13
Nov
2020
“குழந்தைகள் தெய்வமானால்
கொண்டாட வேண்டாமா! அதுவே
கொண்டாடும்போது…நாம்
குதுகலிக்க வேண்டாமா?”
தடை, தீபாவளி அன்று வெடிப்பதற்குத் தடை! எதற்குத் தடை? வெடியில் ஏற்படுகின்ற புகை காற்றினை மாசுபடுத்திவிடும். அந்தக் காற்றைச் சுவாசிக்கும் போது எண்ணற்ற நோய்கள் நமக்கு உருவாகும் அதனால் பல்வேறு இழப்புகள் ஏற்படும் என்பதற்காகத் தடை என எண்ணும்போது நமக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டு நம் தலைவர்கள் எடுக்கும் முடிவு. இப்படிப்பட்ட தலைவர்களைப் பெறுவதற்கு நாம் என்ன தவம் செய்தோம்? எல்லாம் இறைவன் கொடுத்தவரம்.
வெடிக்கத்தடை! அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் வெடிக்க வேண்டும். வெடிக்க மட்டும் தான் தடையா? அதுதான் வெட்கமாக இருக்கிறது. குடிக்கத் தடையில்லையா? அதில் தாராளமாக இருக்கிறது அரசு. அதுதான் மனசு வலிக்கிறது.
உண்மையிலே மாசுபடுதலைத் தடுக்க வேண்டுமென்றால் இயற்கைச் செல்வங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும். இயற்கைச் செல்வங்களை அழிப்பதை நிறுத்த வேண்டும். அதனை அழிப்பவர்களை அழித்தால் அழிக்கப்படுவது தளிர்க்கும். அதனை இந்த அரசு செய்யுமா?
மலைகளை முழுவதும் கடைந்தும் குடைந்தும் ஒன்றுமில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதனை ஒடுக்கி அவர்களுக்குத் தடை விதிக்க முடியுமா? ஆற்று மணல் நீரை உறிஞ்சும் என்று அறிவியல் சொன்னது ஆற்று மணலையே உறிஞ்சிக் கொண்டிருக்கிற இந்த அறிவில்லாதவர்களை அடக்க அதனைத் தடை செய்ய முடியுமா? காட்டு வளங்கள் தான் நாட்டு வளங்கள் எனத் தெரிந்திருந்தும் காடுகளிலுள்ள மரங்களை வெட்டி எடுப்பதற்கு நெருப்பு வைக்கின்ற கரங்களை எரிக்க முடியுமா?
செம்மரங்களைத் திட்டம் போட்டுக் கடத்தும் சீமான்களை விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காய் கூலிக்கு வெட்டுகின்ற அப்பாவிகளைச் சுட்டு வீழ்த்திவிட்டு மாவீரனைப் போல் பத்திரிக்கைகாகப் படம் காட்டுகிற பச்சோந்திகளை நிறுத்த முடியுமா? இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் பப்ஜி விளையாட்டு, போதைப் பொருட்கள் கனிமவளச் சுரண்டல்கள் என அத்தனைக்கும் தடை விதிக்கிற ஆண்மையுள்ள தலைவர்களை எதிர்ப்பார்க்கின்றோம்.
நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்ச உறிஞ்ச மரத்தின் வேர்களுக்கு நீரில்லாமல் மடிந்து போகிறது. அதனை தடை செய்ய முடியுமா? வீடு சுத்தமாய் இருந்தால் போதும் என்று குப்பைகளை வீதியில் எறிகிறார்களே அவர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு எறிந்து கிடக்கிற பீங்கான்களால் எவ்வளவு ஆபத்து! எத்தனை விலங்குகள் இறந்து விடுகின்றன? இதனையெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமா? இதற்கெல்லாம் தடை வந்தால் எங்களுக்கு மட்டுமல்ல எதிர்வரும் தலைமுறைக்கு இன்ப அதிர்ச்சியே…. இடைவிடாத மகிழ்ச்சியே….
வெடிப்பதற்கு மட்டும் தடை குடிப்பதற்குத்தடையில்லை. இதில் ஏதும் அரசியல் இருக்கிறதா? குழந்தைகள் என்பதால் தேவையில்லை என நினைத்து, குடிப்பவர்களை ஓட்டுவங்கிகளாகப் பார்க்கிறார்களா? தள்ளாடுகிறவனின் ஓட்டுக்களைப் பெற்று நிலையான ஆட்சி கொடுக்கப் போகிறீர்களா? உங்களைச் சொல்லி குற்றமில்ல நீங்களே குவாட்டரைக் கொடுத்துதானேக் கோட்டைக்குப் போனீர்கள் ஓட்டுக்குக் காசு கொடுப்பதையும் காசு வாங்குவதை தடைசெய்ய முடியுமா? அரசுப் பணியிலிருந்து அகப்பட்டதைச் சுருட்டுகின்ற அயோக்கியர்களை அப்புறப்படுத்த முடியுமா? கையூட்டு வாங்குகிறவர்களின் கைகளை வெட்டி எறிய முடியுமா? இதையெல்லாம் எதிர்ப்பார்க்கின்றோம் ஏனென்றால் காற்றின் மாசினைக் கூட நாங்கள் கடந்து போய்விடுவோம். இந்த நாட்டில் படர்ந்திருக்கிற நச்சுக்களை எப்படி நகர்த்துவது? உடனிருந்து கொல்லும் நோய்களைப் போல எங்கள் உடனும் ஊருக்குள்ளும் அலைகிறதே அதனை எப்போது அப்புறப்படுத்தப் போகிறீர்கள்?
வெடி நெருப்பு நம்மை வீழ்த்து விடும் என நினைப்பவர்கள் அதனை செய்கின்ற தொழிலாளர்கள் அடுப்பு எறிய வேண்டும் எனவும் நினைக்க வேண்டும். முதலாளிகளை வைத்தே உங்கள் முடிவுகள் இருந்து விடாமல் தொழிலாளர்கள் பக்கமும் திரும்பட்டும்.
குழந்தைகள் சந்தோசத்திற்குக் கொள்ளி வைத்து விட்டோமோ? என்ற கவலையும் கண்ணீரும் தெரிகிறது. அவர்களது முகமலர்ச்சியை மூடிவிட்டோமா? முடித்துவிட்டோமா? என்ற வருத்தமும் இருக்கிறது. இருப்பினும் பொதுநலனுக்காக அதனைப் பொறுத்துக் கொள்கிறோம். எனக்குப் பிறந்ததே இவ்வளவு தியாகம் செய்யும்போது என்னில் தியாகம் சுரக்காதா?
இயற்கையைக் காப்போம். விவசாயத்தை வளர்ப்போம். சுரண்டலைத் தடுப்போம். ஊழல்களை ஒழிப்போம். மாசினை ஒழிப்போம். தூசினைத் தடுப்போம். போதையை ஒழிப்போம் புதுப்பாதையை வகுப்போம். குற்றச் செயல்களை அழித்துவிட்டு, குறைகளை ஒளித்துவிட்டு கயமை, களவு, கபடு, சூது போன்றவற்றை எறித்துவிட்டு புதிய ஆன்மீகம் கலந்து அறிவொளியை ஏற்றுவோம் அதுவே நம் தீபாவளியாக இருக்கட்டும்.
“யாகங்களை விட
தியாகம் பெரிது
செய்யக் சொல்வதைவிட
செய்வது மேலானது”