09
Oct
2021
நான் நினைச்சே பார்க்கல! அவன் அப்படிச் செய்வானென்று.. கனவில் கூட நினைக்கவில்லை அவள் இப்படிச் செய்வாளென்று. இப்போ அந்த நிகழ்ச்சியை நினைத்தாலும் என் ஈரக்குலையே நடுங்கும்! என்ற வார்த்தை எப்போதாவது நம் வாழ்விலும் வந்து விழுந்த வார்த்தைத் துளிகளாக இருக்கும்;. நம்பிக்கைத் துரோகத்தையும், நன்றி கெட்டதனத்தையும் வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்திக்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். ஏனென்றால் இன்று நம்பிக்கைத் துரோகமும் நன்றி கெட்டதனமும் தேசியப் பொழுது போக்காக மாறிவிட்டது.
வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற உலகத்தில் எப்படி முன்னேற வேண்டும்? என்று சிந்திப்பதைவிட எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தபிறகு யாரைக் கவிழ்த்தாவது அல்லது காட்டிக்கொடுத்தாவது அல்லது இல்லாதது பொல்லாதது கூறியாவது முன்னேறத் துடிக்கிற உலகம் நம் முன்னால் நடமாடிக் கொண்டிருக்கிறது. இங்கு எல்லோரும் நடிகர்களே. இந்த நடிப்பை நம்பினால் நீங்கள் முட்டாள்களே.
பழங்காலங்களில் போரில் முதுகில் புண்பட்டால் இழுக்கு என்றார்கள். காரணம் எதிரி மார்பில் வேலைப் பாய்ச்சுவான். துரோகி பின்னால் இருந்து முதுகில் குத்திவிடுவான். இத்தகையப் பச்சோந்தி நம் உடன் இருப்பதை அறியாத மன்னனா? இவன் என்று ஏளனமாகப் பேசுவதைத்தான் இழுக்கு எனக் கூறினார்கள். துரோகங்களை யார் அதிகமாகச் சந்தித்திருப்பார்கள் எனக் கேட்டுப் பாருங்கள். அதிகமாக நம்பிக்கை வைத்தவர்களும் அதிக நண்பர்களைக் கொண்டவர்களும் அடிக்கடிச் சந்திக்கின்ற விபத்து இந்த நம்பிக்கைத் துரோகம்.
நாம் அடிக்கடிப் பேசுகின்ற வீரவசனம்
காதலில் எத்தனை துரோகங்கள்! கணவன் மனைவிக்குள் எத்தனை துரோகங்கள்.! அன்பில் எத்தனை துரோகங்கள்!, ஆட்சியில் எத்தனை துரோகங்கள்! நட்பில் எத்தனை துரோகங்கள்! கற்பில் எத்தனை துரோகங்கள் உடன் இருப்பவர்களில் எத்தனை துரோகங்கள் கட்டபொம்மன் தொடங்கி இயேசுவரை இவர்களால் தானே வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். You too Brutus! என்ற வார்த்தை இன்றும் உலக அரங்கு முழுவதும் ஒலித்துக் கொண்டே தானே இருக்கிறது.
இதுதான் உலகம். இதற்காக நண்பர்களைச் சந்தேகப்பட்டு விடாதீர்கள். ஏதோ ஒரு முள் காலில் குத்திவிட்டால் இருக்கிற செடியை எல்லாமா எறித்து விட முடியும்? ஏதோ ஒரு இடத்தில் ஏமாந்து விட்டோம் என்றால்? இல்லை இல்லை நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்றால் அது அவர்கள் குற்றம் நாம் கடைசிவரை நம்புவோம். நம்பிக்கைக்குறிவர்களாக இருப்போம்.
நட்பிலும் கற்பிலும் சந்தேகப்படுகிறவன் கூட துரோகிதான். தன் மனைவியை, கணவனை சந்தேகப்படுகிறவன்கூட மன்னிக்க முடியாத துரோகிகள்தான். அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எப்படி மன்னிப்பது! மறப்பது! உடன் பயணிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும் கற்றுக்கொள்வோம்.
உரிமையோடு சிலரைக் கண்டித்திருப்போம். அதனை அரசியலாக்கி நம்மை அவமானப்படுத்துவார்கள். நம் தகுதியால் முன்னேறியிருப்போம். அதனை தடுத்துவிடத்துடிப்பார்கள். நல்ல நண்பர்களாய் இருப்போம். இல்லாதது பொல்லாதது சொல்லி எதிரியாக்கிவிடுவார்கள். உடன் தோழியைக் கூட தவறான நட்பு என்று தாறுமாறாகப் பேசி தற்கொலை வரை தள்ளிவிடுவார்கள். நாம் பேசாததை பேசியதாகவும், செய்யாததைச் செய்ததாகவும் சாட்சியோடு சத்தியம் செய்து நிருபிப்பார்கள். திகைத்து விடாதீர்கள். இவர்கள் மட்டும் இல்லையென்றால் நாம் எப்போதும் விழிப்புணர்வாக இருக்க முடியாது.
இதனை வாசிப்பவர்கள் எண்ணிப்பாருங்கள் இதனையெல்லாம் கடந்துதானே நீங்கள் வந்திருப்பீர்கள். உங்கள் நினைவை உசுப்பிவிட்டது போல் இருக்கும் கலக்கமடையாதீர்கள். சந்தோசமாகக் கடந்து செல்லுங்கள். நமக்கு தூரோகம் செய்தவர்கள் எல்லாம் நாம் அவர்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்தவர்கள் என்ன செய்தாலும் அவர்களை ஒன்று செய்யமாட்டோம் என்று அந்தளவு நம் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். துரோகம் செய்வது அவர்களது தொழில் இறுதிவரை இழிந்தோ பழித்தோ நாம் பேசமாட்டோம் சற்று மனம் வருத்தம் அடைவோம், கடந்து செல்வோம். இந்த எண்ணம் இருந்தால் நமக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருக்க ஆண்டவன் ஆயிரம் பேரை அனுப்புவான். இதனை நம்புவீர்கள்தானே. திடம் கொள்ளுங்கள் எல்லோர் முதுகிலும் ஏகப்பட்ட காயங்கள் இருக்கும். ஆனால் நம் இதயம் இன்னும் அன்பு செய்யத்துடிக்கும் குத்துவது யாராக இருந்தாலும் அன்பு செய்வது நாமாக இருப்போம் வாங்க நண்பர்களே அன்பு செய்வோம். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்.! நல்ல துணையாக நீங்களும் நானும் எந்நாளும் இருப்போம் நன்றியோடு!
“குத்துவது
நண்பனாக இருந்தால்
கத்தக்கூடாது”