’
கொரோனா என்பது ஒரு கொடிய நோய் அது வைரஸ் மூலம் வையகத்தில் பரவுகிறது. மனித வாழ்வை அழிக்கிறது என்று பூமியை அச்சப்பட வைத்துள்ளது. நோயும் பேயும் எப்போதும் துன்பத்தையும், துயரத்தையும் தான் தரும் கெட்டது மட்டுமே நடக்கும். நல்லது நடக்காது. ஆனால் இந்தக் கொரோனாவினால் அடங்காதவர்கள் மட்டுமே அடக்கம் பண்ணப்பட்டடிருக்கிறார்கள். மற்றபடி எத்தனையோ நன்மைகள்! எதிர்பார்த்த விடிவுகள்! சாதகமான முடிவுகள் எல்லாம் சத்தியமாய் சமீபத்தில் தானே சாத்தியமாகியிருக்கிறது! அப்படியென்றால் எத்தனையோ நன்மைகளைச் செய்த இந்தக் கொரோனா….ஒரு…?
புவி மண்டலத்தைக் கடுமையாய் அச்சுறுத்திய எப்போது ஆபத்தைக் கக்குமோ? என்று பயந்து கொண்டு இருந்த ஓசோன் படலத்து ஓட்டையானது எந்த மக்களின் உதவியும் இன்றி தானாகவே அடைத்துக் கொண்டு நம்மை தற்காத்துக் கொண்டதே….!
மனிதனின் சுவாசக் காற்றுகள் எல்லாம் மாசு அடைந்து ஒவ்வொருவரின் மார்பு அடைக்கும் அளவிற்கு காற்றில் மாசு கலந்து அதனை தடுக்க முடியாத அளவிற்கு கைமீறிப் போன போது தானாகவே காற்று தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு விட்டதே!
சென்னையின் மத்தியில் சிறப்பாக ஓடிய கூவம் ஆறு இப்போது சாக்கடை நதியாக நாற்றமெடுப்பது போல உலகில் ஒடுகின்ற ஒவ்வொரு நதிகளும் களையிழந்து, கற்பிழந்து, தன் நிலையிழந்து வரும்போது இப்போது தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு கங்கை நதியே குடிநீராக மாறியது. தேம்சு நதியில் டால்பீன்கள் ஓடி விளையாடும் அளவிற்கு நாட்டில் நதிகள் அனைத்தும் தன்னைச் சுத்தமாக்கிக் கொண்டுவிட்டதே!
சின்னவயதில் பார்த்த பறவைகள் எல்லாம் சில காலங்கள் மறைந்து விட்டு இப்போது நமது முற்றத்தில் நின்று பாடிக் கொண்டு இருக்கிறதே!
விலங்குகளைக் கணக்கெடுக்க காடுகள் முழுவதும் தேடித் தேடி அலைந்து அதன் காலடிகளை வைத்து மட்டுமே கணக்கெடுத்த நமக்கு இப்போது ரோடுகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கிறதே!
குடும்பத்திற்காக உழைக்கிறேன் என்று குடும்பத்தை விட்டு ஓடியே போனவர்கள் இப்போது கூடி மகிழ்ந்து கொஞ்சுகிறார்களே. உண்ண உறங்க நேரமில்லை என்று வேலையில் மூழ்கி நொந்தவர்கள் எல்லாம் இப்போது நிம்மதியாக வீட்டில் உறங்குகிறார்களே!
மறுவாழ்வு மையத்திற்குச் சென்று திருந்தாத உள்ளங்கள் கூட குடியிலிருந்து திருந்திவிட்டதே! சீரியல் தவறிவிட்டால் வாழ்க்கையே தொலைந்து விட்டதாக எண்ணும் இல்லத்தரசிகள் இப்போது இல்லையே!
நினைத்துப் பார்க்க முடியாத வரலாற்றுப் பதிவு துப்பரவுப் பணியாளர் கோவில் கற்பகக் கிரகத்திற்குள் சென்று கிருமி நாசினி அடித்து விட்டு வந்தார்களே. அம்பேத்கார், பெரியார் போன்ற பெரியோர்களின் போராட்டங்கள் எல்லாம் சாதிக்க முடியாததை கத்தியின்றி, இரத்தமின்றி, போராட்டமின்றி தேடி அழைத்தல்லவா உள்ளே சென்றார்கள்!
கோயிலுக்குப் போனால் நோய் குணமாகும் என்ற காலம் போய் கோவிலுக்குப் போய் நோயை வாங்கிக் கொள்ளாதீர்கள். அதனை இழுத்துப் பூட்டுங்கள் என்றாகிவிட்டதே!
இந்த நோயை எந்த ஹோமத்தாலோ, கூட்டு வழிபாட்டாலோ குணப்படுத்த முடியாது. கிருமி நாசினியால் மட்டுமே முடியும் என்று அதற்காகக் கிளம்பி விட்டார்களே!
ஆடம்பரத் திருமணங்கள் இல்லை. மக்களிடத்தில் ஆசையைத் தூண்டி பணங்களைப் பறிக்கும் மால்கள் இல்லை, திரையரங்கு இல்லை, கிளப்புகள் இல்லை, களியாட்டங்கள் இல்லை. தாயக்கட்டமும், பல்லாங்குழியும் வீட்டுக்குள் இலவசப் பொழுது போக்குகள் மீண்டும் குடியேறிவிட்டதே!
கோயில்களுக்குத் தெய்வங்களைத் தேடித் தேடிப் போனவர்கள் இன்று தாங்களே சாமிகளாகி தேவையிருப்போர்களைத் தேடித்தேடி உதவி செய்கிறார்கள். மதங்களின்றி, சாதிகளின்றி சேவை செய்கிறார்களே!
இதுவரை வழிபடும் தெய்வங்களாகக் காட்சியளித்த குருமார்கள், சாதீய, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் எல்லாம் மாறி நமக்கு நேரில் உதவுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், சமூக நல ஆர்வலர்கள், கண்கண்ட தெய்வங்களாக மாறிவிட்டார்களே!
பணம் வைத்திருப்பவர், பகட்டான வாழ்வு வாழ்பவர், திரையரங்கு மால்கள், ஜவுளி, நகைக்கடை முதலாளிகளை விட இன்று விவசாயிகள் பெரியோர்களாகக் காட்சியளிக்கிறார்களே!
கொரோனா என்ற நோயைத் தவிர மற்ற நோய்களே இல்லாது மருத்துவ மனைகள் மூடிக்கிடக்கிறதே! மயானங்கள் ஆள் ஆரவாரமற்று இருக்கிறதே!
வல்லரசுகள் என்று மார்தட்டியவர்கள் ஏவுகணைகளை ஏவி மற்றவர்களை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இந்தக் கொரோனோவில் குப்புற விழுந்துக் கிடக்கிறார்களே!
சாலை விபத்துகள் இல்லை. அச்சமூட்டும் ஆம்புலன்ஸின் அலறல் இல்லை, குடித்து விட்டு மட்டையாய் சட்டையில்லாமல் குட்டையில் கிடக்கும் காட்சிகள் இல்லை. குடிவெறிக் கலாட்டா இல்லை. கொலைவெறித் தாண்டவம் இல்லை. என் தேசம் அமைதிப் பூங்காவாகத் தெரிகிறதே!
பணக்காரன் நோயைக் கண்டு பயந்ததில்லை. பணத்தால் மரணத்தை தள்ளி வைக்கலாம் என நினைத்தவர்களை ஏழை பணக்காரன் என்று இல்லாமல் அத்தனை பேரையும் சமமாக ஒடுக்கியதே!
நோய்க்குச் சக்தி கொடுக்கும் என்று ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று சொல்லாமல் கபசுர நீர் காப்பாற்றி வருகிறதே!
எல்லாவற்றையும் ஒருமுறை ஏறிட்டுப் பாருங்கள். எத்தகைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. நடந்தே போகிற மக்கள்! ஓடி ஓடி வேலை செய்கிற மக்கள்! வெட்டு இல்லை, குத்து இல்லை, கொலை, கற்பழிப்பு கொடூரம் இல்லை, கும்பலாகச் சென்று கொல்லுவதும் இல்லை, சாதி, மத பேரால் சாடல்கள் இல்லை! சாவுகளும் இல்லை!
ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோரும் சமம். எல்லோருக்கும் உதவி. இப்போது சொல்லுங்கள். இதற்காகத் தானே நாம் கோவில் கோவில்களாக வேண்டினோம். இதை கொண்டு வந்து கொடுத்தது கொரோனா தானே… அப்படி என்றால் கொரோனா ஒரு….?!
கொரோனா பரவியதோ!… இல்லையோ கொரோனா பற்றிய பயங்களை பரப்பினோமோ!…இல்லையோ ஆனால் கொரோனாவினால் சமுதாயத்திற்கு பல்வேறு நன்மைகள் பரவலாகக் கிடைத்திருக்கிறது.