19
Dec
2012
கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவது அல்ல,
நெருப்பைப் பற்ற வைப்பது.
-வில்லியம் பட்லர்ஏட்ஸ்
கல்வி என்ற ஒன்று மட்டும் இல்லாது போனால் ஆதிக்காலம் மட்டுமல்ல மீதிக்காலமும் சுன்யமாக்கப்பட்டிருக்கும் கல்வி இல்லாது போயிருந்தால் மனிதன் இன்றும் காட்டுமிராண்டியாகத்தான் இருந்திருப்பான். ஆனால் கல்வி வந்த பிறகு இதயம் தேடலைத் தொடங்கியது. தேடல் தொடங்குபவர்களை மாணவர்களாகவும், திசைகாட்டியாக ஆசிரியர்களையும் கொண்ட இந்தப் புனிதப்பயணத்தில் கல்வி என்பது மாணவரது மூளையில் ஏதோ செய்திகளைச் சேகரித்து தருகின்ற நிகழ்வு அல்ல. ஒரு சிற்பி ஒரு கல்லில் சிலை கண்டு பிடிப்பதுபோல, இன்றைய மாணவர்களிடம் உள்ள தேவையற்றதை நீக்கி தெளிவான பாதை காட்டுவதே கல்வி ஆகும். அக்கல்வியை இன்றையக் காலக்கட்டத்தில் கற்பிப்பதில் அதுவும் தமிழ்க் கற்பிப்பதில் இன்றைய சவால்களும், தீர்வுகளும் பற்றி இக்கட்டுரையில் எனது பகிர்வுகளை பதிவு செய்கிறேன்.
1.ஆங்கில மோகம்.
இப்போது ஆங்கிலக்கல்வியின் மோகம் என்பது மாணவர்களிடத்தில் இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்களைப் பிடித்து பேயாட்டம் ஆட்டுகிறது. பிறருக்கு நாம் குறைந்தவர்களா? என்று தன்னை நிருபித்துக்கொள்ள கூலிவேலை செய்கிறவர்கள் கூட, ஆங்கிலம் கற்றுத் தரும் பள்ளியில் தாங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். ஒரு மொழி கற்க, கற்றல் மட்டும் போதுமானதல்ல, காட்சிகளும், சுழ்நிலைகளும் மிக, மிக அவசியம். கிராமங்களில் எத்தனை வீடுகளில் இத்தகைய சுழ்நிலை நிலவுகிறது? கேட்டுப்பாருங்கள் இதனால் ஒரு மாணவன் அடிப்படை (Basic) அறிவைத் தமிழி்ல் கற்க முடியாமலும் ஆங்கிலத்திலும் சரியான புலமை பெற முடியாமலும் இரண்டும் கெட்டான் சுழ்நிலையில் 10 ஆம் வகுப்புத் தேறி மேல்நிலைக்கு வருகிறான். அங்குள்ள பாடத்திட்டத்தில் பாடங்களைப் பயிற்றுவிக்கும்போது வரிகளில் அல்ல ஒவ்வொரு வார்த்தையிலும் கூட எண்ணற்ற பிழைகளோடு எழுதுகிறான், இதனால் துணையெழுத்து (ர) குறில் நெடில் (ெ,ே) மயங்கொலிப் பிழைகள் (ல, ழ, ள, ர, ற, ங, ண, ன, ந) என்ற தவறுகளில் இருந்து மாணவர்களை மீட்டுடெடுப்பது மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. கட்டுரைவினாக்களில் மதிப்பெண்களின் அளவுகளைவிட பிழைகளின் எண்ணிக்கை அதிகமாகி மதிப்பெண்கள்கள் குறைந்து மாணவர்கள் மனமொடிந்து போகிற அளவுக்கு இன்று தமிழ் பாடம் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
தீர்வுகள் :
ஒவ்வொரு மாணவனும் கண்டிப்பாக தமிழி்ல் அடிப்படை இலக்கணங்களை முறைப்படி இளம் வயதிலே கற்றுத் தெளியவேண்டும். அதற்கு விடிவெள்ளியாக சமச்சீர்கல்வி வந்துள்ளது. அதனைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்குத் தரவேண்டும். நாம் வாழும் தமிழ் சமூகத்தில் நம்முடைய பேச்சில் எழுத்தில் பிழை ஏற்படும்போது நமது தரம் குறையும் எனவே தமிழ் மாணவர்களைப் பிழையின்று பேசவும், எழுதவும், பயிற்சியை கண்டிப்பாக கட்டாயமாக்குகிறோம்.
பட்டறிவு பெறமுடியாத கற்பனைகள்
தமிழ் கற்றலில் இரண்டாவது சவால் நடைமுறையில் ஏற்க முடியாத கற்பனைகள். பொழுதுபோக்குவேறு, கற்றல் வேறு, பொழுது போக்கில் எந்தக்கற்பனைகளையும் ரசிக்கிறவர்கள், கற்றலில்் ஒருவரைமுறை வைத்திருக்கிறார்கள். அறிவியலில் ஆய்வின் மூலமாகத் தேடலைத் தொடர்கிற மாணவர்களிடத்தில் ஏற்புடைமையில்லாத கற்பனையை கற்பிக்கும் போது அவர்களின் ஈடுபாடு குறைவு படுகிறது. கண்ணகி மதுரையை எரித்தது, அனுமன் மலையைத் தூக்கி வருவது, சிவபெருமான் தமிழ் அவைக்கு வருவது, போன்ற பல்வேறு இன்றையக் காலக்கட்டத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகும் கற்பனைகளைக் கற்கும்போது மாணவர்கள் ஈடுபாடு குறைகிறது. கணிணி உலகில் வாழும் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. இவற்றில் எழும் கேள்விகளுக்கு பதிலோ, தீர்வோ கொடுக்க முடியாது?
தீர்வுகள் :
இன்றைய உலகில் நவீன இலக்கியம் என்றால, கவிதை, திரைப்படம், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும் பழைய காப்பியங்களிலும், இலக்கியங்களிலுமிருந்துதான் எடுத்து நவீனப்படுத்தப் பட்டு வெளிவருகிறது. இன்றைய நாட்களில் மாணவர்களை மாய வலைக்குள் வைத்திருக்கிற திரைத்துறை நமது இலக்கியங்களின் இன்னொரு பரிணாம வளர்ச்சிதான் நமது இலக்கியத்தையும் அதற்குத்தரும் எடுத்துக்காட்டுகளையும் அவர்கள் விரும்பும் தளத்திலிருந்து நவீன முறையில் எடுத்துச்சொல்லி ஆர்வம் ஊட்டுதல் அவர்களுக்கு ஈடுபாட்டினை ஏற்படுத்தி கற்றல் திறனை வளர்க்க உதவும். அதாவது பாடங்கள் பழைய இலக்கியமாய் இருந்தாலும் எடுத்துக்காட்டுகள் புதுமையாக மலரட்டும் அது மாணவர்கள் கவனத்தை முழுமையாக ஈர்க்கட்டும்.
நடைமுறை பழக்கத்திலில்லாத வார்த்தைகள்
பாரதியார் பாடல்களுக்கு பிறகு உள்ள பாடல்கள் அனைத்தும் மறுமலர்ச்சிப் பாடல்கள் என அழைக்கப்படுகிறது அவற்றில் வருகின்ற வார்த்தைகள் அனைத்தும் இன்றையப் பேச்சு வழக்கிலும் இருக்கிறது. அதற்கு முன் சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம் காப்பியங்கள் இவையனைத்திற்கும் பாடல்களில் இருந்து நேரிடையாகப் பொருள் கொள்ள முடியாதவாறு விளக்க உரை நூல்களை தேடவேண்டியுள்ளது.
பிற மொழிகளைக் கற்க எவ்வாறு ஒரு டிக்ஸ்னரி (Dictionary) தேவைப் படுகிறதோ! அதுபோல தமிழுக்கும் ஒரு அகராதி தேவைப்படுகிறது. ஏன் உலக மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளுக்குக் கூட தெளிவுரை இல்லாமல் எந்தச் சாதாரண மாணவரும் பொருள் கொள்ள முடியாது. (எ.கா)
பொள்னென ஆங்கே புறம்வேரார்: காலம் பார்த் துள்வேர்ப்ப ரொள்ளி யவர் இறவுப் புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் சுறவுக் கோட் டன்ன முன்னிலைத் தாழை பெருங்களிற்று மருப்பின் அன்ன வரும்புமுதிரபு நன்மா நுழையின் வேறுபடத் தோன்றி என்ற பாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வான்? எல்லாம் ஏதோ பிற மொழிகளைக் கற்பதுபோல அகராதியின் துணையோடோ, அல்லது விளக்கவுரையோடோ கற்பதால் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வமின்மை ஏற்படுகிறது.
இலக்கியப்பாடல்கள் அனைத்தையும் இன்று நடைமுறையில் இருக்கிற இராகத்தில் எப்போதும் வாயில் முணுமுணுத்துக் கொண்டு இருக்கச் செய்ய வேண்டும். பல்வேறு தமிழிசைப் பாடல்களை காலை நேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் மாணவர்கள் மனதில் பதியும்படி பள்ளியில் ஒலிபரப்பச் செய்யலாம். இன்றைய திரை இசைப்பாடல்களில் பயன்படுத்தப்பட்ட பழைய தமிழ் வார்த்தைகளை சுட்டிக்காட்டிலாம். ஓவ்வொரு இலக்கியமும் ஒரு நிகழ்வுகளே எனவே அவற்றை காட்சியாக, நாடகமாக, குறுந்தகடு மூலமாக ஊடகங்களின் உதவியோடு மாணவர்களுக்கு ஒரு ஆர்வத்தையும், மனதில் பதிவுகளையும் செய்யவேண்டும்.
உயர்கல்விக்கு ஏற்காத மதிப்பெண்கள் :
தமிழ் பாடத்தை பொறுத்த மட்டில், மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி போதிய ஆதரவோ, ஈடுபாடோ, கொள்வதில்லை காரணம் உயர்கல்வியாகிய கல்லூரிக்குச் செல்லும்போது கணிதம், அறிவியல் பாட மதிப்பெண்களின் அளவுகளை மட்டுமே கணக்கில் கொண்டு இடம் ஒதுக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அப்பாடத்தில் தேர்ச்சியடைந்தால் போதும் என்றே நிறைவடைந்து விடுகிறார்கள். இதனால் 1. அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. 2. கடினப் பாடங்களை புறக்கணிக்கிறார்கள். 3. குறிப்பிட்ட தேர்ச்சிக்குப் போதுமான பாடங்களை மட்டுமே படிக்கிறார்கள். 4. முழுமையாக ஆர்வம் காட்டாமல் தேர்வுக்கு முந்தைய நாட்கள் மட்டுமே படிக்கிறார்கள். 5. பாடங்களை முழுமையாகப் படிக்காமல் மேலெழுந்தவாரியாகப் படித்து விட்டு சொந்தக்கதைகளை அதிகமாக எழுதிவருகிறார்கள். இதனால் எந்தப்பாடத்திலும் ஒரு நிறைவு இல்லாமல் அடிப்படை அறிவினைக் கூட அவர்களால் அடைய முடிவதி்ல்லை. இவற்றிலிருந்து மாணவர்கள் மீட்டு எடுப்பதே இன்றையப் பெரிய சவாலாகும்.
தீர்வுகள் :
ஒவ்வொரு கல்வித் தேர்ச்சியிலும் அதிக மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பு உண்டு. ஆகவே மதிப்பெண்கள் கூடுவதற்கு தமிழ்பாடம் ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்ற விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் உருவாக்கவேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீடும், சலுகை மதிப்பெண்களும் உண்டு, அவற்றினைப் பெறவும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற தமி்ழ் பாடமே ஒரு அச்சாணி என்பதனையும் மாணவர்கள் மனதில் பதிக்க வேண்டும்.
தமிழ் பாடத்திற்குறிய சிறப்புகளையும் அவற்றின் சிறப்புகளால் பெறப்படும் பயன்களையும், பெற்றவர்களையும், மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும், பிரபல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், பாடலாசிரியர் பத்திரிக்கை நிருபர்கள், எனப் பல்வேறு பிரபலங்களை அழைத்துவந்தோ அல்லது அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தந்தோ மாணவர்களுக்கு தமிழ்பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி தமிழறிவில் உயர வழி காட்டவேண்டும்.
நிறைவாக :
மகிழ்ச்சியுடன் செய்யும் வேலை வெறும் பணியல்ல ஒரு அழகான
அனுபவம் அத்தகைய அனுபவத்தைப்பெற மாணவர்களை அழைத்துச்செல்வோம் அவர்கள் படைப்புத் திறனில் சிறகு விரித்துப்பறக்க இன்னொரு வானத்தை அமைத்துத்தருவோம். புதிய வானம் திறக்கட்டும் தமிழின் புதிய முரசு ஒலிக்கட்டும் நாளைய உலகம் நம் கையில்வர நல்ல தமிழை வழங்குவோம்! முழங்குவோம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!