10
Feb
2018
திரும்ப வாங்க மீண்டும் சந்தோசமாக இருப்போம். எங்கே வரவேண்டும்? யார் அழைக்கிறார்? மனிதன் எங்கே தன்னை மறந்து, தன்னை இழந்து, தானே வருந்தி தானே நிலைகுலைந்து போனானோ! மீண்டும் நாம் இழந்த சொர்க்கத்தை மீட்டெடுக்க எங்கே அன்பை இழந்து உறவை முறித்தோமோ! அங்கே மீண்டும் திரும்ப வந்து ஒருவர் ஒருவரின் உறவைப் புதுப்பித்துகொள்ள திரும்ப வருவோம், திரும்பி வருவோம், ஏதேன் தோட்டத்திற்கு….
ஏதேன் தோட்டம் என்பது உறவின் மடியில், இறைவன் பிடியில் மனிதன் இன்புற்று வாழ்ந்திருந்த இடம், மனிதன் இதயம் பரந்து விரிந்தது அவன் தன்னை மட்டுமல்ல மற்ற உயிர்களையும் மனதார நேசித்தான். மற்ற உயிர்களும் அவனை மனம் குளிரச்செய்து கொண்டிருந்தது, செடிகளை நேசிக்க அவை பூவாய் புன்னகைத்தது, மரங்களை நேசிக்க கனிகளை அவன் கரங்களில் தந்தது. பறவைகளை நேசிக்க அவனுக்கு படைப்புகளை உருவாக்கித்தந்தது. விலங்குகளை நேசிக்க வேண்டிய உதவிகளையும் வேண்டும்போது தன்னையும் தந்தது. இப்படி மகிழ்வுற்று ஏதேன் சொர்க்கத்தில் இன்புற்றிருந்தவன் எப்போது இதனை இழந்தான்? எங்கே தன்னைத் தொலைத்தான்? என்று யோசித்துப்பார்த்தால் இறைவன் மனித உருவில் இவனோடு வாழும்போது தன்னை ஒத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களை வெல்ல நினைத்தான். காயின் தனது சகோதரனைக் கொல்ல நினைத்தான் மனிதன் தன் மாண்பினை இழந்தான்.
மனிதனுக்குள் எப்போது போட்டி, பொறாமை, ஒப்பீடு, பேராசை, கர்வம், அகங்காரம், அடக்குமுறை, பழிவாங்கல் போன்ற பேய்கள் பிடிக்கிறதோ அப்போது அகோரமாய் ஆடுகிறோம், அசிங்கமாய் நடமாடுகிறறோம். இதனை விவிலியத்தில் சாத்தான் அவர்களைக் கெடுத்தது என்பார்கள். இல்லை அவனே சாத்தானாகி தன்னைக் கெடுத்துக்கொண்டான் மேலே கூறப்பட்ட அத்தனையும் சாத்தான்கள்தான் அதற்கு உருவம் கிடையாது. இப்போது ஏதோ ஒரு சாத்தான் உருவாகிவிட்டால் இயேசுவாய் நாம் இருந்து அதனை அடக்கிவிடலாம். ஆனால் விவிலியத்தில் கூறப்பட்டதுபோல அங்கிருந்து வெளியேறி இன்னும் பல சாத்தான்களை அழைத்துக்கொண்டு வந்தது என்பது போல இன்னும் பல சாத்தான்களை உருவாக்கப் பேசிக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் சுடுகாட்டில் அலையவில்லை. நாட்டை சுடுகாடாக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப்போய்களுக்கு உருவம் உண்டு. ஒன்றை மட்டும் புரிந்துகொள்வோம், ஒரு பெண்ணின் உடம்பைக்கெடுத்து அடையும் பாவத்தைவிட ஆயிரம்மடங்கு பெரியது ஒருவரின் மனதை கெடுத்து உறவை பாழ்படுத்தி பூமியை களங்கப்படுத்துபவர்களுக்கு,
ஆகவே எதனைப் பெறப்போகிறோம்? எதனைக் கொண்டு போகப் போகிறோம்? பல நேரங்களில் நமது வேகத்தில் நமது வெற்றியே நமது மகிழ்ச்சியை அழித்து இருக்கிறது என்பது தெரிந்ததுதானே! ஆகவே நம் இதயத்தைப் புதுப்பிப்போம். அதில் எல்லோரையும் வைத்துக்காப்போம். ஏதோ ஒரு ஆசை, ஒரு போட்டி, எதிரிலிருப்பது எதிரியா? நண்பனா? என்று கூட நாம் எண்ணாமல் வீழ்த்தி விட்டோம் அதனால் நாம் அடைந்தது வெற்றியா? ஆனால் இழந்தது மகிழ்ச்சியையும் உறவையும் அல்லவா? இந்த உலகில் பல வெற்றிகள் மகி;ழ்ச்சியைத் தந்ததைவிட துக்கத்தையும், சோகத்தையுமே அதிகமாய் அள்ளித்தெளித்தன.
அசோகனைப் பாருங்கள் அவன் அடைந்த வெற்றியே அவனை அசிங்கப்படுத்தியது அவமானப்படுத்தியது ஆகவே அன்பினால் ஒருவர் ஒருவரை வெல்வோம். மானிடவாழ்வு என்பது அனைத்தும் கலந்ததுதான் சில நேரங்களில் ஏதோ காரணத்தால் நமக்குள் பிரிவு வரலாம். உறவு விரிசல்கள் வரலாம், புரிந்து கொள்ளாமல் பிளவுபட்டுக்கிடக்கலாம். ஆனால் அது தற்காலிகமானதாக இருக்கட்டும். இதில் வரட்டுக் கர்வத்தில் வாழ்ந்துகொண்டு இருக்காமல் இரங்கிவந்து உறவைப் புதுப்பிப்போம். இதுவே நமது தவக்காலச்சிந்தனையாக இருக்கட்டும்.
இயேசுவைப்பாருங்கள் இறுதிக்காலத்தில் அவரது சீடர்கள் அவரைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். இதில் இருவரை எண்ணிப்பாருங்கள். ஒருவர் யூதாஸ் மற்றொருவர் இராயப்பர். யூதாஸ் காட்டிக் கொடுத்தார், இராயப்பர் எனக்கு அவரைத் தெரியவே தெரியாது என்றார். இருவர் செய்த தவறுகளும் ஒன்றுதான் ஆனால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் இயேசுவின் வழித்தோன்றலானார். காரணம் ஒருவர் தன் தவறில் மூழ்கி தன்னை அழித்தார் மற்றவர் திரும்பி வந்து இழந்த நட்பை தம் அன்பல் ஈடுசெய்தார். ஆகவே தவறுகளும் பிரிவுகளும் இயற்கைதான். பின்பு ஏன் கர்வம், ஆணவம், தாழ்வு மனப்பான்மையால் தயங்கி நிற்கிறோம். மீண்டும் வருவோம், மீண்டும் வருவோம் வீழ்த்துவது நண்பனாய் இருந்தால் வேதனை இருக்காது வெற்றியடைந்தது சகோதரனாய் இருந்தால் தோல்வியடைந்தது நாம் அவருக்கு துணையாயிருந்தது. நாம் திரும்பி வருவோம், சிலவற்றை திருத்திக்கொண்டு வருவோம் இணைவோம், அணைப்போம், நாம் இருக்குமிடம் ஏதேன் தோட்டமாகட்டும். அங்கே இறைவன் நடமாடட்டும் இறைவனாக நாமே நடமாடுவோம்.