01

Oct

2015

சகோதரன்

யார் என் சகோதரன்? எங்கேயோ கேட்ட கேள்விபோல் தோன்றுகிறது அல்லவா? ஆம் இன்றும் பல இடங்களில் பல வடிவங்களில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆதியிலே கடவுள் காயினைப் பார்த்து கேட்டபோது காயின் சொன்ன மறுமொழி இது! கூட்டத்திலே இயேசுவைக் கேட்டபோது இயேசு சொன்ன மொழியும் இது. இரண்டையும் ஒருமுறை யோசித்துப்பாருங்கள் ஒரு உண்மை புலனாகும்.

காயின் சொன்ன சகோதரம் தன் சொந்த சகோதரத்தையே மறுதலிக்க முனைவது. ஆனால் இயேசு சொன்ன சகோதரத்துவம். உடன் பிறந்தவர்களுக்குள் மட்டும் நின்று விடக்கூடாது. உலகம் தழுவியதாக நிற்கவேண்டும் என்பதற்காகத்தான் யார் என் சகோதர சகோதரிகள்? இறைவார்த்தைப்படி நடக்கிற அத்தனை பேரும் என் சகோதர சகோதரிகள் என்கிறார். இன்னொரு விசயமும் இதில் அறிவுறுத்தப்படுகிறது. கடவுள் காயினுக்கு என்று ஒரு சகோதரதனைக் கொடுக்கிறார் ஆனால் அவனே அதை இழந்துவிடுகிறான். ஆனால் இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களே இல்லை. ஆனால் உலகம் முழுவதையும் அவர் எடுத்துக்கொண்டார். கொடுப்பதும், கெடுப்பதும் அவரவர் கையில்தான். அடுத்தவர்களைக் குறைகூறி என்ன பயன்?.

சகோதரம் என்றால் என்ன? சகஉதரம், அதாவது உதரம் என்பது தாயின் கருவறை ஒரு கருவறையில் பிறக்கின்ற குழந்தைகள் அனைவரும் சகோதர சகோதரிகளே ஆவர். தொடக்க காலத்தில் நாடோடி வாழ்க்கையில் மனிதன் காட்டுவாசிகளாகச் செல்லும்போது ஆங்காங்கு இருவர் இணைந்து ஆங்காங்கு சென்று கொண்டிருக்கும்போது குடும்பம் பெரியதாகக் கொண்டாடப்படவில்லை வலுத்தவனுக்கு வாய்க்கும் மனைவி, இதனால் அங்கு சகோதரத்துவம் சரியாக இல்லை.

இதனை ஆழமாகச் சொல்ல வேண்டுமென்றால் திருக்குறளைப் படித்துப் பாருங்கள் எல்லா விசயங்களையும் எல்லா நிலைகளையும் சொன்னவர் உடன்பிறப்பைப் பற்றி ஒருவரி கூடச் சொல்லவில்லை. எல்லாக் கருத்துக்களையும் சொல்லிவிட்டார் என்று சொன்னவனுக்கு மத்தியில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தனது காப்பியத்தின் மூலம் கொடிகட்டிப் பறந்தவன் கம்பன். அவன் எடுத்த ஒரே ஆயுதம் உடன்பிறப்பு இதில் உலகளாவிய உடன்பிறப்பைக் கொண்டு வருகிறார். அதனால்தான் குகனோடு நாம் அறுவரானோம். உடன்பிறந்தவர், ஒரே சிந்தைக்குப் பிறந்தவர்கள் எனச்சகோதரத்துவத்தை புதிய சரித்திரத்திற்குள் கொண்டுவருகிறார்.

பின்பு மகாபாரதம் வருகிறது சகோதரத்துவத்தைப் பிட்டு பிட்டு வைக்கிறது. சகோதரத்துவம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என அழகாகச் சொல்விடுகிறது.

நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நமக்கு தேவையின் நிமித்தம் அண்ணாச்சி, தம்பி என்று அழைத்துக்கொள்வோம். இது வார்த்தை அளவில் நிற்கும் சகோதரத்துவம், அண்ணாச்சி மணி என்ன? தம்பி அந்த ஊருக்கு எப்படிச் செல்வது? என்பது முதலாக….

ஆனால் வாழ்க்கையில் எப்படிக் கடைபிடிக்கிறோம் சிந்திக்க வேண்டிய கேள்வி? இன்று பல குடும்பங்களில் ஒரு ஆண், ஒரு பெண் என்ற நிலை வந்தபிறகு சக உதரத்தில் சகோதரன் கிடைப்பானா? இனிமேல் நாமல்லவா அவர்களைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

சரி நாம் பலருக்கோ, சிலருக்கோ இன்று சகோதரனாகப் பழகலாம்? வாழ்க்கையில் வார்த்தைப்பாட்டில் சகோதரராக அடையாளம் காட்டப்பட்டிருக்கலாம் நாம் இந்த மண்ணிற்குச் சொல்கிற தாக்கங்கள் என்ன? என்ன? என்று ஆய்வு செய்ய முடியுமா?

இராமாயணம் கூறுகிற சகோதரத்துவம் என்ன சொல்கிறது நேற்றுவரை அண்ணன், அண்ணன் என அழைத்தவனை பதவிக்காகக் காட்டுக்கு அனுப்பி விட்டானே அவன் சகோதரனா? இல்லை காட்டுக்கு அண்ணன் சென்றாலும் நானும் உடனே வருவேன் என்று சென்றானே அவன் சகோதரனா? இது இன்று பொறுப்பிலிருந்து இறங்கிய சகோதரர்களைக் கேட்டால் சொல்வார்கள் எத்தனை இலட்சுமணர்கள் தன்னை விட்டு ஓடியவர்கள என்று எத்தனை பரதன்கள் பதவிப் போட்டிக்கு வந்தார்கள் என்று! ஏனென்றால் இன்று பட்டம், பதவி, பணம் கூட சகோதரத்துவத்திற்கு துன்பம் விளைவிக்கிறதோ எனச் சங்கடப்பட வைக்கிறது. அனுமன் சகோதரத்துவம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் இணைந்து விட்டோம் அதற்காக எதையும் இழக்கத்தயார் எந்தத் துன்பத்தையும் தாங்கத் தயார் என்று கூறும் நிலைமை எங்கேயோ சகோதரத்துவத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

விபிசினன், சுக்ரீவன் அவர்களும் இராமனின் பாடுகளுக்கு உடனிருந்தவர்களதான் ஆயினும் தனக்;கென்று ஒரு ராஜ்ஜியத்தைப் பெருவதற்காக இவையும் இப்போது ஆராயப்படவேண்டிய ஒன்று. பதவிகொடுத்தால் எப்போதும் உங்களோடு இருப்பேன், உங்களையே புகழ்வேன். கொடுக்காவிட்டால் வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம் வாரிக்கொட்டுவேன், காரித்துப்புவேன் என்பது பச்சோந்திச் சகோதரத்துவம் அல்லவா!

இன்னொரு சகோதரன் இருக்கிறான் அவன் பெயர் கும்பகர்ணன் வாழ்க்கையில் செஞ்சோற்றுக்கடன் கழித்த மகான். ஆனால் அண்ணன் செய்த தவற்றைத் தட்டிக்கேட்கமுடியாமலும், அதிலிருந்த வெளியேற முடியாமலும் மரணித்துவிடுகிறான். இப்படியும் சிலர் தனக்கு மேல் இருப்பவர்களின் தவற்றைத் தட்டிக்கேட்க முடியாமலும், அவர்களைத் தாண்டிவரத் தைரியம் இல்லாமலும் செத்துப்போகும் செம்மறிக்கூட்டச் சகோதரத்துவம்.

மகாபாரதத்தை பாருங்கள் தர்மன் தவறுகிறான். தம்பிமார்கள் எல்லோரும் தடுமாறுகிறார்கள் இதேபோல்தான் தலைமை தவறுசெய்து விட்டால் உடனிருப்பவர்களெல்லாம் அடையாளத்தை இழந்து விடுகிறோம். இது கையாகலாகாத சகோதரத்துவம் எனவே மூத்தவர்களெல்லாம் முன்னோடியாகவே திகழவேண்டும் மகாபாரதம் இன்னொரு விசயத்தையும் முன் வைக்கிறது. இரண்டு சகோதரத்தும் முட்டிக்கொள்கிறது. தர்மம் தர்மத்தின் பக்கம், துரியோதனன் துரோகத்தின் வர்க்கம், தர்மம் நிற்கும் பக்கம் சோதனைக்குப்பின் சாதனை வருகிறது. துரியோதன் பக்கம் சாதனைபோல் வந்து வேதனையில் விடிகிறது. சகோதரமே ஆறா, நூறா என்பது முக்கியமில்லை நீங்கள் யாரையும் சாரமால் நின்றால் அதுதான் இன்பத்தின் எல்லை.

கர்ணன் வாழ்க்கை உங்களுக்குத் தெரியும் ஆனால் தர்மத்தின் தலைவன் அதர்மத்தில் துணையோடு நின்றதால் அன்னை, பிதா, குரு, கடவுள் நால்வருமே கைவிட்ட அபாக்கிய சாலியாக மாறிவிடுகிறான். ஆகவே எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் சென்று விடாதே அது உன்னை இடந்தெரியாமல் அழித்துவிடும்.

சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றால் மானிடம் பிளவுபட்டுக்கிடக்கிறது. இதனால் குரோதம், பகை சண்டை, அழிவு கோலோச்சுகிறது இதனை அழித்து மானிடத்திற்கு மணிமகுடம் சூடப்பிறந்ததுதான் சகோதரத்துவம்,
ஆனால் சகோதரத்துவத்திற்குள் சாதியம் புகுந்தபோதுதான் அது சாத்தான் பட்டறையாகிவிட்டது. நம் பரந்த சகோதரத்துவத்துக்குள் நம் சாதியும் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் சாதியத்தில் மட்டும்தான் என் சகோதரத்துவம் இருக்கிறது என்றால் உனக்கு மீட்பில்லை. உலகிலே உண்மையான போராளி யார் என்றால் தன் சாதியத்தையே எதிர்த்து நீதிக்காகப் போராடுபவர்கள்தான். நேற்று பாரதி போராடினான் இன்று நீங்களாக இருங்களேன்!?

நம் தலைவன் இயேசுவிடம் வெளியே உன் தாயும் சகோதரரும் நிற்கிறார்கள். என்றவுடன் யார் என் தாயும், சகோதரர்களும்? இறைவார்த்தையைப் பின்பற்றும் அனைவரும் என் தாயும் சகோதரரும் என்றார் இன்று மாற்றி யோசிப்போமே!.

சகோதரத்துவத்தில் சாதியங்கள் கோலோச்சி நிற்பதால் சிந்தனைக்காக ஒரு தலைமையிடம் என் சகோதரனே உனக்காக வெளியே உன் சாதிக்காரன் நிற்கின்றான் என்றால் யார் என் சாதிக்காரன்? எனது சபையில் இருக்கின்ற அத்தனைபேரும் என் சாதிக்காரன்தான் என்று சொல்லமுடியுமா? சொல்லிவிட்டால் இன்றைய உலகில் அவர் தான் சகோதரன். இயேசு சொன்ன சகோதரன் இயேசுவின் சகோதரன், இயேசுவின் திரு இருதய சகோதரன். என்ன ரெடியா?

ARCHIVES