26

May

2023

துள்ளித்திரிந்ததொரு காலம்…

துள்ளித் திரிந்ததொரு காலம் எனப் பாடல் கேட்டதும் பூங்காவைத் தேடி போய் கொண்டிருந்த குழந்தைகள் நின்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டது. துள்ளித் திரிந்த காலம் என்றால் என்ன? என்று கேட்டது. அதனை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? துள்ளித் திரிவது என்பது துடுக்குடன் அலைவது, இப்போது சொன்னால் அதனையும் கேள்வி கேட்பார்கள். ஏனென்றால் குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்த பின் உறவினர்கள் ஒவ்வொருவரும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருவார்கள். அது குழந்தையாய் இருக்கும் போதே பலரோடு கொஞ்சி மகிழ்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தவழ்கின்ற குழந்தை இருக்க ஆரம்பித்தவுடன் மாட்டு வண்டியிலோ, மிதி வண்டியிலோ வைத்து ஊரைச் சுற்றி வருவார்கள். குழந்தை தானே அமர்ந்து தன்னைக் காத்துக் கொள்ளப் பயிற்சி எடுக்கும்.

சில ஆண்டுகளில், காலம் மாறி விட்டது. காட்சிகளும் மாறி விட்டது. குழந்தைகளைக் கொஞ்சுவது குறைந்து விட்டது. தாயின் முந்தானையில் தலை வைத்துத் தூங்கிய குழந்தைகள். கொசு வலைக்குள் கொண்டு போடப்பட்டது. தாய்ப்பாலைத் தவிர்த்து புட்டிப்பாலில் பொழுதைக் கழிக்கிறார்கள். எழுந்து நின்றவுடன் L.K.G., U.K.G., எனப் பிள்ளைகளைக் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அந்த பிள்ளையோ பெற்றோரைப் பிரிந்து, சொந்த வீட்டைப் பிரிந்து பழகிய முகங்களைப் பிரிந்து, முற்றிலும் புதிய சூழலில் அது முறைத்துக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.

ஆனால் தொடக்கக் காலம் துள்ளித் திரிந்த காலம் குழந்தைகள் நடக்க, ஓட ஆரம்பித்தவுடன் தொட்டுப்பிடித்து விளையாட ஆரம்பிப்பார்கள். அப்போது ஒருவர் கண்களை மூடிக் கொள்ள மற்றவர்கள் ஓடி ஒழிந்து கொள்வார்கள். அவர்களைத் தேடி ஓடி, அவர்களைக் கண்டு பிடிக்க, அவர்கள் எடுக்கும் முயற்சி. இதுவே ஒரு குழந்தையின் ஆற்றலையும், அறிவையும் , ஆளுமையையும் வளர்த்தெடுக்கும்.

பின்பு ஊரைச்சுற்றியுள்ள குளம், குட்டைகளில் விழுந்து குளிப்பதும், ஒளிந்து நீந்துவதும், அந்த சந்தோசம் இப்போது அமைந்திருக்கிற எந்த நீச்சல் குளத்திலும் அவ்வாறு அமையாது. கொஞ்சம் வளர்ந்தால், மரம் ஏறுவதும், மரத்திற்கு மரம் தாவுவதும், ஆற்றல் உள்ளவனாய் ஆக்கப் பயன்படும். மாட்டு வண்டியின் முன்னால் இருக்கின்ற நோக்காலில் இருந்து ஏறி, இறங்கி விளையாடுவது எந்த இராட்டினத்திலும் கிடைக்காத சுகம்.

வயல்வெளியில் நடக்கின்ற சுகம், வரப்புகளில் வழுக்கி விழுகின்ற சுகம், வண்ணத்துப்பூச்சிகளைப் பிடிக்க அதன் பின்னாடியே சுற்றிய சொர்க்கம். காற்றாடியைப் பறக்க விட்டு அதனால் கால் கடுக்க ஓடியது, மரத்தின் நிழலில் துண்டை விரித்து மல்லாந்து படுத்து ஆகாயத்தை ரசித்தது, யாருக்கும் தெரியாமல் அடுத்தவர் தோட்டத்தில் மாங்காய் பறித்துத் தின்றது. கூடப் படிக்கும் பிள்ளையின் நேசம் பிடித்துப் போய் காதலிக்கிறேன் என்று சொல்லி I Love You எழுதிக் கொடுத்தது, நாங்கள் என்ன சளைத்தவர்களா? என ஒன்றுமில்லாத காரணத்திற்காக ஒரு குழுவோடு சண்டைக்குப் போனது. மேளக்காரங்களுக்கு முன்னால் ஆடிச் சென்றது. ரேடியோ செட் காரரிடம் பிடித்த பாடல்களைப் போடச் சொன்னது என எத்தனை வகைச் சொர்க்கத்தை அனுபவித்தோம். இதுதானே துள்ளித் திரிகின்ற காலம் இதனை எப்படி இக்காலக் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல முடியும்?

நான் பார்த்துப் பார்த்து ஏறிய பனைமரங்கள் எங்கே? அந்தப் பனைமரத்தின் பொந்துகளில் உறங்கிய கிளிக்குஞ்சுகள் எங்கே? ஊருக்கு அருகில் ஒட்டியிருந்த ஊருணிகள் எங்கே? அதில் நான் ஓடிக் குதித்த தடயங்கள் எங்கே? பேய் விரட்டும் சாமிகள் எங்கே? நாங்கள் பேசிக்கொண்டிருந்த ஆலமரங்கள் எங்கே? தடயங்கள் எல்லாம் அழிந்து போனது. காடுகளில் நாங்கள் மட்டைப் பந்து ஆடினோம். இப்போது அங்கே வீடுகள் ஆகி எங்களை விரட்டி விட்டார்கள். குளம் குட்டைகளில், மணல்களை அள்ளி குண்டும், குளியுமாகி பல உயிர்களைக் கொன்று விட்டார்கள். ஊருக்கு வெளியே ஒரு ஒத்தப் புளிய மரத்தில் பேய் ஒன்று ஆடும் என்று சொல்வார்கள். இப்போது எங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல ஒத்தப் புளிய மரமும் இல்லை. அங்கு இருந்த பேயும் இல்லை. இதையெல்லாம் கதையாகவும், பாட்டாகவும் சொல்ல தாத்தா, பாட்டிகளும் இல்லை. கூட்டுக் குடும்பமும் இல்லை. அவர்கள் கூடப் பேசுவதும் இல்லை.

உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வந்து விட்டோம் என்று சொன்னோமே! ஆனால் குழந்தைகளின் சுதந்திரத்தையெல்லாம் சுட்டுப் பொசுக்கி விட்டோமே! வீதிகளில் ஓடி வீடுகளை இரசித்த குழந்தைகள் இப்போது வீட்டைப் பூட்டி விட்டு சன்னல் வழியாகச் சனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணார்ந்து பார்த்து ஆகாயத்தை நோக்கியவர்கள் இப்போது குப்புறப் படுத்து அலைபேசியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வீதிக்கு வர முடியாமலும், விளையாட்டைத் தொடர முடியாமலும், குழந்தைகள் வீட்டுச் சிறைக்குள் வெந்து கொண்டிருக்கிறார்கள். எப்போதாவது குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறோம். விடுமுறை நாட்களில் இரண்டு, மூன்று நாட்கள் இன்பச்சுற்றுலா என்று அழைத்துச் செல்கிறோம். இது போதுமா? தேவையான பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டால் தேவலோகம் கிட்டி விடுமா? உடனிருக்க வேண்டாமா? உற்சாகம் தர வேண்டாமா? குழந்தைகளோடு சேர்ந்து குளத்தில் குளிக்க வேண்டாமா? மரம் ஏற வைத்து மனம் மகிழ வேண்டாமா? தூக்கிப் பிடித்து தோளில் அமர்ந்து வீதி வரும் தேர்களை எல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டாமா? மண்டியிட்டு மகனை ஏற்றி வைத்து யானை விளையாட்டு விளையாட வேண்டாமா? விழுந்த போது எழச் சொல்லி அந்தத் தரைக்குத் தண்டனை தர வேண்டாமா? அதுவே குழந்தைகளுக்குச் சொர்க்கம். அதனை சிறகடித்துப் பறக்க விடுங்கள், பறக்கட்டும், சிறக்கட்டும், பரம திருப்தி அடையட்டும்.

“சுவர்கள் உடையட்டும்
சொர்க்கம் தெரியட்டும்
பறவை பறக்கட்டும் – அதைப்
பார்த்து இரசிக்கட்டும்.”

ARCHIVES