24

May

2024

சரஸ்வதி சபதம்…

வெற்றி என்பது இப்போது போதையாகிப்போனது. வெற்றிபெறாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று மனமொடிபவர்குளம் வாழ்க்கையை முடிப்பவர்களும் இங்கு அதிகமாகிவிட்டார்கள். வெற்றி தான் நமது அடையாளம் என்று தானும் செத்து சுற்றியுள்ளவர்களையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் முடிவாக இருந்தாலும் சரி, தேர்வு முடிவாக இருந்தாலும் சரி எப்படியாவது வெற்றி அடைந்து விடவேண்டும். இதுதான் இன்றைய வாழ்க்கையின் நியதி!.

வெற்றி பெறுகிறவன் உண்மையிலேயே தகுதியானவனா? இந்தச் சமூகத்திற்கு ஏற்றவனா? நல்ல குண நலம் உள்ளவனா? அவனால் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது அழிவு வருமா? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை எப்படியாவது வெற்றி அடைந்துவிட வேண்டும் என்பது மட்டுமே இங்கு நோக்கமாக வைத்துக்கொண்டு ஓடுகிறோம். தேர்தல் என்றால் வேட்பாளர், கட்சி, சாதி, மதம்! தேர்வு என்றால் மாணவன், பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாகம் எல்லோரும் வெற்றிப் பசியோடு விரைந்து கொண்டிருக்கிறோம்.

இன்று பள்ளிகளில் நூறு சதவீத வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் எதில்? ஒழுக்கத்திலா? உண்மைபேசுவதிலா? அறிவிலா? சிந்தனையிலா? ஆசிரியர்கள், பள்ளியின் மீது கொண்ட பக்தியிலா? சமுதாயப் பண்புகளிலா? எதில் நூறு சதவீத வெற்றியைப் பெற்றிருக்கிறோம்? வெறும் மதிப்பெண்ணிலா? இதுதான் ஒரு மாணவனைப் புரிந்து கொள்ளும் கம்ப சூத்திரமா? கள்ள ஓட்டுப்போட்டு ஒரு வேட்பாளன் வெற்றி அடைவதும், பிட் அடித்து ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெறுவதும் கொண்டாடப்படுகின்ற வெற்றியாகுமா?

காந்தியும் வெற்றி பெற்றார், அசோகரும் வெற்றி பெற்றார். ஆனால் அசோகரின் வெற்றி இன்று கொண்டாடப்படுகிறதா? காரணம் எத்தனையோபேர்களைக் காயப்படுத்தி, கட்டாயப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அடைந்த வெற்றி அது. இன்று தேர்வு முடிவுகளும் என்னைப் பொறுத்தமட்டில் பலருக்கு அவ்வாறு அமைந்துவிடுகிறது. பள்ளி வெற்றிக்காக இங்கு பலர் பலியிடப்படுவதாகத்தான் நான் உணர்கிறேன்.

கல்வியை மட்டுமே போதித்து இந்தத் தலைமுறையிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? அனைவருக்கும் கல்வி என்று வந்தபிறகு என்ன முன்னேற்றத்தை அடைந்திருக்கிறீர்கள். ஒழுக்கத்தில் உயர்ந்து விட்டோமா? ஓற்றுமையில் வளர்ந்துவிட்டோமா? மதிப்புடன் நடந்து கொண்டோமா? மாண்புடன் திகழ்ந்து விட்டோமா? இல்லையே, படித்தவர்கள் என்றால் பண்புடன் நடப்பது தானே கல்வி? அதுவே இல்லாவிட்டால்? அதற்காக ஏன் இத்தனை பேர் சாகவேண்டும்?

படித்துவிட்டால் எப்படியாவது ஒரு அரசு வேலைக்குப் போய் எதிர் காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்பது தானே ஒவ்வொரு பெற்றோர்கள் பிள்ளைகளின் கனவு! அத்தனை பேரையும் படிக்கச் சொல்லி வலியுறுத்துகிற அரசுக்கு அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க வசதி உள்ளதா? இல்லை முயற்சி செய்கிறதா? குடிமக்களை குடிமகனாக மாற்றிக் கொண்டிருக்கிறது!

படிப்பது அறிவை வளர்ப்பதற்காக! வேலை தேடிக்கொள்வது அவரவர் பொறுப்பு என்று வியாக்கினம் பேசுவார்கள்! அவன் வேறு வேலையே கற்றுக்கொள்ளாதபடி பள்ளியில் அடைத்து விடுகீறர்களே! இதற்கு முன் ஓரு மாணவன் படித்துக்கொண்டே தந்தைக்கு உதவியாக, விவசாயத்திலோ, கூலியாகவோ, கட்டுமானப் பணியிலோ ஈடுபடுவான். படிப்பு வரவில்லை என்றால் தேர்வில் தோல்வி அடையும் போது பழகிய வேலைக்குச் சென்று விடுவான். ஆனால் இன்று படிப்பு, வீட்டுப் படிப்பு, தனிப்படிப்பு என்று பிற எந்தப் பணிக்கும் போகவிடாமல், எதையும் கற்றுக் கொள்ள விடாமல் முட்டாளாக்குவதுதான் உங்கள் கல்வியா?

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அனைவருக்கும் கல்வி வந்தபிறகுதான் விவசாயத்திற்கு ஆள் இல்லாமல் போய்விட்டது. விவசாயமும் கேவலமாகப் பார்க்கப்பட்டது. பிற மாநிலப் பணியாளர்கள் இங்கு வந்து வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது மாணவர்கள் மேதாவிகளாக தன்னை நினைத்துக் கொண்டு அலைபேசிக்கு அடிமையாகுகிறார்கள். குழந்தைகள் எல்லாம் படித்த முதலாளியாகவும், பெற்றோர்கள் எல்லாம் படிக்காத தொழிலாளியாகவும் பெற்றோர்களை மதிக்காத, பெற்றோர் சொல் கேட்காத குழந்தைகளைத் தானே இன்றையக் கல்விமுறை ஈன்று தருகிறது!

இதில் என்பள்ளி நூறு சதவீதம் உன்பள்ளி எண்பது சதவீதம் என்ற வேறுபாடு வேறு. இதில் ஆங்கிலக் கல்வியில் ஒரு 30 மாணவர்களை வைத்துக்கொண்டு ஆங்கொரு அரசுப் பள்ளி, 500 பேரை வைத்திருப்பார்கள் அவர்களோடு ஒப்பிட்டு நாங்கள் நூறு சதவீதம் என்றும் அதற்குப் பல்வேறு இடங்களில் பாராட்டுப் பதாதைகள் வைப்பதும் யோசிச்சுப் பாருங்க நமக்கே இது அசிங்கமாகத் தெரியும்!

மாநகருக்குள் கற்றுக் கொடுக்கிற ஆசிரியரும், மாஞ்சோலைக்கு மலையேறிக் கற்றுக் கொடுக்கிற ஆசிரியர்களும் இங்கு ஓரே பந்தயத்தில் ஓடுகிறார்கள். மதிப்பெண்ணும், வசதியும் இருக்கிற மாணவர்களை தேர்வு வைத்துத் தேர்ந்தெடுக்கும் பள்ளியும், தேடித்தேடி மாணவர்களைப்பிடித்து அடிப்படை வசதிகளைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் குணங்களைத்திருத்தி கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளியும் ஓரே களத்தில் போட்டியிடுகின்றன!

காரில் வந்து இறங்கி அனைத்து வசதிகளுடனும் வகுப்பறைக்குள் நுழையுமுன் எழுந்து நிற்கும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், பள்ளிக்குச் சென்று ஒவ்வொரு பெற்றோர்களையும் அலைபேசியில் அழைத்து அவனைப் பள்ளிக்கு வரவழைத்து அவனுடைய துன்பங்களைக் கேட்டு மனதிற்கு மருந்து தடவி, கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கும் ஓரே அளவுகோலில் இங்கு அளக்கப்படுகிறார்கள்!

கல்வி நிறுவனங்கள் இன்று மதங்களோடு இணைந்து பயணிக்கிறது. கல்விப்பணியே கடவுள் பணி என்கிறார்கள். தன்னைக் கடவுளுக்கு அர்பணித்து ஏழைகள், எளியவர்கள் இவர்களுக்காக நான் என வார்த்தையும், படித்தவர்கள் வசதியானவர்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொள்வதை வாழ்க்கையிலும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் இங்கு அதிகம். வளாகம் முழுவதும் கடவுள் சிலைகள். ஆனால் கடவுளை மட்டும் காவலரை வைத்து துரத்தி விடுவார்கள். சுவர் முழுவதும் பொன் மொழிகள் வாயில் வருவது மட்டும் கோப வெறிகள். இப்படி இருந்தால் அது கடவுளைப் போதிக்கும் சாத்தான்களாகத்தான் சமான்யர்களுக்குத் தெரியும்.

சரஸ்வதி சபதம் என்ற ஓரு படம், கல்வியா? வீரமா? செல்வமா? என வரும் போது பிறப்பால் ஊமையாக இருந்தவனைப் புலவனாகவும், பிறப்பால் பிச்சைகாரியாய் இருந்தவரை பணக்காரராகவும், பிறப்பால் கோழையாக இருந்தவனை வீரனாகவும் மாற்றுவதுதான் அப்படத்தின் கருத்து. அதுதான் குருவெனக் கொண்டார்கள் அதுதானே ஆசிரியப் பணி.

எங்கோ ஒருவன் சிறுகச்சிறுகச் செதுக்கி சிற்பமாய் மாற்றி வைத்திருப்பான். அவனை நேர்முகத்தேர்வு வைத்துத் தேர்ந்தெடுத்து வெற்றியடைய வைப்பதுதான் வீரமாகுமா? சிற்பியாய் செதுக்குவான் ஒருவன், ஏற்கனவே சித்திரமாய் இருப்பதன் மீது வண்ணம் தீட்டுவான் ஒருவன். சிற்பத்தை விட சித்திரம் அனைவர் கண்களுக்கும் கவர்ச்சியாகத் தெரியும் ஆயினும் இருவரும் ஒன்றா? இதனை எப்படி எடைபோடுவீர்கள்?

சிலர் முயலுக்குப்(மீத்திறன் பெற்ற மாணவர்கள்) பயிற்சி கொடுத்திருப்பீர்கள். சிலர் ஆமைக்குப்(மெல்லக் கற்கும் மாணவர்கள்) பயிற்சி கொடுத்திருப்பீர்கள். ஆமையை முயலோடு ஓடுவதற்கு தயார் செய்ததே வெற்றி தானே! அதற்கு முயலுக்குப் பயிற்சி தந்தவர்களை நூறு சதவீதம் வெற்றி எனக் கொண்டாடுகிறீர்கள். கொண்டாடுங்கள் அதற்காக ஆமைக்குப் பயிற்சி கொடுத்தவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.

நகரத்தில் நூறு சதவீதம் எடுத்தவர்கள் கிராமத்துப் பள்ளிக்குப் போவோம். கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்துப் பள்ளிக்கு வருவோம் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள் ஆங்கிலப் பள்ளியாக இருந்தாலும் அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிக்குச் சென்று பயிற்சி கொடுப்போம். எல்லாத் தளத்திலும் நின்று நூற்றுக்கு நூறு பெற்றுத் தந்தால் உங்கள் வெற்றியை உலகிற்கு உரைக்கும் முதல் ஆளாக இந்த வழிப்போக்கன் இருப்பான் வரட்டுமா?

“கல்வியில் வெற்றி என்பது

கடலில் முத்தெடுப்பது
மட்டுமல்ல…
காட்டாற்று வெள்ளத்திலும்
கால் நனைப்பது ….”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES