11

Nov

2021

தண்ணீர்…தண்ணீர்…

மரணத்தின் பிடியில் நின்று கடைசியாக ஒருவனின் கதறல் கேட்கின்ற ஒலி தண்ணீர்…தண்ணீர். அந்தக் கடைசித் தண்ணீர் அவர்களுக்கு உயிரைக் கொடுக்கும் அல்லது அப்படியே ஆடி அடங்கும். ஒரு துளி தண்ணீரில் உருவாகும் மனிதனின் கடைசி வாழ்க்கை இவ்வாறு தண்ணீரிலே முடிகிறது.

ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் தண்ணீர் என்ற தவிப்பு இருக்கிறது. இது தாகத்திற்காக எழும் அபயக் குரல் அல்ல. தப்பிப்பதற்காக கூக்குரலிடும் அபயக்குரல். மழை பெய்யாதா? எனத் தவம் இருந்தவர்கள். இப்போது மழைபெய்யாமல் இருக்காதா? என ஏங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

நம்மையே ஒருமுறை கேட்டுப்பாருங்கள் தண்ணீரின் தேவைக்காக முல்லைப் பெரியாரிடமும் காவேரியிடமும் முட்டி மோதிக் கொண்டு இருப்போம். அவர்களும் தரமுடியாது என வரிந்து கட்டுவார்கள். பிறகு மழைவரும் தாராளமாகத் திறந்து விடுவார்கள். நாம் தண்ணீரில் தத்தளிப்போம்.

இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இதுதான் இருமாநிலத்து அரசியல். நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு என்பது தான். ஆனால் வலிக்கிறது என்னவோ இரு மாநில மக்களுக்குத் தான். ஒரு நாம் நம்மை ஒன்று சேர விட மாட்டார்கள் இந்த அரசியல்வாதிகள். ஒரு ஆண்டில் பெய்கின்ற மழையின் அளவைக் கணக்கிட்டால் இதுவரை யாரும் யாரிடமும் கையேந்தவும் வேண்டாம். இதனால் கலவரம் ஏற்பட்டு கை நீட்டவும் வேண்டாம். ஆனால் பொறுப்பையும் இழப்பையும் அடுத்தவன் தலையில் கட்டிவிட்டு ஆட்டம் போடத் துடிக்கிறார்கள்.

தண்ணீர் கேட்டு தர்ணாப் பண்ணிய மக்கள் இப்போது தண்ணீருக்குள் கிடந்து தவிப்பாய் தவிக்கிறார்கள் இதற்குக் காரணம் என்ன? விடிவுதான் உண்டா?

இந்த தண்ணீர் சதுராட்டத்திற்கு முதல் காரணம் தெளிவான திட்டமிடல் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் உலகிலே கடவுளின் அருட்கரத்தில் உள்ள நாடு இது. இங்கு அதிகமாக மழைபெய்து வருடா வருடம் வெள்ளத்தால் மக்கள் வீழ்ந்ததும் கிடையாது. தண்ணீரே கிடைக்காமல் தவித்து இறந்ததும் கிடையாது. எப்போதும் மழைபெய்யும் சிரபுஞ்சியும் நம்மிடம் இல்லை. எப்போதுமே மழைபெய்யாத தார்பாலைவனமும் இல்லை. மிதமான மழையோடு கூடிய சுகமான வாழ்வு உள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடு மட்டும் தான். ஆகவே நமது அன்றாடத் தேவைக்கு அதிகமான மழையே தமிழகத்திற்குக் கிடைக்கிறது. அதனைப் பாதுகாக்கத் தெரியாமல் இந்தப் பரிதாபத்திற்கு ஆளாகிறோம்.

யானையும், தண்ணீரும் தன்னுடைய பாதையை எப்போதும் மாற்றிக் கொள்ளாது. இந்த இரண்டாலும் இப்போது நமக்கு அடிக்கடி துன்பம் வரக்காரணம். நாம் காட்டுமிராண்டிகள் ஆகிவிட்டோம். அவை நம் வாழ்க்கையில் குறுக்கிடவில்லை. நாம் தான் அவற்றின் குறுக்கே போய் நின்று கொண்டு அனைவரும் பாதையியெல்லாம் வீடுகளைக் கட்டிக் கொண்டு குய்யோ முறையே என்று கத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு அரசாங்கத்தைக் குறை சொல்கிற அரைவேக்காட்டுத்தனம் வேறு.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் மேற்கே மலைத் தொடர்கள் கிழக்கே கடல்கள் மலையின்மீது துளியாக விழுகின்ற மழை நீரானது ஒன்றாகத் திரண்டு நீர்வீழ்ச்சியாகத் தரையைத்தொட்டு நதியாக நடந்துவரும் வரும் வழியில் இருக்கின்ற ஏரிகளில் இளைப்பாரும் கண்மாயில் கால்பதிக்கும்.

குளங்களில் குடியேறும். வாய்க்காலில் வழிந்தோடும் குட்டைகளில் குடமுழுக்கு நடத்தும் கிணறுகளை நிரப்பிச் செல்லும் இறுதியாக எஞ்சியிருப்பதே கடலைச்சேரும். இவையனைத்தும் மழை இல்லாத நேரங்களில் மனிதனுக்குத் தேவைப்பட இயற்கையே நீரை சேமித்து வைக்கத் தொடங்கும் நெடும்பயணம்.

இந்த நதியின் பயணத்தைப் பாதியில் தடுத்தவன் மனிதன் அதுபோகும் பாதையெல்லாம் இவன் புதுவீடு கட்டினான் தண்ணீர் புகுந்த வீடாகிவிட்டது. ஏரி, கண்மாண்களைத் தூர்வாரி நீர் சேமிப்பதை விட்டு விட்டு கிடைக்கும் இடத்திலெல்லாம் வீடு கட்டினால் நீ வாழலாம்! நீர் வாழ என்ன செய்யும் சொந்த இடத்தை அபகரித்தவனை நாம் அப்புறப்படுத்துவோம் அல்லவா? அதேபோல தனது இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள தண்ணீர் படையெடுத்து வருகிறது குளிரில் நடுங்கிப்போவீர்கள்தானே!

நீங்கள் செய்த பாவம் அது! தன் பாதையை விட்டு விலகிச் செல்வதனால் ஏகப்பட்ட விளைநிலங்களையும் தண்ணீர் அழித்துவிட்டுச் செல்கிறது. உங்களால் அது பாவம் செய்கிறது. ஆற்றங்கரையில் வீடுகட்டினால் அது நாகரீகம். ஆற்றுக்குள் வீடுகட்டினால் அது அநாகரீகம். பொறுப்புணர்ந்து செயல்படுங்கள். அதிக ஆசைகளால்தான் ஆறு குளத்திற்குள் அகப்பட்டு முழிக்கிறோம். ஒரு பாட்டு உண்டு “அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் ஆதாயம் ஒன்றுமில்லை அடுத்தவர் வழியை அடைந்து நின்றால் அதனால் வரும் தொல்லை” எனவே நதிக்கு வழிவிடுங்கள். அது நமக்கு நன்மை செய்யவே ஏரியாக, குளமாக, கண்மாயாக, கால்வாயாக, வாய்க்காலாக வந்துவிட்டுப் போகிறது. அதனை மீறி அங்கு வாழ நினைத்தால் தானே விரும்பி தற்கொலை செய்வதாகும்.

“விதியை வெல்லலாம்
நதியை வெல்ல முடியாது”

ARCHIVES