19
Aug
2023
காலங்காலமாக பரம்பறை பரம்பறையாக, பண்பாடு, கலாச்சாரம், சம்பிரதாயம், சாஸ்திரம், வழக்கம், கட்டு, செய்முறை என்று பலவற்றை வைத்துக் கொண்டு இன்றும் கடைபிடித்து வருகிறோம். ஆனால் அதன் காரணத்தையும் அதற்குரிய பலன்களையும் அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தி இருக்கிறோமா? அதனால் இந்தத் தலைமுறைகள் கேட்கின்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை! உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்லுங்களேன்.
மனிதருக்குள் சாதி எப்படி வந்தது? இதில் மேல் சாதி, கீழ் சாதி என்று எதை வைத்துப் பிரித்தீர்கள்? கீழ் சாதிக் காரன் மேல் சாதிக் காரனுக்கு அடங்கிப் போக வேண்டும் என்று யார் சட்டம் கொண்டு வந்தது. இதில் பலருடைய வாய் முனுமுனுப்பது சாதி என்னங்க சாதி எல்லா இரத்தமும் ஒரே நிறம் தான் அப்படிச் சொல்கிறோம்!. ஆனால் இன்றுவரை நம் வீட்டில் திருமணம் என்று வந்துவிட்டால் சாதிக்காரனைத் தவிர மற்றவர் வீட்டில் மணம் முடிக்க மனம் மறுக்கிறதே! இன்றுவரை நம் பெற்றோர்கள் பழகிய, நெருங்கிய நண்பர்கள் வீட்டில் கூட பெண் எடுத்து பெண் கொடுப்பது இல்லையே! இது ஏன் இன்று வரை எழுதப்படாத சட்டமாக இருக்கிறது?
குழந்தைகள் என்றால் இறைவன் கொடுக்கிற வரம். நாமும் நமது குடும்பமும் வழிவழியாகத் தளைத்தெடுக்க காலம் நமக்குக் கொடுத்த கடிதாசி. இதில் ஆணென்ன, பெண்ணென்ன, இதில் மட்டும் எத்தனை வேறுபாடுகள்? முடியில் கூட முடிவு தப்பாக இருக்கிறது. ஆண்கள் அளவோடு வைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் அதுதான் அழகு! அழகு படுத்தப் பயன்படும் சாதனம். ஆண் குழந்தையென்றால் டவுசர் பெண் என்றால் பாவாடை சட்டை! பெண்ணுக்கு காலில் கொலுசு எதற்கு? ஆண் என்றால் அரை நிர்வாணமாகக் கூட அலையலாம். பெண் என்றால் இழுத்துப் போர்த்தி இருக்க வேண்டும். இடுப்புத் தெரியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டாண்டு காலமாக ஆண்கள் பெண்கள் கழுத்தில் தாலி கட்டினால் அது திருமணம்! ஏன் ஒரு வாதத்திற்கு பெண் ஆண் கழுத்தில் கட்டினால் ஆகாதா? ஆண் குழந்தை பிறந்து விட்டால் துள்ளிக்குதித்துக் கொண்டாடுவதும் பெண் என்றால் அழுது புலம்புவதும் ஏன்? ஆண் என்றால் எப்படியும் பிழைத்துக் கொள்வான்! பெண் என்றால் எங்கே போவாள்? இதுதானே உங்கள் வாதம்!
இப்போது உலகைப் பாருங்கள் பெண் ஏதாவது ஒரு வேலைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறாள் எங்கு பாhத்தாலும் பெண்கள் தானே பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அப்படியென்றால் பெண்ணுக்கு ஏன் பேதம் காட்ட வேண்டும்? பெண்களும் இப்போது வேலைக்குப் போன பின்பு ஆணும், பெண்ணும் வருமானத்திற்குச் சரிபாதியாக உழைக்க முன் வந்த பிறகு, வீட்டுக்குள் உள்ள வேலை மட்டும் இன்னும் ஏன் பிரித்து கொடுக்கப்படாமல் இருக்கிறது? சமையல் அறை பெண்ணுக்கு மட்டும் சொந்தமா? எத்தனை மணிக்கு பெண் வேலையை விட்டு வந்தாலும் அவள் வந்துதான் அடுப்படி வேலையைப்பார்க்க வேண்டும் என்பது அவசியம் என்ன? இது அடக்குமுறை தானே!?
சரி அதை விடுங்கள் ஆணாய் இருந்தால் என்ன? பெண்ணாய் இருந்தால் என்ன? இரண்டும் நம்ம குழந்தைதானே! ஆண்குழந்தைக்குச் சொத்தைக் கொடுக்கிறவர்கள் ஏன் பெண் குழந்தைக்குக் கொடுக்க மறுக்கிறீர்கள்? ஒரு தகப்பன் இறந்து செல்லும்போது பாதி வழியிலே பெண் தடுக்கப்படுகிறாள். சிதை ஊட்டுவது ஆண் குழந்தைகள் தானே பெண்ணுக்கு ஏன் அந்த உரிமை கொடுக்கக் கூடாது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
இன்று மனிதனை அதிகம் ஆட்டிவைப்பது மதம் எல்லா மதங்களும் கடவுள் ஒருவனே என்றுதான் உரைக்கிறோம். அந்த ஒருவன் யார்? ஆளுக்கு ஒரு சிலையை வைத்து ஆர்ப்பாட்டம் பண்ணுகிறோமே! அப்படித்தான் கடவுள் இருக்கிறான் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? கற்பனைக்கு எட்டாத கதைகளைச் சொல்லி ஏமாற்றுகிறீர்களே அதற்கு அறிவியல் பூர்வமாக உண்மை இருக்கிறதா? இல்லையென்றால் ஆய்வு செய்யத் தயாராய் இருக்கிறீர்களா? பொய்யைக் கூட வேதமாய் வைத்து மனிதனைச் சாகடிக்கிறீர்களே! உங்களுக்கு மனச்சாட்சி உண்டா? இல்லை மழுங்கித்தான் போச்சா? வாருங்கள் மறுபரிசிலனை செய்வோம்?
சமத்துவம் பேணும் சமுதாய நலன் விரும்பிகளே! இதேபோல் தான் நம் சாதியிலும், நம் மதத்திலும் எண்ணற்ற மூட நம்பிக்கைகளை மதச்சடங்காக வைத்து, சாதிச்சடங்காக வைத்து பெண்களை அடிமைகளாக வைத்திருக்கிறோம். மற்றவர்களை விரோதிகளாக எண்ணுகிறோம். எல்லாரும் ஒரளவு மத நம்பிக்கையில் இருப்பதனால் உங்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக நான் மதச்சடங்குகள் பற்றிப் பேசவில்லை நீங்கள் பேசுங்கள் நாம் கடைபிடிப்பவை அத்தனையும் அறிவியல் பூர்வமானதா? ஆக்கப்பூர்வமானதா? சரியான காரணமில்லாவிட்டால் நாம் மாட்டியிருக்கிற சக்தியில் நம் சமுதாயமும் சிக்க வேண்டுமா? எல்லோருக்கும் மனதில் எண்ணற்ற கேள்விகள் இருக்கிறது. ஆனால் சமுதாயமும், சடங்குகளும் நம் வாயை அடைத்து ஊமையாக்கிவிட்டது. ஆனால் ஒன்றே ஒன்று உங்களை நோக்கிக் கேட்கிறேன். இந்தப் புழுத்துப் போன சடங்குகளிலும் அழுகிப்போன சம்பிரதாயத்தில் இருந்தும் நம் புதல்வர்களைக் காக்க சில கேள்விகளைக் கேளுங்கள்! ஈர நெஞ்சம் உள்ளவர்கள் எப்போது கேள்வி கேட்கப் போகிறீர்கள்? கேளுங்கள் கிடைக்கும் வரை.
“சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடிமறைத்ததனால் – அந்த
ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததடா….!”