02

Mar

2025

தேர்வுக்குத் தயாராவோம்…

தேர்வுக்குத் தயாராவோம் என்றவுடன் நாம் எதற்கு? தேர்வுக்குப் படிக்கின்ற மாணவர்கள்தானே! அவர்களை ஊக்குவிக்கின்ற பெற்றோர்கள் தானே! அவர்களைப் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள்தானே! என்று எண்ணிவிட்டால்? நீங்கள் சமுதாயக் கடமையைச் சரியாக ஆற்றவில்லை என்று எண்ணுகிறேன். சமுதாயக் கடமையா? அது என்ன? ஆச்சர்யமாய் கேட்பீர்கள்! இல்லை கடமையாற்ற ஆர்வமாய் இருப்பீர்கள்!

கல்வி என்பது பொதுவுடைமை என்ற தத்துவத்தைக் கரையான் அரித்ததுபோல் இன்று சுயநலத்தில் சுருண்டு கிடக்கிறது. கல்வி என்பது யோசித்துப் பாருங்கள்! அதனைப் பள்ளிக் கூடம் பாதுகாக்கின்றது. ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள். இவை மக்களின் வரிப்பணத்தால் கட்டியெழுப்பப்படுபவை. கல்வித்துறையில் உள்ள அத்தனைபேரும் அரசாங்க ஊழியர்கள் அரசிடம் ஊதியம் பெறுபவர்கள் அப்படியென்றால் கல்வி பொதுவுடைமை தானே! ஆனால் இன்று அது ஏன் தனியாரிடம் தஞ்சம் புகுந்துள்ளது?

கல்வி எப்போது சுயநலமாக மாறியது? தொடக்கத்தில் கல்வி குருகுலக் கல்வியாக இருந்தது. குரு என்பவர் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதித்து அறிந்து சமுதாயத்தின் தேவைக்கு ஏற்ப சிலரை வீரராக உருவாக்கிப் பாதுகாக்கவும் சிலரை மருத்துவராய் உருவாக்கி நோய் நீக்கவும், தூதுரைக்கும் பணிக்குச் சிலரையும், சிலரைக் குருவாகவும், சிலரைக் கவிஞராகவும் உருவாக்குவார். இதில் எந்தத் திறனும் இல்லாத மாணவர்களை உடலை வலுப்பெறச் செய்து உடல் உழைப்புப் பணிகளான, விவசாயம் செய்தல், வீடு கட்டுதல், நகரங்களைச் சுத்தம் செய்தல், ஆடை நெய்தல், ஆடைகளைச் சுத்தம் செய்தல், பிணம் எரித்தல், வியாபாரம் செய்தல் எனப் பிற பணிக்கு அனுப்பி வைப்பார். இப்படிச் செல்கிறவர்கள் சிறுவயதிலேயே தனது குடும்பத்தார் செய்த தொழிலைச் செய்து கல்வியில் நாட்டம் இல்லாமல் போனதால் காலப்போக்கில் அவை குலத்தொழிலாகப் போனது.

இச்சமயத்தில் வெளியிலிருந்து இந்தியாவிற்கு ஒரு கூட்டம் வந்தது அது ஓதுதல் ஒன்றே பிரதானத் தொழிலாகக் கருதியது. இதனால் உழைக்காமல் உண்பதற்காக ஒதுவதே உயர்ந்தது என்று சொல்லி வந்தது. அவர்களை நீங்கள் கடவுளாகப் பார்க்க வேண்டும் காணிக்கை செலுத்த வேண்டும் என்று பொய்யுரைத்து போலியாக நடித்து காலங்கழித்தது. ஆனால் இது காலப்போக்கில் கேள்வியாக எழுந்து தடைபட்டுவிடுமோ எனப் பயந்து தான் செய்வது கடவுள் பணி என்றும் மற்ற அனைவரும் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். சட்டமாகக் கொண்டு வந்தார்கள் தாங்கள் சமூகத்தைத் தவிர மற்ற சமூகம் கல்வி கற்கக் கூடாது அதற்குத் தகுதியில்லை என்று தடைவிதித்தார்கள்.

இந்த நிலை காலங்காலமாகக் கட்டிக் காத்து அடிமைச் சமூகமாகவே நமது தமிழ் சமூகம் வாழ்ந்தது பின்பு வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் பெரியார் போன்றோரின் பெரும் முயற்சியாலும் கல்வி பொதுவுடைமையாக்கப் பட்டது. பிறகு தற்காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது அனைவருக்கும் கல்வி என்று அறைக் கூவல் விடுத்து தேடிவந்து கற்றுச் சென்ற மாணவர்களைக் கடந்து இப்போது தேடிச் சென்று மாணவர்களைப் பிடித்து வந்து தாங்கி, தடுக்கி, தாலாட்டுப்பாடி, பிழை பொறுத்து, பிரியமாய் பேசி உணவு, உடை கொடுத்து கற்றுக் கொடுக்கும் கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

இந்தப் பயணத்தில் இந்தக் கல்வி எங்கோ தடம் புரண்டு இப்போது தனியார் வசம் வந்து நிற்கிறது. இலவசக் கல்வி இப்போது காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. வியாபார நோக்கோடு வந்த கல்வி ஆங்கில அரிதாரம் பூசிக் கொண்டு ஆட்டம் போடுகிறது. ஒன்றுமில்லாமல் பள்ளிக்கு வந்து அத்தனையும் பெற்றுச் சென்ற காலம்போய் இப்போது பள்ளிக்கு வரும்போதே பணப்பையுடன் வந்து மொத்தப் பள்ளியையும் குத்தகைக்கு எடுத்ததுபோல மாணவன் பள்ளிக்குள் நுழைகிறான். பின்பு படித்து முடித்தபிறகு இழந்ததைப் பிடிக்கும் சூதாட்டமாக எடுத்துக் கொண்டு தனக்குத் தனக்கு என்று தனக்கு சேகரிப்பதற்காக ஒரு தடம் போட்டுக் கொள்கிறான். பொதுநலம் புதை குழியில் போடப்பட்டு விட்டது. ஆனால் கல்வி என்பது பொதுவுடைமை என்று இப்போது உள்ள சமூகத்திற்குத் தெரியாமல் போய் விட்டது.

கல்வியை பொதுவுடைமை எனக் கருதுவோம் எல்லோரும் இணைந்து கட்டமைக்கின்ற இந்தச் சமூகத்திற்கு கல்வி ஒரு அடிக்கல்லாக இருக்கட்டும். எதிர்காலச் சமூதாயத்தைக் கட்டமைக்கும் சிற்பிகள் இன்றைய மாணவர்களே! இவர்களை உருவாக்கும் பங்கு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு இந்த மாணவர்கள் தற்போது தேர்வு எழுதப் போகின்றார்கள். யார் யார் எந்தெந்த வகையில் உதவலாம்? யோசியுங்கள்!

பேருந்து ஒட்டுநர்களே மாணவர்கள் தேர்வு எழுதப் போகிறார்கள். இப்போது நீங்கள் தான் அவர்களைச் சரியான நேரத்தில் தேர்வு மையத்தில் சேர பொறுப்பாகவும் பொறுமையாகவும் அழைத்துச் சென்று அழைத்து வாருங்கள். வியாபாரிகளே குழந்தைகள் ஏதாவது பொருள் வாங்க வந்தால் அவர்களுக்கு முதலில் கொடுத்து அனுப்பி விடுங்கள்.

சாலைகளில் வாகனங்களில் பயணிப்பவர்களே! தேர்வு முடியும் வரை குழந்தைகளைப் பயமுறுத்தாத படி உங்கள் வாகனங்களை மெதுவாக இயக்குங்கள். பேருந்துப் பயணத்தில் தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு முதலில் வழிவிடுங்கள்! ஊர்ப்பெரியவர்களே இப்போது உங்கள் கடவுள் பக்தியை ஒரங்கட்டி வையுங்கள் தேவையில்லாத சத்தங்களையும், ஆட்டங்களையும் எழுப்பி கோவில் கொடை என்ற பெயரில் கூத்தடிப்பதோ வழிபாடு என்ற பெயரில் சத்தங்களை எழுப்பியோ பிள்ளைகளின் கவனத்தைச் சிதைத்துவிடாதீர்கள்.

பெற்றோர்களே! பெரியோர்களே கொஞ்ச நாட்கள் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிடுங்கள். சீரியல்களுக்கும், சினிமாக்களுக்கும் ஒய்வு கொடுங்கள். மின்சார வாரியமே! தடையில்லா மின்சாரமும், தேவைப்படும் குடிநீரையும் கொடுத்து உதவுங்கள். அது தடை ஏற்படும்போது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடக் கூடாது.

டீக்கடை, தின்பண்டம் விற்பவர்களே, படிக்கிற குழந்தைகளுக்கு படிக்கும் நேரத்தில் இலவசமாகக் கொஞ்சம் கொடுத்து உதவுங்கள். வறுமையில் இருக்கின்ற குழந்தைகளுக்குப் பசியாற்றுவதற்காக, விருப்பமுள்ளவர்கள் உணவு கொடுத்து உபசரியுங்கள்.

குடும்பத்தில் உள்ளவர்கள் படிக்கிற குழந்தைகளிடம் பிற பணிகளை தேர்வு முடியும் வரை கொடுக்காதீர்கள். படிக்கிற குழந்தைகள் வருந்தும்படி, சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். படிக்கிற நேரத்தில் குழந்தைகளைத் தனியே விட்டு விட்டு நீங்கள் ஊர் சுற்றாதீர்கள். நமது வீட்டு விழாக்களை ஒத்திவையுங்கள். பிற விசேச விழாக்களைத் தள்ளி வையுங்கள். பிள்ளைகள் இடத்தில் கொஞ்சம் அன்பை அதிகப் படுத்துங்கள். ஒவ்வொரு நிமிடமும் அவர்களை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் உடனிருப்பு அவசியம் என உணர்ந்து செயல்படுங்கள்.

குழந்தை படிப்பதற்கு ஏற்ப அத்தனை வசதிகளையும் உடனிருந்து கவனியுங்கள். அவர்கள் மனம் சோர்வடையாதபடி ஒவ்வொரு நிமிடமும் நம்பிக்கையை விதையுங்கள். மகிழ்ச்சியாக எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் விழித்திருந்து கடமையாற்றுங்கள். நமக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய அத்தனை வல்லுநர்களும் இவர்களிடம் இருந்துதான் நமக்கு வரப்போகிறார்கள். எனவே இவர்களை வளர்த்தெடுப்போம். தன்னைத் தகுதியாக்க அவர்கள் தேர்வு எழுதப் போகிறார்கள் வாருங்கள் நாமும் அவர்களுக்கு உதவ தேர்வுக்குத் தயாராவோம்!

“படிப்போம்…
படிக்கட்டாவோம்
பலரை உயர்த்துவதற்கு
பக்க பலமாய் இருப்போம்!..”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES