20
May
2016
தேர்வுகள் என்பது தீர்வுகளல்ல ஒரு பயிற்சிகளே. அனுதினமும் நாம் கற்றுக்கொள்ளும் அறிவின் ஆய்வுகளும், தேடல்களுமே ஆகும். இந்த மாதம் (மே) தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம். இதனால் பெற்றோர்களும், பிள்ளைகளும் ஆசிரியர்களும், நிறுவனமும் செய்யாத தவம் இருக்காது கேட்காத வரம் இருக்காது வேண்டாத தெய்வம் இருக்காது அனைவரும் நூற்றுக்கு நூறு வாங்கவேண்டும் என்பதே ஆசை. ஆனால் ஒன்று மட்டும் இன்னும் புரியவில்லை. ஒட்டு மொத்த உலகமும் மதிப்பெண்ணை மையமாக வைத்தே ஓடிக்கொண்டு இருக்கிறது. மதிப்பெண் என்ற மாயை எப்போது மனிதனை மையம் கொண்டது என்று தெரியவில்லை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகளும், அவஸ்தைகளும் சொல்லி மாளாது, மதிப்பெண் அதிகம் பெற்று கவர்ச்சியான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து பின்பு அனைவரும் மொத்தமாக இஞ்சினியர்களாக, பேராசியர்களாக, வங்கிப்பணியாளர்களாக மாறி என்ன செய்யப் போகிறோம். தேவைக்குத் தகுந்தாற்போல் தயார்ப்படுத்தப் படுவதற்கு மட்டுமே கல்வி நிறுவுனங்கள் அது வசதியான வாழ்க்கையைத் தருவதற்காக உருவாக்கப்பட்ட அட்சய பாத்திரமல்ல, அறிவைப் பெருக்கிக்கொள்ள சமுதாயத்தில் சமூகமாக வாழ, தேர்ந்து, தெளிந்து, தீர்க்கமான வாழக்கைப் பாதையை அமைத்துக்கொள்ள மட்டுமே கல்வி, கல்வி என்பது வாழ்க்கையில் சில துளிகளே கடல்களல்ல.
வாழ்க்கை மரத்தில் கிளைகளே, அதுவே மரங்களல்ல இதனை மாணவர்களுக்கும், தம்பிள்ளைகளுக்கும் புரிய வைப்போம் தேர்வுகள் முடிவுகள் வரப்போகிறது அது தீPர்ப்புகளல்ல, அது ஒரு ஆய்வுதான் அதனடிப்படையில் நம் தேடல்களைத் தொடரவேண்டும்.
இங்கிலாந்து நாட்டில் ஒரு பள்ளி தம் மாணவர்களுக்குத் தேர்ச்சி அட்டையை அவனது விலாசத்திற்கு அனுப்பும் போது உடன் ஒரு கடிதத்தையும் தம் மாணவர்களுக்கு அனுப்பியது.
அன்பு மாணவச் செல்வங்களே, இக்கடிதத்துடன் உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலான தேர்வு வாரத்தில் நீங்கள் காட்டிய அளவில்லாத அர்ப்பணிப்பும், முயற்சியும் கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
இந்தத் தேர்வுமுடிவுகள் உங்கள் தனித்தன்மையையும் சிறந்த குணத்தையும் சிறிதும் அடையாளம் காட்டாது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
உங்கள் வினாத்தாளைத் தயாரித்துவரும் இவற்றை திருத்தியவர்களும் உங்களைப்பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள.; உங்கள் ஆசிரியரோ, பெற்றோரோ உங்களை நாங்கள் அறிய முயல்கிற வகையில் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை, அறியவும் இல்லை.
நீங்கள் அற்புதமான இசைக்கலைஞன் என்றோ, பிரமிக்க வைக்கும் ஓவியன் என்றோ, நீங்கள் சிறந்த நடனமாடுவீர்கள் என்றோ, சிறந்த பேச்சாளரென்றோ, சமயோசித்த புத்தியுள்ளவரென்றோ, சிறந்த அன்பானவனென்றோ அவர்களுக்குத் தெரியாது.
உன் நண்பனுக்காக எதையும் இழக்கத் துணிந்தவன், உன் சிரிப்பு பலருக்கு மருந்து, விருந்து, நீ கவிதையோ, பாடலோ எழுவதோ, விளையாட்டில் கெட்டிக்காரனாய் இருப்தோ, உன் தம்பி, தங்கைகள், உன் அரவணைப்பில் தான் பள்ளி வந்து செல்கிறார்கள் என்பதோ அவர்களுக்குத் தெரியாது.
நீ N.C.C. N.S.S போன்ற துறைகளில் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல இடங்களுக்குச் சென்று வந்ததோ, நீ பள்ளி கலைநிகழ்ச்சிகளில் கலக்கி வருவதோ, உன்னோடு இருந்தால் நேரம் போவதே தெரியாது என்று அனைவரும் நினைப்பதோ அவர்களுக்குத் தெரியாது.
நீ நம்பிக்கைக்கு உரியவன், கருணை உள்ளவன், நன்கு சிந்திக்கக்குடியவன், பெரியோர்கள் மட்டில் மட்டில்லாத மரியாதை உள்ளவன் என்பதோ நீ ஒவ்வொரு நாளும் தன்னால் முயன்றளவு முயற்சி செய்து முன்னேறுபவன் என்பதோ அவர்களுக்குத் தெரியாது.
இந்தத் தேர்வு முடிவுகள் ஏதோ சிலவற்றைச் சொல்கின்றன ஆனால் அவை உன்னைப்பற்றி எல்லாற்றையும் சொல்லவில்லை. இந்த முடிவுகளைக் கொண்டாடுங்கள். இவற்றைப்பற்றி பெருமிதப்படுங்கள். அதே சமயம் நீங்கள் சாமர்த்திய சாலியாக இருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்களை கதாநாயகனாக்க உங்கள் நம்பிக்கையும், உங்கள் வாய்ப்புகளை நீ வெற்றிகரமாகக் கையாளும் சூழ்நிலையும்தானேதவிர இந்த தேர்வு மட்டும்தான் எண்ணிக்கொள்ளாதீர்கள் இறுதியாக தோல்விகளும், அவமானமும் பக்குவப்படுத்தத்தானே தவிர பயமுறுத்துவதற்கல்ல என்பதில் அழுத்தமான நம்பிக்கை வையுங்கள்.
இங்கிலாந்திலுள்ள ஒரு பள்ளி நிறுவனம் தம் பள்ளிக்குழந்தைகளுக்குத் தேர்வு முடிவுகளோடு இப்படி ஒரு கடிதமும் கொடுத்திருக்கிறது இதைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம்.?