01

Mar

2014

தள்ளிப்போடும் கலையைத் தவிர்ப்பது எப்படி

இன்றைக்கு செய்யவேண்டிய விஷயத்தை நாளைக்கு சுலபமாக தள்ளிப்போடுகிற பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுவது எப்படி?

 தள்ளிப்போடும் கலையைத் தவிர்ப்பது எப்படி? என்பதைச் சொல் வதற்காகவே எழுதப்பட்ட புத்தகம் ‘டோண்ட் பை திஸ் புக் நௌ’.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஜான் பெர்ரி, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். தள்ளிப்போடும் கலை பற்றி இவர் சொன்ன கருத்துகளுக்காக இவருக்கு நோபல் பரிசே கிடைத்திருக்கிறது.

”ஆறறிவுடைய மனிதர்களாகிய நாம், நமக்கு நன்மை தரும் செயல் எது என்று தெளிவாக தெரிந்துகொண்ட பின்பும், அதைச் செய்யாமல் கேடு விளைவிக்கும் வேறு பல விஷயங்களை முழுஈடுபாட்டுடன் செய்வதிலேயே மகிழ்ச்சிகொள்கிறோம். (கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போவதும், ஆபீஸ் வேலையைச் செய்யாமல் ஃபேஸ்புக்கில் மொக்கை ஸ்டேட்டஸ் போடுவது!) இந்தப் புரியாத புதிரை எப்படி விளக்குவது? நாம் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யாமலே இருக்கும் செயல்களே பெரும்பான்மையான நேரங்களில் நம்முடைய டுடூலிஸ்ட் முழுக்க ஆக்கிரமிக்கிறது’ என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

இதற்கு அவருடைய வாழ்க்கையில் நடந்த நிஜமான நிகழ்ச்சி ஒன்றை உதாரணமாகச் சொல்கிறார். அவருடைய லிஸ்ட்டில் மிக மிக அவசரம் என்று இருப்பது ஒரு கட்டுரையாம். அந்தக் கட்டுரையை எழுதி முடிக்கவேண்டும் என 11 மாதங்களாக லிஸ்ட்டில் எழுதி வைத்திருக்கிறாராம். இந்த 11 மாதங்களில் கட்டுரையை மட்டும் முடிக்காமல் அதைவிட அதிமுக்கியமான லிஸ்ட்டில் இல்லாத பல விஷயங்களை அவர் செய்து முடித்துவிட்டாராம். பிற்பாடு இந்தக் கட்டுரையை எழுதுவதைவிட முக்கியமான விஷயங்கள் வந்த காலத்தில் அதை செய்யாமல் கட்டுரையை எழுதி அனுப்பிவிட்டேன். பார்த்தீர்களா என் குசும்பை’ என்று தன்னைத்தானே கேலி செய்துகொள்கிறார் ஆசிரியர்.

ஒருவர் ஒரு வேலையைத் தொடர்ந்து தள்ளிபோடுவதற்கு காரணம், தான் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட்-ஆக இருக்க நினைப்பதுதான் என்கிறார் ஆசிரியர். ‘ஒரு விஷயத்தை நாம் செய்ய நினைக்கும்போதே இதை உலகத்தில் இல்லாததைப்போலச் செய்யவேண்டும் என்ற கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு பெரிய பில்ட்-அப்  செய்கிறோம். அதன்பிறகு நேரமில்லை, நேரமில்லை என்று ஒதுக்கிவைக்கிறோம். இறுதியில் கழுத்தைப் பிடித்து முடிக்கவேண்டிய காலம் வரும்போது, அந்த வேலையை எந்த அளவுக்கு சரியாகச் செய்ய வேண்டுமோ, அந்த அளவுக்கு செய்து முடிக்கிறோம். ஆனால், ஆரம்பத்தில் ஓடவிட்ட கற்பனைக் குதிரையில் நடந்த பில்ட்-அப்தான் வேலையை முடிப்பதற்கு காலதாமதப்படுத்தியது.  ஆரம்பத்திலேயே எந்த அளவுக்கு தரத்துடன் அந்த வேலையை முடிக்கவேண்டுமோ, அந்த அளவுக்கு தரத்துடன் முடிக்க நினைத்திருந்தால் வேலையாவது காலகாலத்தில் முடிந்திருக்கும்’ என்கிறார் ஆசிரியர்.

இதற்கும் அவர் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறார். ‘ஒரு ரிசர்ச் பேப்பரை சூப்பர் க்வாலிட்டியில் மதிப்பீடு செய்ய வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் நல்லது. அந்த கம்யூட்டர் பல்கலைக்கழகத்தின் நெட்வொர்க்குடன் சேர்ந்திருந்தால் இரவு, பகலாக வேலை பார்த்து சூப்பர் ரிப்போர்ட் தரலாம்’ என்று நினைத்தாராம் ஆசிரியர். கம்ப்யூட்டர் இணைப்பை வாங்கியபிறகு, வேறு சில வேலைகள் வந்துவிடவே, அந்த மதிப்பீட்டு வேலையே மொத்தமாக மறந்துவிடுகிறார். இறுதியில் மதிப்பீடு செய்ய அனுப்பியவர்கள் துரத்திக் கேட்க ஆரம்பித்தவுடன் அவசர அவசரமாக என்ன தேவையோ, அதை எழுதி அனுப்பிவிடுகிறார். இதை முதலிலேயே செய்திருந்தால் நன்றாயிருக்குமே! பெர்ஃபெக்ட்டாக செய்கிறேன் என்று பேரைக் கெடுத்ததுதான் மிச்சம்’ என்கிறார் ஆசிரியர். ‘ஆனால், இதிலும் ஒரு நன்மையுண்டு. யாராலும் லிங்க் பண்ண முடியாத பல்கலைக்கழக நெட்வொர்க்கை என் வீட்டில் லிங்க் செய்துவிட்டேன்’ என்று பெருமைப்படுகிறார் ஆசிரியர்.

அடுத்தபடியாக, நாம் செய்தாக வேண்டிய வேலை பட்டியலை (டுடூலிஸ்ட்) கேலி செய்கிறார். ‘இன்றைக்கு டுடூலிஸ்ட்டைப் போடாதவர்களே இல்லை. கொஞ்சம் விசாரித்துப் பார்த்தால், அவர்கள் லிஸ்ட்டில் முன்னால் இருக்கும் விஷயங்கள் பல அப்படியே கேரிஓவர் ஆகிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு இந்த வேலையைச் செய்தாகவேண்டும் என்று நினைத்து வருடக்கணக்கில் தள்ளிப்போட்டவர்கள் எல்லாம் எனக்குத் தெரியும். ஒரு வேலையை என்றைக்குமே செய்யப்போவதில்லை. எதற்கு அதை டுடூலிஸ்ட்டில் எழுத வேண்டும்?’ என்று நையாண்டி செய்கிற ஆசிரியர், ‘டுடூலிஸ்ட் எத்தனை சிம்பிளாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் சாதனையும் வளரும்’ என்கின்றார். உதாரணத்துக்கு அவர் கொடுத்துள்ள டுடூலிஸ்ட்டைப் பாருங்கள்.

1. அலாரத்தை அணைப்பேன்.
2. படுக்கையைவிட்டு எழுவேன்
3. பாத்ரூம் போவேன்
4. மீண்டும் படுக்கைக்குப் போகமாட்டேன்.
5. சமயலறைக்குச் செல்வேன்
6. காபி போட்டுக் குடிப்பேன்.

‘இந்த லிஸ்ட்டைப் போட்டு காலையில் எழுங்கள். எழுந்த ஒரு மணி நேரத்தில் ஆறு வேலைகளை முடித்திருப்பீர்கள்’ என்கிறார்.

பேப்பர்களை ஃபைல் செய்து அடுக்குபவர்களை ‘வெர்ட்டிக்கல் ஆர்கனைசர்ஸ்’ என்று சொல்லும் ஆசிரியர், தன்னை ‘ஹரிஜாண்டல் ஆர்கனைசர்’ என்று சொல்லிக்கொள்கின்றார். டேபிள் முழுவதும் பேப்பர் இருக்கும். ஆனால், அர்ஜென்டான விஷயம் முடியாமல் கிடந்தது என்றால், மீண்டும் நினைவூட்டல் லெட்டர் வரும் என்று நினைத்துக்கொள்வேன். நினைவூட்டல் லெட்டர் வந்ததும் டேபிளில் மலைபோல் இருக்கும் பேப்பர்களில் ஒரிஜினல் கடிதத்தைத் தேடிக் கண்டுபிடித்து வேலையை முடித்துவிடுவேன். இந்தக் காலதாமதத்துக்கு இடையே நான் வேறு முக்கிய வேலையை முடித்திருப்பேன்’ என்று சொல்லும் ஆசிரியர், ‘தள்ளிப்போடும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு டுடூலிஸ்ட் தேவையில்லை. நாளை செய்யாவிட்டால் மறைந்துவிடப்போகும் (எப்போதும் செய்ய முடியாது) வேலையின் லிஸ்ட்தான் தேவை’ என்கிறார்.

கம்ப்யூட்டர்களும் தள்ளிப்போடுபவர்களும் என்று தனி ஓர் அத்தியாயம் எழுதியுள்ள ஆசிரியர், ‘பலத்த காமெடியான விஷயங்களைச் சொல்லியுள்ளார். தள்ளிப்போடும் கலைக்கு கூகுளின் பங்களிப்பு குறித்து விலாவாரியாகப் பேசியுள்ள அவர், கம்ப்யூட்டரில் உட்கார்ந்துவிட்டால் எப்படி அவருடைய நேரம் உறிஞ்சப்படுகிறது என்று தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

 தள்ளிப்போடுபவர்களும் தள்ளிப்போடாதவர்களும் சேர்ந்து வேலை செய்தால் என்னென்ன பிரதிபலன்கள் உருவாகும் என்பதையும் சுவையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். ‘கட்டமைப்புடன் கூடிய தள்ளிப்போடும் குணம் (ஸ்ட்ரக்சர்டு புரோகிரசினேட்டர்) உள்ளவர்களுக்கு சில திடீர் சலுகைகள் கிடைக்கும். தள்ளிப்போட்ட காலகட்டத்தில் பல வேலைகள் திடீரென தேவையில்லாமல் போய்விடலாம்! இதைவிட சோம்பேறிகளுக்கு என்ன சலுகை வேண்டும்!

இன்றைக்கு செய்யவேண்டிய வேலையை  நாளைக்கு ஒத்திவைக்காதீர்கள் என்பது பழமொழி.  தள்ளிப்போடுபவர்களுக்கோ நாளைக்கு செய்யத் தேவையில்லாமல் போய்விடக் கூடிய வேலையைத் தப்பித்தவறிக்கூட இன்றைக்கு செய்துவிடக்கூடாது என்பது புதுமொழி என்கிறார் ஆசிரியர்.

இந்தத் தள்ளிப்போடும் குணம் எதனால்  நமக்கு வருகிறது? நாம் யாருடைய கன்ட்ரோலிலும் இருக்க விரும்புவதில்லை. இவன் என்ன சொல்றது, நான் என்ன செய்றது என்ற அடிமன எண்ணம்தான் இதற்கெல்லாம் காரணம். ஆனாலும், புத்தகத்தில் சொல்லியுள்ள தள்ளிப்போடும் கட்டமைப்பை ஃபாலோ செய்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையிலும் பல்வேறு சாதனைகளை என்னைப் போல் செய்ய முடியும் என்கிறார் ஆசிரியர்.

தள்ளிப்போடும் குணம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

ARCHIVES